ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

விலை நிலங்களாக மாறும் விளைநிலங்கள்: இங்கும் வருமா கேரளாவை ப் போன்ற தடை..

விலை நிலங்களாக மாறும் விளைநிலங்கள்: இங்கும் வருமா கேரளாவை ப் போன்ற தடை..

உழவன் கணக்குப்பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது' என்பது நிதர்சனமான உண்மை. விவசாயத்தில் கடந்த பல ஆண்டுகளாக, லாபம் என்பதே இல்லாத நிலை உள்ளது. நிலம் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும், அவரது உழைப்பிற்கு மட்டுமே ஊதியமாக லாபம் கிடைத்து வந்தது.

உரம், பூச்சிமருந்துகளின் கடுமையான விலை உயர்வு, விலை பொருட்களுக்கு சரியான விலையில்லாதது, போன்ற காரணங்களால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். வாங்கிய கடன்களை அடைப்பதற்காகவும், வேறு தொழில்களுக்கு செல்வதற்காகவும், விவசாய நிலங்களை விற்க நேரிடுகிறது. ரியல் எஸ்டேட் செய்பவர்களும், நிலத்தின் மதிப்பை விட, பலமடங்கு அதிக விலை கொடுப்பதால், அதை வங்கியில் போட்டு, வட்டியை கொண்டு வாழக்கையை ஓட்ட துவங்கி உள்ளனர் விவசாயிகள் பலர். இதே நிலை நீடித்தால், இனிவரும் காலங்களில், ஏழ்மை மற்றும் நடுத்தர மக்களுக்கு, அரிசி என்பதே எட்டாக்கனியாகி விடும். வரும் சந்ததியினருக்கு, அரிசி என்றாலே என்ன என, கேட்கும் நிலை உருவாகலாம். அண்டை மாநிலமான கேரளாவில், விளைநிலங்களை குடியிருப்புகளாக மாற்ற தடை உள்ளது. அதே தடையை இங்கும் செயல்படுத்தினால், இருக்கும் விளை நிலங்களையாவது காப்பாற்ற செய்யலாம்.
பாதியாக குறைந்த நெல் உற்பத்தி:

விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகவும்,10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறி உள்ளன. கடந்த பத்தாண்டுகளுக்கு முன், 7 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, 1.50 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது 5 ஆயிரம் ஏக்கராக குறைந்து, உற்பத்தியும் 70 ஆயிரம் டன்னாக உள்ளது.

கலெக்டர் ஹரிகரன்: அரசு விதி முறைகளுக்கு மாறாக, விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைக்கே ஆட்கள் இல்லை :

வி.ராதாகிருஷ்ணன் (அருப்புக்கோட்டை): மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய நிலங்கள், மானாவாரி நிலங்களாக தான் உள்ளன. பருவ மழை பெய்யும் போது நடக்கும் விவசாயம், மழை பொய்த்த பின் கேள்வி குறியாகிவிடுகிறது. விவசாய பணிகள் செய்ய ஆட்களும் வருவது இல்லை. இதனால், நிலங்கள் தரிசாக உள்ளன. வாழ்ந்து ஆக வேண்டிய கட்டாயத்தில், விவசாயிகள் தங்களது விளை நிலங்களை, பிளாட்டுகளாக விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான விளைநிலங்கள் தற்போது, தொழிற்சாலைகளாகவும், அடுக்கு மாடி வீடுகளாக மாறி விட்டன. இது தொடர்பாக அரசு, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கூலி வேலைக்குச்செல்லும் விவசாயிகள்


கருப்பையா (காரியாபட்டி):
சரிவர மழை இல்லாததால், விளை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி உள்ளன. விவசாயிகளோ கூலி வேலை செய்து, பிழைப்பு நடத்துகின்றனர். தரிசு நிலங்களை சிலர் அபகரிப்பு செய்வதால், கேட்ட விலைக்கு விற்பனை செய்து, வெளியூர்களில் குடியேறுகின்றனர். நில புரோக்கர்களோ, தரிசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, "பிளாட்'களாக மாற்றி, அதிக விலைக்கு விற்பனை செய்து, கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். விளை நிலங்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் மீது, கடுமையான சட்டம் மூலம் தண்டிக்கப்பட்டாலே, இவற்றை தடுக்க முடியும்.

எந்த திட்டமும் இல்லை


குருசாமி (விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர், ஸ்ரீவில்லிபுத்தூர்):
விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றம் செய்யப்படுவதால், உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு, பட்டினி ஏற்படும் நிலை உள்ளது. அரசானது, உணவு உற்பத்தியை, மூன்று மடங்கு அதிகரிக்கப்படும், என, தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான எந்த திட்டமும் இது வரை இல்லை. விவசாய பயன்பாட்டு நிலங்களை, மற்ற பயன்பாட்டுக்காக விற்பனை செய்வதை தடை செய்ய, அரசு முன் வர வேண்டும்.

புற்றீசல் போல்...

ராமச்சந்திர ராஜா (தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்): விளைநிலங்கள், புற்றீசல் போல குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் உணவு தானியங்களின் விலை, கட்டுக்கடாங்காமல் உயரும். கரும்பு, மக்கா சோளம், பருப்பு தனியாக வகைகள் பயிரிடும் பரப்பு, உற்பத்தி குறைந்து போனது. இதை தடுக்க, விளை நிலங்களை விற்பதற்க தடை விதிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவை உரிய விலை

கந்தசாமி(வத்திராயிருப்பு): விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க, அரசு நடவடிக்கை எடுத்தாலே போதும், சோறுபோடும் விளைநிலத்தை எந்த விவசாயியும் விற்க மாட்டான். எத்தனை நாள்தான், வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்வது, என்ற விரக்தியில், விளைநிலங்களை விற்க முன் வருகிறார்கள்.

அரசு சலுகைகள் இல்லை

காதர் மைதீன் (தளவாய்புரம்): விளைய வைக்கும் செலவுக்கு கூட, உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடிவதில்லை. பல விவசாயிகள் தங்கள் நகையை அடகு வைத்து, வட்டிக்கு கடன் வாங்கி பயிர் செய்கிறார்கள்.அதற்கான வருமானம் இல்லாததால், நிலத்தை விற்கின்றனர். இது போன்ற நிலையை தவிர்க்க, உண்மையான விவசாயிகளுக்கு சலுகைகள் பல வழங்கி, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

உணவு தட்டுப்பாடு ஏற்படும்



முத்துப்பாண்டி (நரிக்குடி):
விவசாயிகளின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களின் நிலங்களை "அடிமாட்டு' விலைக்கு வாங்கி சிலர், கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். நிலத்தை இழந்த விவசாயிகள், இருந்த நிலமும் போச்சே என, இருக்க கூட இடமின்றி, வெளியூருக்கு பிழைப்பு தேடி சென்று விட்டனர். விளை நிலங்கள் அனைத்தும், வீடுகளாக மாறி வரும் இந்நிலை நீடித்தால், உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவது நிச்சயம்.

கிராமங்களை நாடும் நகரத்தார்


டி.சி.பார்த்திபன்(சாத்தூர்):
நாகரீக வளர்ச்சி காரணமாக, நகர்புறங்களில் வசிக்கும் பலர், சொந்த வீடுகள் கட்ட, கிராமங்களையே நாடுகின்றனர். இதன் காரணமாக, விவசாயிகள் பலரும், விளைச்சல் இன்றி உள்ள நிலங்களை விற்கின்றனர். இதில் பிளாட் போடுபவர் களோ, ஊரக வளர்ச்சி துறை அனுமதி பெறாததால், வாங்குவோர், சாலை, தெருவிளக்கு, வாறுகால், குடிநீர்,கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

கே.செல்வகுமார் (ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஸ்ரீவில்லிபுத்தூர்):

வானம் பார்த்த பூமியாக உள்ள நிலங்களை தான், குடியிருப்பு மனைகளாக, அரசு அனுமதி பெற்று விற்பனை செய்கிறோம். விளையும் நிலங்களை விற்க, விவசாயிகள் முன் வருவதுமில்லை, நாங்களும் அதை வாங்குவதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக