வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

வன்னி மக்களைக் காக்கக் கோரி லண்டனிலிருந்து கவனயீர்ப்புப் பயணம்
பிரசுரித்த திகதி : 20 Aug 2009

தமிழ் நாட்டில் 1986ம் ஆண்டில் எம்.ஜி.ராமச்சந்திரன்(MGR) முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், அவரால் ஆசிவழங்கப்பட்டு, உலக சமாதானம் மற்றும் அணுவாயுத ஒழிப்பு தொடர்பாக சைக்கிளில் உலகப் பயணம் மேற்கொண்ட த.சீனிவாசராவ், இரா. ஞானசேகரன் ஆகிய இருவரும் தற்போது, வன்னி மக்களை விடுவிக்கக் கோரி உலகளாவிய ரீதியில் கவனயீர்ப்புச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.

இதுவரை சைக்கிளில் 120 நாடுகளைச் சுற்றி வந்த இவர்கள், இதுவரை சுமார் 600,000 மைல்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்விருவரும் தற்போது பிரித்தானியாவில் தங்கியிருந்து, தமது கவனயீர்ப்பு உலக சுற்றுப் பயணத்தைப் பற்றி புலம் பெயர் தமிழர்களுக்கு விளக்கி வருகின்றனர். பிரித்தானியாவில் இருந்து காரில் முதலில் நோர்வே செல்லும் இவர்கள், பின்னர் பல ஜரோப்பிய நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து அமெரிக்கா, கனடா சென்று இறுதியில், ஜ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சிறப்பு மகஜர் ஒன்றைக் கையளிக்கவுள்ளனர்.

பல நாடுகள், பல நகரங்கள், மற்றும் சிறு ஊர்கள் ஊடாக இவர்கள் பயணம் தொடரவிருக்கிறது. சுமார் 50 நாடுகள் ஊடாக 100,000 கிலோ மீட்டர் இவர்கள் பயணம் தொடரவிருக்கிறது. 2010ம் ஆண்டு நீயூயோக் நகரில் உள்ள ஜ.நா தலைமைச் செயலகத்தில் இவர்கள் பான் கீ மூனைச் சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரக் கணக்கான மைல்கள் இவர்கள் பயணிக்கவிருப்பதால் செல்லும் இடமெல்லாம், வன்னி மக்கள் பற்றிய விழிப்புணர்வுகளை இவர்கள் பரப்ப இருக்கிறார்கள். இதற்கான பிரத்தியேக கார் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பயணம் ஒரு வெற்றிப் பயணமாக அமைய அதிர்வு இணையம் வாழ்த்துகிறது.

வன்னி மக்களின் துயர்தீர இவ்விருவரும் எடுத்துள்ள புதிய முயற்ச்சிக்கு நாமும் தோளோடு தோள்கொடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக