முருகதாசனின் ஆறாம் மாத நினைவு நிகழ்வுகள் லண்டனில் நடைபெற்றது
- இவ் விடயம் 11. 08. 2009, (சனி), தமிழீழ நேரம் 0:41க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள், புகைப்படங்கள், புலத்தமிழர்
நேற்று வடமேற்கு லண்டன் பகுதியில் தியாக மைந்தன் முருகதாசனின் ஆறாம்மாத நினைவு நிகழ்வு நடை பெற்றது. இந்த நினைவு நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 09-08-2009 ) சுமார் 11:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் முருகதாசனின் தாயாரான புவநேஸ்வரி வர்ணகுலசிங்கம் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றிவைக்க மலர் மாலையினை முருகதாசனின் தந்தையாரான வர்ணகுலசிங்கம் அவர்கள் முருகதாசனின் திருவுருவப்படத்திற்கு அணிவித்தார். அதனைத்தொடர்ந்து நினைவு நிகழ்வுகளை ஹறோ கவுன்சிலர் திரு. தயா இடைக்காடர் அவர்கள் 2 நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பித்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மலர்வணக்கநிகழ்வும் நடைபெற்றது. இதில் சிறியவர் பெரியவர் என்று பலதரப்பட்டவர்களும் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அங்கு உரையாற்றிய திரு. தயா இடைக்காடர் அவர்கள் முருகதாசனின் தியாகமும் லட்சியமும் என்றுமே வீண்போகாது, அவன் ஏற்றிவைத்த இலட்சிய நெருப்பு ஒவ்வொரு தமிழரினதும் மனங்களில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. அவன் கண்ட கனவு ஒரு நாள் நிச்சயம் நிறைவேறும் என்று சொன்னார்.
அவரைத்தொடர்ந்து ஸ்ரோன்பிறிட்ஜ் பகுதி கவுன்ஸிலர் ANNE ( தொழில்கட்சி) , வெம்பிளி பகுதி கவுன்ஸிலர் DANNIEL ( லிபறல் ) , வெம்பிளி பகுதி கவுன்ஸிலர் AFIFE ( லிபறல் ) அல்பேட்டன் பகுதி கவுன்ஸிலர் JAMES ( லிபறல் ) ஆகியோர் உரையாற்றினர். அத்துடன் தியாக மைந்தனின் இறுதி நிகழ்வு காணொளியும் மக்களுக்கு கண்பிக்கப்பட்டு முருகதாசனின் மீள்நினைவுகளில் அனைவரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக