வியாழன், 4 அக்டோபர், 2012

பொழுதுபோக்குப் பூங்காக்களில் தொடரும் உயிர்ப்பலி - Death continue in amusement park



பொழுதுபோக்கு பூங்காக்களில்,உபகரணங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாததும், பூங்காக்களின் செயல்பாடுகளை அரசு முறையாக கண்காணிக்காததுமே விபத்துக்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி., பொழுதுபோக்கு பூங்காவில், நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த அபியா மேக், 25 என்ற விமான பணிப்பெண், ஆக்டோபஸ் ராட்டினத்தில் சுற்றிய போது, தவறி விழுந்து இறந்தார். இதே பூங்காவில் கடந்த ஆறு மாதங்களில் தற்போது நடந்தது மூன்றாவது விபத்து. கடந்த ஏப்ரல் மாதம் சின்மயா நகரைச் சேர்ந்த ரிச்சாஷா என்ற இளம்பெண், ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த மாதம் 23ம் தேதி சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரின்ஸ் என்ற 16 வயது சிறுவன் சறுக்கி விளையாடிய போது, தவறி விழுந்தார். இதில், காயம் ஏதுமின்றி தப்பினார்.
எச்சரித்தும் அலட்சியம்:


இந்த விபத்துக்கள் நடந்த போதே போலீசார் பூங்கா நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். உரிய கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தினர். ஆனால், நிர்வாகம் அலட்சியமாக இருந்ததால் இளம்பெண் விபத்தில் சிக்கி, உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்தது எப்படி?


பூங்கா மையப்பகுதியில் உள்ள ஆக்டோபஸ் ராட்டினம் தனித்தனி பெட்டிகளை கொண்டது. இதில், ஒரு பெட்டியில், ஒருவர் மட்டுமே அமரலாம். பெட்டிக்குள் அமர்ந்து கொண்டவர்களுக்கு சூசீட் பெல்ட்' கிடையாது. பெட்டியில் அமர்ந்த பிறகு, ஒரு இரும்பு கம்பி
மட்டும் தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பிக்கு கீழே அதிகமான இடைவெளி உள்ளது. இதன் வழியாக பருமனான உடல் கொண்டவர்கள் கூட விழ வாய்ப்பு உள்ளது. அபியா மேக் உட்பட ராட்டினத்தில் அனைவரும் ஏறிய பின், ராட்டிணம் சுற்ற துவங்கியுள்ளது. அனைவரும் சரியான நிலையில் அமர்ந்துள்ளனரா, தடுப்பு கம்பியை சரியாக பொருத்தியுள்ளனரா என்று ஆபரேட்டர் கவனிக்கவில்லை.ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதிர்வின் போது தான் அபியா மேக், தனது பெட்டியில் இருந்து சரிந்து கீழே விழுந்துள்ளார். தரையில் விழுந்தவர், உடனடியாக சுதாரித்துக் கொண்டு மேல் நோக்கி எழுந்தார். அப்போது சுற்றிக் கொண்டிருந்த ஒரு பெட்டி பயங்கர வேகத்தில் தலையில் மோதியது. இதில், ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார்.
அதிகரிக்கும்விபத்துக்கள்:


சென்னையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்களில் அவ்வப்போது இதுபோன்ற விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பொழுதுபோக்கு பூங்காக்கள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு குறித்து எந்த விதிமுறைகளும் தெளிவாக இல்லை.
அதிகாரிகள் தட்டிகழிப்பு:


விபத்து நடந்தால் மட்டுமே இதுபோன்ற பூங்காக்களுக்குள் போலீசார் வருகின்றனர். பூங்காவில் உபகரணங்கள் பொருத்தும் போது, அது சரியாக இருக்கிறதா என்று பொதுப்பணித்துறை ஆய்வு செய்கிறது. அத்துடன் அவர்கள் பணியும் முடிந்துவிட்டது என்கின்றனர். அரசு துறையின் எந்த கண்காணிப்பும் இல்லாததால், உரிய பராமரிப்பு பணிகளை செய்யாமல், அப்பாவி மக்கள் பொழுதுபோக்கு பூங்காக்களில் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.
Advertisement
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அதிகம். இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து தான் இங்குள்ள பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் இந்த உபகரணங்களை இயக்குவது; பராமரிப்பது போன்ற விஷயங்களில் நுணுக்கமாக செயல்படுவர். அதற்காக அங்குள்ள பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படும். ஆனால், இங்குள்ள பொழுதுபோக்கு பூங்காக்களில் 10ம் வகுப்பு கூட படிக்காதவர்கள், உபகரணங்களை இயக்கும் பணியில் அமர்த்துகின்றனர். தொழில்நுட்பமாக எந்த விஷயமும் அவர்களுக்கு தெரிவதில்லை. அதுமட்டுமல்லாமல், அரசும் பொழுதுபோக்கு பூங்காக்களில் குறிப்பிட்ட மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்வது, தொடர்ந்து கண்காணிப்பது கிடையாது. இதனால் தான் சென்னையில் உள்ள பெரும்பாலான பொழுதுபோக்கு பூங்காக்கள் அலட்சியமாக செயல்படுகின்றன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். உயிர்பலி ஏற்படுத்தும் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க அரசு உடனடியாக பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
இதுவரை நடந்த விபத்துக்கள்


* தாம்பரம் கிஷ்கிந்தா பூங்காவில் சிறுமி, நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார்.
*
எம்.ஜி.எம்., பூங்காவில் விளையாட்டு உபகரணத்தில் சிக்கி பணியாளர் இறந்தார்.
*
சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார்.
*
குயின்ஸ் லேண்ட் பூங்காவில் நீரில் மூழ்கி இரண்டு பேர் இறந்தனர்.
*
பெண் பணியாளர் ஒருவர் விளையாட்டு உபகரணத்தில் சிக்கி இறந்தார்.
 - தினமலர் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக