சனி, 22 ஆகஸ்ட், 2009




ராஜீவ் காந்தி
உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, நெல்லியடி பகுதிகள் ராணுவமயமானது. "48 மணிநேரத்தில் யாழ்ப்பாணம் ராணுவம் வசமாகும்' என்று பிபிசி வானொலியின் செய்தியில் நிருபர் மார்க்துலி தெரிவித்தார். இச்சூழல் குறித்து விடுதலைப் புலிகள் 1987-இல் வெளியிட்ட "இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்னையும்' என்ற வெளியீட்டில் கூறியிருப்பதாவது: "ஜனவரியில் சிங்கள இனவாத அரசு யாழ்குடா நாட்டில் பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தியதுடன் வடக்கிலும் கிழக்கிலும் பெரிய அளவிலான ராணுவப் படையெடுப்பையும் மேற்கொண்டது. வடக்கில் மட்டும் இருபதினாயிரம் துருப்புகள் வரை யுத்தத்தில் குதித்தன. எமது கொரில்லா அணிகள் பல்வேறு அரங்குகளில் சிங்கள ஆயுதப்படையினரை எதிர்கொண்டு வீராவேசத்துடன் போர்புரிந்து வந்தன. ஆயுதங்கள், வெடிமருந்துகள் பற்றாக்குறையுடன் நாம் எதிரியைச் சமாளித்துக் கொண்டிருந்தோம். எதிரியின் ஆகாயக் குண்டு வீச்சுகள், பீரங்கி மோட்டார் செல் தாக்குதல்களிலும் ராணுவ வெறியாட்டத்திலும் பல நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மடிந்தவண்ணம் இருந்தனர். இந்த இக்கட்டான யுத்தச் சூழ்நிலையில் நாம் இந்திய அரசிடம் ஆயுத உதவியை நாடினோம். எமது மக்கள் இனப்படுகொலைக்கு இலக்காகி வருகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, எமது மக்களைப் பாதுகாப்பதற்கு உதவி செய்யுமாறு நாம் பாரதத்திடம் பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்தோம். எமது கோரிக்கைகளைப் பரிசீலனை செய்வதாகக் கூறிக்கொண்ட பாரதம் மெüனமாக இருந்தது. நாம் கோரிய ஆயுதப்படையின் விவரங்கள், எமது வெடிமருந்துப் பற்றாக்குறைகள் போன்ற முக்கிய ராணுவத் தகவல்களைச் சேகரித்து "ரா' அதிகாரி உண்ணிக்கிருஷ்ணன் இலங்கை அரசிற்குச் சமர்ப்பித்தார். பின்னர் உண்ணிக்கிருஷ்ணன் சி.ஐ.ஏ. ஏஜெண்ட் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தில்லி சிறையில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் சிங்கள ராணுவம் தனது போர் உபாயங்களை வகுத்து, ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தீவிரப்படுத்தியது' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியா எந்த வகையிலும் இனி போராளிகளுக்கு உதவாது என்ற நம்பிக்கையில் இருந்த சிங்கள அரசு, மக்கள்மீது கணக்கில்லாக் கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இதனால் மக்கள் உண்ண உணவும், உயிருக்குப் பாதுகாப்புமின்றி துன்பத்துக்கு ஆளாகி மேலும் அகதிகளானார்கள். தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சியினரும் சேர்ந்து, இலங்கையின் தற்போதைய கொடுமைகளைக் கண்டித்தும், யாழ்ப்பாணம் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்குமாறும், மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளவாறு பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை "ஒரு தடை ஆயுதமாகப்' பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்திக் கூறியும் மாபெரும் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் இலங்கைத் தமிழர் கட்சிகளும், போராளி இயக்கங்களும் கலந்துகொண்டன. ஐ.நா. மன்றத்தில் இப்பிரச்னை எழுப்பப்பட்டபோது, இது ஒரு பிரச்னை என்று பேசப்பட்டதேயொழிய, பொருளாதாரத் தடையை நீக்குவதற்காக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதைப் பலரும் கண்டித்தனர். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் யாழ்ப்பாணம் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும், தகவல் தொடர்பை உடனே வழங்க வேண்டும் என்றும், "டிசம்பர் 19-ஆம் தேதிய முன்மொழிவுப்படி' உடனே பேச்சுவார்த்தையைத் தொடங்க வகைசெய்ய வேண்டும் என்றும் செய்தி அனுப்பினார். இந்தியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் பேசுகையில் "எரிபொருள் தடையை நீக்கும்படி' வேண்டுகோள் விடுத்தார். இவ்வளவு கோரிக்கைகளுக்கும் எந்தப் பலனும் இல்லை; ஜெயவர்த்தனா கேளாக்காதினராக, தான் விரும்பியதை நிறைவேற்றிக்கொண்டிருந்தார். கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் வெடித்த குண்டு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது. அப்போது ஜெயவர்த்தனா, "அரசோ, போராளிகளோ யாரோ ஒருவர் வெற்றி பெறும்வரை யுத்தம் தொடரும்' என்று பிரகடனம் செய்தார். அவரின் அறிவிப்பை உலக நாடுகள் பலவும் கண்டித்தன. தனது சொந்த நாட்டில் தனது சொந்தப் பிரஜைகளின் மீதே தொடுக்கின்ற யுத்தம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் விமரிசிக்கப்பட்டது. ஐந்து மாதத் தடை காரணமாக யாழ் பகுதிக்கு எந்த மருத்துவப் பொருள்களும் செல்லவில்லை. உயிர்காக்கும் ஆக்ஸிஜன்கூடக் கிடைக்கவில்லை. இதனாலும் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் குண்டுகளுக்கு அஞ்சி கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலைக்கும் சிலர் கொழும்புக்கும் சென்றனர். இதில் கொழும்பு தவிர மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் ராணுவம் குண்டுவீசித் தாக்கியது. "ஆபரேஷன் லிபரேஷன்' என்ற இத்தாக்குதலில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள்கூடத் தப்பவில்லை. எங்கு சென்றால் குண்டுவீச்சிலிருந்து காப்பாற்றப்படுவோம் என்று நம்பி மக்கள் கூட்டம் சென்றதோ அங்கே எல்லாம் குண்டுவீச்சு நடைபெற்றது. சிங்களக் கட்சிகள் பலவும் மெüனமாக இருக்க, ஸ்ரீலங்கா மகாஜனக்கட்சி முதன் முதலில் எதிர்ப்புக்குரல் கொடுத்தது. இதன் தலைவர் விஜய குமாரணதுங்கா இந்தியா சென்று தமிழர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயன்றார். இதனைத் தொடர்ந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். தொண்டமான் "நடுவர் பாத்திரம் என்ற நிலையிலிருந்து இந்தியா விடுபட்டு, நீதி வழங்கும் தீர்வொன்றை உடனே அளித்து, தமிழ்மக்களைக் காக்கவேண்டும்' என்று அறிக்கை விட்டார். ஈழமே தீர்வென்று கூறிவந்த உலகத் தமிழ் இளைஞர் மன்றத் தலைவர் இரா. ஜனார்த்தனம், இலங்கை மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், லோக்தள் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவுத் தலைவர், இலங்கையின் மீது ராணுவ வளையம் அமைக்கவேண்டும் என்றும் திராவிடக் கழகச் செயலாளர் கி.வீரமணியும் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் பழ.நெடுமாறனும் இந்திய அரசாங்கம் தேவையான, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இலங்கைப் படுகொலைகள் குறித்துக் கண்டனம் தெரிவிக்கும் கூட்டம் ஒன்றில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்,"தனது பிரஜைகளைக் கொன்றுகுவிக்கும் நாட்டுக்கு உதவிசெய்வது ஐ.நா. சபையின் மனித உரிமை சாசனத்தை அவமதிக்கும் செயலாகும். இலங்கைக்கு உதவி புரியும் நாடுகள் தங்களது உதவிகளை உடனடியாக நிறுத்தவேண்டும்!' என்றும் வலியுறுத்தினார். இந்தியாவுக்கு ஆயுதங்கள் வாங்கியதில் பெரும் தவறுகள் நேர்ந்துள்ளதாக தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் பெரும் யுத்தம் ஒன்றை ராஜீவ் காந்தியின் பேரில் நடத்தி வந்தன. இதன் பாதிப்பில் ராஜீவ் காந்தி உழன்று கொண்டிருக்கையில் இலங்கை அரசின் "ஆபரேஷன் லிபரேஷன்' என்கிற யாழ்ப்பாணம் மீட்பு நடவடிக்கை ஏற்படுத்திய விளைவுகளும் சேர்ந்து, அவருக்கும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.
கருத்துக்கள்

தினமணி இணையப் பொறுப்பாளருக்கு : நேற்றைய தினமணியில் 82 இணையப் பகுதியில் வெளியிடவில்லை. இன்றாவது வெளியிடப்படும் என எதிர்பார்த்தால் இன்றும் வரவில்லை. நேற்று விடுபட்டுப்போன செய்திப் பகுதிகளையும் கட்டுரைப் பகுதிகளையும் உடன் வெளியிட வேண்டுகிறேன். ஆசிரியருக்கு மடல், இன்றைய நிகழ்ச்சி, பிற செய்திகள் என எல்லாமும் ணையப் பக்கத்தில் வாசிக்க வழி செய்ய வேண்டுகிறேன்.

அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2009 3:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக