சனி, 6 அக்டோபர், 2012

வறட்சியை அடையாளம் காட்டுவதில் சொதப்பல்


தஞ்சாவூரில் மாவட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, மத்திய குழுவினரை, அழைத்து செல்வதில், மாவட்ட அதிகாரிகள் கோட்டை விட்டதால், தமிழகத்திற்கு உரிய நியாயம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான காவிரி நதிநீர் தேவை குறித்து, மத்திய குழுவினர் நேற்று ஆய்வுப்பணியை துவக்கினர்.
விருந்தில் கவனம்:


ஆய்வு பணிகள் விரிவாகவும் நடக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், நேற்றைய ஆய்வு பணி விமரிசையாக மட்டுமே நடந்தது. முதலில், மத்திய குழுவினர் கல்லணை சென்று, அங்கு மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி நீர் அளவை ஆய்வு செய்வார்கள் என, தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து படை, பரிவாரங்களுடன் அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டனர். அங்குவந்த மத்திய குழுவினருக்கு, மாவட்ட அதிகாரிகள் தரப்பில், சந்தனமாலை அணிவித்து மரியாதை வழங்கப் பட்டது. இதை தொடர்ந்து, தடபுடல் விருந்து வைபம் துவங்கியது.
தஞ்சாவூரில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் இருந்து வரவழைக்கப் பட்ட "வெஜிடபிள் பிரைட் ரைஸ்', "கடாய் சிக்கன்', சப்பாத்தி, "பன்னீர் பட்டர் மசாலா', காவிரி ஆற்று கட்லா மீன் வறுவல், சாதம், மீன் குழம்பு, சாம்பார், ரசம், தயிர், சேமியா பால் பாயாசம் உள்ளிட்ட உணவு வகைகள் விருந்தில் இடம்பெற்றன. பத்திரிகையாளர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு வடை, பாயசம் உள்ளிட்ட சைவ விருந்துடன், மீன் வறுவல் கூடுதலாக வழங்கப் பட்டது. இதை முடித்த பின், மத்திய குழுவினர், அங்கு ஆய்வு ஏதும் செய்யாமல், சாப்பிட்டு முடித்த கையுடன், கடம்பன்குடி, பூதலூர், கள்ளப்பெரம்பூர், உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். மாலை 6.45 மணியளவில் ஆய்வை முடித்துக்கொண்டு தஞ்சாவூரில் ஓய்வெடுத்தனர். இன்று தஞ்சாவூரில் இரண்டு இடங்களை மட்டுமே ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ள மத்திய குழுவினர், அதை தொடர்ந்து, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள செல்லவுள்ளனர்.
கோட்டைவிட்ட அதிகாரிகள்:


தஞ்சாவூரில் மத்திய குழுவினர்
நேற்று ஆய்வு செய்த கிராமங்கள் அனைத்தும் கல்லணையை ஒட்டிய பகுதிகள். இந்த பகுதிகளில் நிலத்தடி நீராதாரம், இருப்பதால், அதை பயன்படுத்தி, நெற்பயிருக்கு மாற்றாக, வாழை, சோளம், கம்பு உள்ளிட்டவை பயிரிடப் பட்டு உள்ளன. ஆனால், தஞ்சாவூரில், காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கால்வாய்கள் செல்லும் பல பகுதிகளில், தண்ணீரின்றி, பல ஏக்கர் நிலங்கள் வறண்டு கிடக்கின்றன. மத்திய குழுவினரை, அங்கு அழைத்து சென்றிருந்தால், மக்களை சந்தித்தும், அப்பகுதிகளை பார்வையிட்டும், அவர்கள் வறட்சி நிலையை அறிந்துக்கொள்ள வசதியாக இருந்திருக்கும். சரியான திட்டமிடல் இல்லாததால், மத்திய குழுவினர் அங்கு அழைத்து செல்லப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களின் உண்மையான வறட்சி நிலையையும், நீர் தேவையையும் மத்திய குழுவினர் அறிந்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இன்றும் ஆய்வுப்பணி மூன்று மாவட்டங்களில் தொடரவுள்ளதால், இனியாவது தமிழக அதிகாரிகள் கவனத்துடன் செயல்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்து உள்ளது.
-
தினமலர் செ ய்தியாளர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக