திங்கள், 1 அக்டோபர், 2012

பட்டறிவுகளின் கருவூலம் - இன்று உலக முதியோர் நாள்

பட்டறிவுகளின் கருவூலம் - இன்று உலக முதியோர் நாள்
சுருங்கிய தோல்கள், மங்கிய கண்கள், நரைத்த முடி ஆகியவற்றுடன் அனைவரது குடும்பத்திலும் இருக்கின்றனர் முதியோர். வாழ்க்கைப் பயணத்தில் இவர்கள் பெற்ற குழந்தைகளுக்காக உழைத்து, முதிர்ந்த வயதில் தள்ளாடி நிற்கின்றனர். இவர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தை மறக்காமல், அவர்களிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் அக்., 1ம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில், தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும் முதியோரை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இடங்களில், முதியோரின் நிலை பரிதாபமாக உள்ளது. பெற்ற பிள்ளைகள் இருந்தும், 60 வயதைத் தாண்டிய பின்னரும், ஓய்வெடுக்க முடியால், பசிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் நிறைய முதியோரை நாம் பார்க்க முடிகிறது. இவர்களின் அனுபவங்களை, பொக்கிஷமாக கருத வேண்டும்.

மூன்றில் ஒருவர்:உலக மக்கள்தொகையில் 10ல் ஒருவர் 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். இது, 2050ல் ஐந்தில் ஒருவராகவும், 2150ல் மூன்றில் ஒருவராகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மனதால் குழந்தைகள்:

முதியோரும், குழந்தையும் மனதால் ஒன்று எனக் கூறுவர். ஞாபக மறதி காரணமாக, நம்மிடம் கேட்டவற்றையே திரும்ப திரும்ப கேட்பர். இதற்கு அவர்களிடம் கோபம் காட்டாமல், பரிவுடன் உதவ வேண்டும். முதியோரை இதுநாள் வரை, கவனிக்க மறந்து விட்டாலும், இத்தினத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அவர்களிடம் அன்பு செலுத்த முன் வரவேண்டும். நாமும் நாளை முதியோர் ஆவோம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.


ஏன் இந்த நிலை:
பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும், நமது நாட்டில் நடக்கிறது. இவ்வாறு முதியோரை கவனிக்க மறுத்தவர்கள், அவர்களை திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வர முயற்சி எடுங்கள். முதியோரின் ஆசி இருப்பின், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக