திங்கள், 1 அக்டோபர், 2012

"கடி வாங்காமல்இருப்பது எப்படி?'

சொல்கிறார்கள்

"கடி வாங்காமல்இருப்பது எப்படி?'


பல் மருத்துவர் கோபாலகிருஷ்ணன்: எப்போதாவது, நாக்கு மற்றும் உள் கன்னத்தில், பற்களால் கடித்துக் கொள்வது சகஜம். ஆனால், அடிக்கடி கடித்துக் கொண்டால், உடனே பல் மருத்துவரை அணுகி, பல்சீரமைப்புக் குறித்து, ஆலோசனை பெறுவது அவசியம்.இதற்கு, முக்கிய காரணம், இயல்பிலேயே பல் வரிசை சீராக இல்லாதிருப்பது தான். பார்ப்பதற்கு, அழகான தெத்துப்பல்லாக இருப்பது, நாக்கை பதம் பார்த்து விடும்.பொதுவாக, உணவை அரைக்கும் வகையில், மேல் பல் வரிசைக்கு இணக்கமாக, கீழ் வரிசைப் பற்கள், உடன்பட்டு செயல்பட வேண்டும். இந்த ஒத்திசைவில் தகராறு இருந்தால், நாக்கை, பல் பதம் பார்த்து விடும்.இதைத் தவிர்க்க, "கிளிப்' பொருத்திக் கொள்ளலாம். 30 வயதிற்கு மேல்,"கிளிப்'புகள் முழுமையான பலனைத் தருவதில்லை என்பதால், இளம் வயதிலேயே, "கிளிப்' அணிந்து, பல்வரிசையை சீராக்கிக் கொள்வது நல்லது.இரண்டாவது காரணம், இயல்பிலேயே, பற்கள் கூர்மையாக காணப்படுவது. இவற்றை சரியாககவனிக்காமல் விட்டு விட்டால், வாய்க்குள் அதிகளவில் புண்களை ஏற்படுத்தும்.இப்படி இருப்பவர்கள், சாப்பிடும் போது மட்டுமல்லாமல், பேசும் போதும், சில சமயம் தூக்கத்திலும், பற்களால் வாய்க்குள் காயங்களை ஏற்படுத்திக் கொள்வர். இதை தவிர்க்க, கூர்மையான பற்களை கண்டறிந்து, அவற்றை, சிகிச்சை மூலம், சற்றே மழுங்கடித்தால் போதும்.சிகிச்சை தவிர்த்து, பொதுவான சிலகவனிப்புகளும், இந்த சுய கடி அவஸ்தைகளை தவிர்க்க உதவும். "டிவி' பார்த்தபடி,புத்தகம் படித்தபடி, ஏதேனும் விவாதத்தில் இருந்தபடி சாப்பிடு வதை, கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவசர அவசரமாக உணவருந்துதல், அதன் நோக்கத்தை பாழடிப்பதுடன், கடி வாங்கவும் வழி ஏற்படுத்தும்.இந்த புண்கள் உடனே ஆறாது இருந்தாலோ, புண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலோ, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, தீர்வு காண வேண்டும். நீடித்த புண்கள், வேறு பல தொற்றுகளுக்கு இலக்காகி, அவஸ்தையை அதிகமாக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக