ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

குரலெல்லாம்... குறள்

குரலெல்லாம்... குறள்: 7 ஆம் வகுப்பு மாணவன் அசத்தல்
தினமலர்

ஆத்மார்த்தமான வாழ்வை இரண்டடியில் சொல்லிய வித்தகனே திருவள்ளுவர். இவர், உலகுக்கு அளித்த நெறிமுறைகளை பின்பற்றுவோர், வாழ்வில் சோடை போவதில்லை. உலகமே மெச்சும் மனிதராகவும், சக மனிதர்களிடமிருந்து தனித்துவ மிக்கவர்களாகவும் உள்ளனர்.

இவ்வரிசையில், நெற்றியில் பளிச்சிடும் விபூதியும், சாந்தமான புன்னகை, அமைதி தவழும் முகம் என முகவரி கொண்ட அரிகிருஷட்டிணனும் இடம் பிடித்துள்ளார். வள்ளுவர் எழுதிய 1330 திருக்குறளையும், தடங்கலின்றி சொல்லி கேட்போரை த் திக்கு முக்காட செய்கிறார். மனத்தின் ஏட்டில் பதித்து விட்டு, யார் எம்முனையில் இருந்து கேட்டாலும், கேட்போரை குறள் மழையால் நனைய வைக்கிறார்.இவர், அவிநாசி அருகே தெக்கலூர் - வெள்ளாண்டிபாளையத்தை சேர்ந்தவர். அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். பாடப்புத்தகம், திருக்குறளின் மீது அதீத நாட்டத்தை செலுத்தி வருகிறார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே, திருக்குறள் ஒப்புவித்தலில் உள்ள திறமையை உணர்ந்து, துவக்கப்பள்ளி ஆசிரியைகளும், பெற்றோரும் ஊக்குவித்துள்ளனர். இன்று 1,330 குறள்களையும் சரசரவென சொல்லும்மளவுக்கு, திருக்குறளை தன்வசப்படுத்தியுள்ளார்.

ஹரியின் பெற்றோர்களான சண்முகசுந்தரம், ரேணுகா தேவி இருவரும் விசைத்தறி கூடம் நடத்தி வருகின்றனர். "ச்சடக்.. ச்சடக்...' என்றே தறியின் சத்தத்தையே கேட்டுப்பழகிய அவர்களுக்கு, மகன் கூறும் குறள், காதோரம் தித்திப்பை ஏற்படுத்துகின்றன. டிவி, நண்பர்களுடன் வீண் அரட்டை மற்றும் விளையாட்டுகளில் சிக்கவில்லை. அமுத தமிழின் மீதே முழு ஆர்வத்தையும் செலுத்தி வருகிறார்.

திருக்குறள் மீதான ஆர்வம் குறித்து, ஹரி கிருஷ்ணனிடம் பேசியதிலிருந்து...: ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே, 50 குறள்களை கடகடவென ஒப்புவித்தேன். ஆசிரியர்களும், அப்பா, அம்மாவும் பாராட்டினர். அதற்குப்பின் வந்த விடுமுறை நாட்களில் மற்ற குறள்களை படிக்க ஆரம்பித்தேன். முதலில் கஷ்டமாக இருந்த குறள், போகப்போக இஷ்டமானது. பல மேடைகளில் பரிசு வாங்கினாலும், நான் படிக்கும் பள்ளியில் 1,330 குறள்களையும் சொல்லி பாராட்டு வாங்கியதை என்னால் மறக்க முடியாது. தற்போது திருக்குறள் தெளிவுரை படித்து வருகிறேன். இந்தாண்டு முடிவில், குறளுடன் தெளிவுரையும் கூறுவேன். எண், ஆரம்ப மற்றும் இறுதி வார்த்தை, உதடு ஒட்டி, ஒட்டமாமல் வரும் குறள் என எம்முனையில் கேட்டாலும் சொல்வேன்.எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்."எண்ணத்தை அடைகாத்து வெற்றி காணும் மன உறுதி வாய்க்கப் பெற்றோர், நினைத்ததை நினைத்தபடியே அடைவர்,' என்ற பொருள்படும் என்ற 666வது குறள்தான் அப்துல்கலாமுக்கு பிடிக்குமாம்; அதே குறள் தனக்கும் ரொம்பவே இஷ்டம்', என திருக்குறள் போல சுருக்கமாக முடித்து கொண்டார். ஹரி... திருக்குறளில் சொல்வதெல்லாம் சரி தான்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக