சனி, 6 அக்டோபர், 2012

பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ.இறையன்பு

பாடத்தை த் தாண்டிப் பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ.இறையன்பு அறிவுரை

First Published : 05 September 2012 10:37 AM IST
ஈரோடு பாடப் புத்தகத்தை தாண்டி பிற புத்தகங்களையும் கல்லூரி மாணவ, மாணவிகள் படிக்க வேண்டுமென, தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு பேசினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சியில், மாணவர்களும், சமுதாயமும் என்ற தலைப்பில் அவர் பேசியது:
மாணவர்கள் என்றால் வாசிப்பவர் என்று பொருள். எனவே, மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை எப்போதும் மேற்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இயற்கையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி நடக்க வேண்டும்.
மனித வாழ்க்கைக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்த அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. ஒவ்வொரு மணித்துளிகளையும் புத்தகங்களை வாசித்தல், நண்பர்களுடன் கலந்துரையாடுதல் எனப் பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும்.  அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 90 சதவீத நோய்களுக்குத் தீர்வுகாணக்கூடிய நிலை உள்ளது. நிலநடுக்கம், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை கண்டறியக்கூடிய தொழில்நுட்பங்கள் இப்போது உள்ளன.
படித்துப் பட்டம் பெற்று, திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு வசதியாக வாழவேண்டும் என்பதற்காக மட்டுமே படிக்கக்கூடாது. சமுதாயத்தில் இருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். அந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது திருப்பிச் செய்வது குறித்து சிந்திக்க வேண்டும்.
சுயநலத்தைக் கைவிட்டு சமுதாயத்துக்காக உழைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தன்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள், பொதுமக்கள், மரம், செடி, கொடி, விலங்குகள் உள்ளிட்டவற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும். கற்றல் என்பது தொடர் நிகழ்வு. பாடப் புத்தகத்தை மட்டுமே படிப்பதால் பயனில்லை. கற்பதற்கு எல்லை இல்லையென சாதனையாளர்கள் எண்ணுகின்றனர். நூலகத்துக்குச் செல்லும்போதுதான் சாதனையாளராக மாற முடியும். பள்ளிப்படிப்புக்கும், கல்லூரிப் படிப்புக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன.
பள்ளிப் பருவத்தை சந்தோஷமாக கழிக்க வேண்டும். ஆனால், கல்லூரிப் பருவத்தை மிக கவனமுடன் கையாள வேண்டும். பாடப் புத்தகத்தை மட்டுமே படிக்கக் கூடாது. அதையும் தாண்டி பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஒவ்வொரு மணித்துளிகளையும் பயன்படுத்த வேண்டும். வித்தியாசமாக சிந்தித்து கருத்துகளைச் சொல்லும் நபர்களை சமுதாயம் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. மார்க்ஸ், அமெரிக்க சிந்தனையாளர் இங்கர்சால், குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்ற கொள்கையை உருவாக்கிய டார்வின் உள்ளிட்டோரை சமுதாயம் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. வாய்ப்புக் கிடைக்குமென மாணவர்கள் காத்திருக்கக் கூடாது; வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.

கருத்து : தமிழில் மாணாக்கர் என்பது மாண்பினை ஆக்குபவர்கள் எனப் பொருள் படும்.  கற்பவர்களை க் குறிக்கப்பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில்  student என்பது படிப்பவர் என்னும் பொருளில் வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக