புதன், 3 அக்டோபர், 2012

தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவுகிறது தினமணி

தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவுகிறது தினமணி

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாளேடுகள் உதவ முடியும் என்பதற்கு உதாரணமாக தினமணி திகழ்வதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார்.
நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு முதன்மை விருது, பொற்கிழியை வழங்கி அவர் பேசியது:
சுப்பிரமணிய பாரதி கையிருப்பு ஏதும் இல்லாமல் சிரமங்களுடன் எப்படி வாழ்ந்தார் என்பதை அரவிந்தர் சுட்டிக்காட்டியுள்ளார். அதைப் போலவே நாமக்கல்லில் கு.சின்னப்பபாரதி வாழ்ந்து வருகிறார்.
ஆனால், பாரதியின் பெயர் கொண்டுள்ள இந்த அறக்கட்டளை சார்பில், தமிழகத்தில் இவ்வளவு அதிகமான தொகை இலக்கியப் பரிசாக வழங்கப்படுவதை எண்ணி தமிழர்கள் பெருமைப்பட வேண்டும்.
நாளேடுகளை செய்திகளையும், விமர்சனங்களையும் முன்வைக்கும் ஒரு கருவியாக மட்டுமே கருதி வந்த நிலையில், ஒரு நாளேட்டை இலக்கியத் தரம் மிக்கதாகவும், அதன் மூலம் மொழி வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் நடத்த முடியும் என்பதற்கு தினமணி உதாரணமாகத் திகழ்கிறது. எந்தச் சொல் ஒருவரை ஒரு கணம் சிந்திக்க வைக்கிறதோ அதை மயங்கொலிச் சொல் என்று கூறுவர். தமிழர்களிடையே வழக்கத்தில் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் மயங்கொலிச் சொல்களை இன்றும் தினமணி பயன்படுத்தி வருகிறது.
உலகம் தட்டையானது என்று மேலை நாட்டினர் கருதிக் கொண்டிருந்த 8ஆம் நூற்றாண்டில் கம்பன், பூமிப் பந்தை ககனமுட்டை என்று கூறியுள்ளார். மிராஜ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கானல் நீரை காட்சிப் பிழை என்றும், தோற்ற மயக்கம் என்றும் புதிய தமிழ்ச் சொல்லில் பாரதியார் குறிப்பிட்டார்.
இவ்வாறு தமிழில் நாள்தோறும் புதிய சொல்களை உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் மொழி மேற்கொண்டு வளராமல் போய்விடும். ஆங்கிலம் இன்று உலகின் பல்வேறு நாடுகளில் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. அதைப் போல தமிழையும் வளர்க்க நாம் முன்வர வேண்டும்.
தமிழ் எத்தகையது, தமிழரின் வரலாறு எத்தகையது என்று பழங்கதைகள் பேசிடாமல் இன்றைய காலச் சூழல் எத்தகையது, இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தால் மட்டுமே தமிழை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்றார் ராமசுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக