ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

முடிந்தவரை தமிழில் மட்டுமே பேசுங்கள்! "தினமணி' ஆசிரியர் வேண்டுகோள்



சென்னை, ஆக. 15: "நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தமிழில் அளவளாவுவதை வழக்கமாகக் கொள்ளல் வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்கப்படும்' என்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் யுவசக்தி என்ற தன்னார்வ அமைப்பு ஆகியவற்றின் சார்பில், "இளைஞர் ஊக்குவிப்பு பிரசாரம்' என்ற நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் யுவசக்தியின் "சிந்தனைச் சிறகுகள்' என்ற புத்தகத்தை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை பல்கலைக்கழக மாணவர் சதீஷ் பெற்றுக் கொண்டார். பின்னர், "தாய் மண்ணே வணக்கம்' என்ற தலைப்பில் ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியதாவது: பிளாஸ்டிக்கின் உபயோகத்தால் நான்கைந்து தலைமுறைகளுக்குப் பிறகு விவசாயமே இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. நமது முன்னோர்கள் நல்ல மண்ணை, நல்ல சுற்றுச்சூழலை விட்டுச் சென்றார்கள். அதை நாம் இன்று அனுபவிக்கிறோம். நமது முன்னோர்கள் நமக்கு விட்டுவிட்டுப் போனதைப் போல, நல்லதொரு பூமியை நாளைய தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். நமது சுயநலம் நாளைய தலைமுறையை பாதித்துவிடக் கூடாது. நமது முன்னோர்கள் தத்தம் பிள்ளைகளையே காப்பீடாகக் கருதினார்கள். அதனால் மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, முதியோர் இல்லம் போன்றவற்றுக்கு அவசியம் இல்லாமல் போனது. ஆனால் இன்று நிலைமை வேறு. இது ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல. இதற்குப் பெற்றோரின் சுயநலம் கூட காரணம். குழந்தைகளை வளர்க்கும் போதே, "உங்களை நம்பி நாங்கள் இல்லை; நீங்கள் படித்து வசதியாக வாழ்ந்தால் போதும்' என்று கூறும் பெற்றோர் பலரும் முதுமையில் தங்கள் குழந்தைகளைப் பார்க்க மாட்டோமா என்கிற ஏக்கத்துடன் முதியோர் இல்லத்தில் வாழ்வது அதிகரித்து வருகிறது. "நம்மைக் காப்பாற்ற குழந்தைகள் கடமைப்பட்டவர்கள்' என்று பெற்றோரும், "பெற்றோரைக் காப்பாற்றுவது தங்கள் கடமை' என்று குழந்தைகளும் கருதிய நல்ல பண்பு பாரதத்துக்கு மட்டுமே உள்ளது. அதை நாம் இழந்துவிடக் கூடாது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், 180 நாடுகள் சுதந்திரம் அடைந்தன. அவற்றில் முழுமையாக தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டும் ஒரே நாடு இந்தியாதான். தேர்தலில் தில்லுமுல்லுகள், தவறுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், எல்லாரும் பணம் வாங்கித்தான் ஓட்டு போடுகிறார்கள் என்று சொல்வது இந்திய வாக்காளர்களை அவமதிப்பதாகும். தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. அவை தட்டிக்கேட்கப்பட வேண்டும். மொழி வேறு, தேசம் வேறு என்று தனித்தனியாக பிரித்துப் பார்க்கக் கூடாது. பாரதிக்கும், தாகூருக்கும் மொழிப் பற்று இல்லாமல் இருந்ததா? அவர்கள் தத்தம் மொழியை நேசித்ததால் தேசப் பற்று இல்லாமல் போய்விட்டதா? மொழிப் பற்று என்பது தேசப் பற்றுக்கு எதிரானது அல்ல என்பதை இன்றைய இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். பேச்சு வழக்கில் இருந்தால் மட்டுமே ஒரு மொழி வாழவும், வளரவும் முடியும். பேச்சு வழக்கு ஒழிந்ததால்தான், லத்தீன், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகள் அழிந்தன. அந்த நிலைமை தமிழுக்கு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் சமீபகாலமாக ஏற்படுகிறது. தனித் தமிழில் பேச வேண்டும் என்பது இல்லை. முடிந்தவரை பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் பேச நாம் முயற்சிக்க வேண்டும். ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தோர் தங்கள் தாய் மொழியில் மட்டுமே பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அதனால் அவர்களது வளர்ச்சி பாதித்ததா என்ன? ஆங்கிலமோ, பிற மொழிகளோ படிக்க வேண்டாம் என்கிற கருத்தில் நான் இதைக் கூறவில்லை. நமது அலுவல் மொழியாக ஆங்கிலமோ, ஹிந்தியோ, உருதுவோ, பிரெஞ்சோ எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், வீட்டில் உற்றார், உறவினர், நண்பர்கள் மத்தியில் பேசும் மொழியாகத் தமிழையோ, உங்கள் தாய்மொழியையோ மட்டுமே கொள்ளுதல் வேண்டும். பாரதி சொல்வது போல, "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே' என்பதை இன்றைய இளைய தலைமுறை மறந்து விடக் கூடாது' என்றார் ஆசிரியர் வைத்தியநாதன். நிகழ்ச்சியில் கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வர் எம்.சேகர், தேசிய நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்லதுரை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.குமார், யுவ சக்தி உறுப்பினர் ஜனனி மகேஸ்வரி வியாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

Tholaikkaatchi nigazhchikalaip parungal.Pirabalangkal palar paathikkumel aangilam kalanthe pesukinranar.Dhesiyath tholaikkaatchi nigazhchikalum itharkku vithivilakkalla enbanapol nadakkinrana.Thiraipadangkalukkuth thamizhil peyar vaiththaal mattum pothaathu;Thamizhppanpaadu sithaikkappadaamal irukkavendum;uraiyaadalkal perumbaalum nalla thamizhil amaiya vendum .Ilaiya thalaimurai ithai manathil koLLavendum.Aasiriyarin kootru mutrilum unmaiye! -Arima Ilangkannan(camp:US)

By P.Balakrishnan
8/16/2009 3:47:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக