சனி, 6 அக்டோபர், 2012

மலிவு விலையில் மரணம்! சாணித்தூள் விற்பனை மிகுதி: கட்டுப்படுத்த களமிறங்கியது காவல்துறை Aramine powder used for suicide

மலிவு விலையில் மரணம்! சாணித்தூள் விற்பனை மிகுதி: கட்டுப்படுத்த களமிறங்கியது காவல்துறை
 
தினமலர்
கோவை: கோவையில், சாணிப்பவுடர் கலந்து குடித்து, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதால், சாணிப்பவுடர் விற்பனையை கட்டுப்படுத்த, போலீசார் களமிறங்கியுள்ளனர்.

குடும்பப் பிரச்னை, கடன் தொல்லை, தொழிலில் நஷ்டம் போன்ற காரணங்களால், தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருந்துக் கடைகளில், தூக்க மாத்திரை வாங்குவதற்கு, டாக்டரின் பரிந்துரை தேவை. பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், மளிகைக் கடைகளில் மலிவு விலையில் கிடைக்கும், சாணிப்பவுடர் விற்பனைக்கு, எந்த தடையும் இல்லை. மும்பையில் இருந்து கொண்டு வரப்படும் சாணிப்பவுடர், சிறு பாக்கெட்டுகளாக மாற்றி விற்கப்படுகிறது. ஒரு கிலோ, 200 ரூபாய்க்கு வாங்குகின்றனர். கடைகளில் 10 கிராம் பாக்கெட், ஐந்து ரூபாய்க்கு விற்கின்றனர்.

போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கூறுகையில், ""கோவையில், மளிகைக் கடைகளில், சாணிப்பவுடர் விற்பனையை, கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார். கலெக்டர் கருணாகரன் கூறுகையில், ""இந்த பிரச்னை குறித்து,போலீஸ் துறையில் இருந்து கடிதம் வந்துள்ளது. சாணிப்பவுடர் விற்க, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விற்றால், உள்ளாட்சி அமைப்பிலுள்ள, சுகாதாரப் பிரிவினர் சோதனை நடத்தி, கட்டுப்படுத்த வேண்டும். இதுபற்றி துறை ரீதியாக உத்தரவிடப்படும்,'' என்றார்.

ஆபத்து அதிகம்! கோவை அரசு மருத்துவமனை, சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ஜெயசிங் கூறியதாவது: சாணிப்பவுடர் "ஆரமின்' என்ற நச்சுப்பொருளால் தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் நிறம் கொடுக்கக்கூடிய, இந்த பவுடரை, கையால் தொட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், தண்ணீரில் கலந்து குடித்தால், உடனடியாக உடல் நீர்ச்சத்தில் கலந்து விடும். "ஆரமின்' நச்சுப்பொருளால் உடல் நீர்ச்சத்து பாதிக்கும். அதன்பின், மூளை, தண்டுவடம், இருதயம் போன்றவை பாதிக்கப்படுகிறது. சாணிப்பவுடர் உட்கொள்ளும் அளவு அதிகரித்தாலும், உடல் எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டாலும், உடனடி மரணம் ஏற்படுகிறது. விஷத்தன்மை வாய்ந்த சாணிப்பவுடர் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும், என்றார்.

நடவடிக்கை தொடருமா? போலீஸ் கமிஷனர் உத்தரவை தொடர்ந்து, சாணிப்பவுடர் விற்போரை போலீசார் கைது செய்தனர். கோவையில், சாணிப்பவுடர் விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்து, 120 பாக்கெட்டை பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக