கடந்த வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக மணிக் பார்ம் தடுப்பு முகாமின் கால்வாய்கள், மலசல கூடங்கள் என்பன மழைநீரால் நிரம்பி வழிவதால் அந்த வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மணிக் பார்ம் முகாமில் உள்ள வலயம் 3 மற்றும் வலயம் 4 பகுதியே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட 20,000 மக்கள் தமது தற்காலிக குடியிருப்புகளில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் அன்றாடத் தேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக மேலதிக படையினரை முகாமில் குவித்துள்ளமை மேலும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. தடுப்பு முகாம் நிலமை பற்றி மனிதாபிமான அமைப்புகளின் சம்மேளன தலைவர் ஜீவன் தியாகராஜா கருத்துக் கூறும்போது, மோசமாகக் கட்டப்பட்ட கால்வாய்கள், மலசலகூட குழாய்கள் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக தாம் சுட்டிக் காட்டியிருந்ததாகவும், போதிய சுகாதார வசதிகளும், கூடார வசதிகளும் இல்லாததால் மாரி மழைக்கு இவை தாக்குப் பிடிக்காது எனத் தாம் கூறியிருந்ததாகவும் சொன்னார். இப்போது தாம் கூறியவை நிரூபிக்கப்பட்டு மக்கள் இடர்களுக்கு ஆளாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதேவேளை, மணிக் பார் முகாமில் கிட்டத்தட்ட 20,000 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு நேற்று உறுதி செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவர்களுள் கிட்டத்தட்ட 1000 பேரை மணிக் பார்ம் முகாமின் வேறு பகுதிகளுக்கு மாற்றியுள்ளார்களாம். இதுபற்றிக் கூறிய வவுனியா அரச அதிபர் சார்ள்ஸ், வலயம் 4 இலுள்ள 400 பேர் முகாமின் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான உணவு வசதிகளைத் தாம் செய்துள்ளதாகவும் கூறினார். வலயம் 4 இலுள்ள மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தடுப்பு முகாமிலுள்ள நபர்கள் தமக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக த.தே.கூ இன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார். ஆனால் தமக்கு அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை பற்றித் தெரிய வரவில்லை என்று மேலும் கூறியுள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக