சனி, 22 ஆகஸ்ட், 2009

அட்டவணை வாழ்க்கை...!



விஞ்ஞானம் முன்னேறிவிட்ட இன்றைய காலத்தில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது யாருக்குமே போதவில்லை. குறிப்பாக, இக்கால பள்ளிக் குழந்தைகளுக்கு நேரம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கத்தான் செய்கிறது. பள்ளிக்கூடம், பாடப் புத்தகம், தொலைக்காட்சி, தூக்கம் இவற்றோடே நாள் முழுவதும் முடிந்துவிடுகிறது. இவற்றைக் கடந்து சிந்திக்க நினைத்தாலும் பிள்ளைகளுக்கு நேரம் இருப்பதில்லை. "பொருள் தேடி' ஓடும் பெரியவர்களுக்கு இணையாக குழந்தைகளும் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். குழந்தைகளுக்கான நேரத்தை பெற்றோர் அட்டவணை போட்டுத் திட்டமிடுகின்றனர். நகரம், கிராமம் என்ற வித்தியாசத்தையெல்லாம் கடந்து இக் கால குழந்தைகளின் மீது பெற்றோர் திணிக்கும் சுமைகள் அதிகம். காலையில் கராத்தே வகுப்பு, நீச்சல், நடனம், பள்ளி முடிந்து வந்தபின்னர் டியூசன், கம்ப்யூட்டர் பயிற்சி, ஹிந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ் என வரிசைவைத்து பிள்ளைகளை அனுப்புகின்றனர். இந்த தனிப்பயிற்சிகளால் நிறைய பலன் கிடைக்கும் என்றாலும், அவர்களுக்கே தெரியாமல் ஒரு பெரும் இழப்பையும் மாணவர்கள் சந்திக்கின்றனர். ஆம்... புத்தக வாசிப்பு எனும் அருமையான பழக்கத்தை மாணவர்கள் இழந்துவிடுகின்றனர். இப்போது முப்பது-முப்பந்தைந்துகளில் இருக்கும் இளைஞர்கள் சிறுவர்களாக இருந்தபோது ஏறத்தாழ அனைவருக்குமே வாசிப்புப் பழக்கம் அறிமுகமாவது ஆகியிருக்கும். அறிவுத்தேடலின் விளைவாக கதை, இலக்கியம், நாடகம், சிறுவர் இதழ்கள் என தேடித் தேடிப் படித்தவர்கள் ஏராளம். நூலகத்தில் காத்திருந்து நல்ல நல்ல நூல்களில் மூழ்கிப் போனவர்கள் பலர். ஆனால், இக் கால மாணவர்கள் பெரும்பாலானோருக்கு வாசிப்புப் பழக்கம் இல்லை. அதை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கக் கூட பெற்றோருக்கு மனமில்லை. பிள்ளைகளை மருத்துவராக, பொறியாளராக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறே இல்லை. ஆனால், பிள்ளைகள் மீது இந்த எண்ணத் திணிப்பு இருக்கக் கூடாது. அரிதிலும் அரிதாக வாசிப்புப் பழக்கம் உள்ள மாணவர்களையும் கண்டித்து, பாடப்புத்தகத்தை மட்டும் படிக்கச் சொல்வது தவறான முன்னுதாரணம். சிறு வயதிலேயே குழந்தைகளை நல்ல நூல்களை வாசிக்கச் செய்வதில் பெற்றோருக்குப் பெரும் பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மாதாந்திர பட்ஜெட்டில் மஞ்சளில் ஆரம்பித்து மாங்காய் தொக்கு வரை இடம்பெறுகிறது. ஆனால், எத்தனை வீடுகளில் புத்தகங்கள் வாங்குவதற்கு என தனியாக பணம் ஒதுக்குகின்றனர்? இத்தனை எதற்கு... செய்தித்தாள் வாங்காத பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தெரியுமா? வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் படித்தால் இன்றைய போட்டி உலகத்தை மாணவர்களால் எதிர்கொள்ள முடியாது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது'. இண்டர்நெட் மையங்களுக்கு "சாட்டிங்' செய்ய நாள் தவறாமல் செல்லும் இளைஞர்கள், நூலகத்தின் பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை. இப்போதெல்லாம் நூலகங்களில் புதிதாக உறுப்பினராகச் சேர்பவர்களில் மாணவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பம். அரசுப் பள்ளிகள் பெரும்பாலானவற்றிலும் நூலகங்கள் இருந்தும் செயல்படாத நிலையிலேயே உள்ளன. இதனால், சிறந்த இலக்கிய நூல்கள், கதைகள், சரித்திர நூல்களின் அறிமுகம்கூட தற்போதைய மாணவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. வாய்ப்புக் கிடைக்காதது ஒருபுறம் இருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் இவற்றைப் படிப்பதற்கு விருப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்கும் சிறிது நேரத்தையும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், சினிமா என பிற பொழுதுபோக்கு அம்சங்கள் விழுங்கிவிடுகின்றன. இந்தச் சூழ்நிலையில், சென்னை, ஈரோடு, மதுரை போன்ற நகரங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகள் சற்று ஆறுதலைத் தருகிறது. விழாக்களில் பரிசுப் பொருள்களுக்குப் பதிலாக புத்தகங்களைக் கொடுக்கலாம் என்பது சிறந்த யோசனை. இதைச் செயல்படுத்த ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். பிள்ளைகள் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவர்களை நூலகத்தில் உறுப்பினராக பெற்றோர் சேர்த்துவிட்டால், அவர்களுக்கு வாசிப்பின் மீது நிச்சயம் ஆர்வம் பிறக்கும். புத்தகங்களைப் படிக்கப் படிக்க, எழுத்தாற்றலும் கைகூடும். வாசிப்பு என்பது பொழுதுபோக்குவதற்கான பழக்கம் அல்ல; அக, புற வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும், உலகைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

(தினமணியில் பதியவில்லை)

அருமையான கட்டுரை. மனப்பாடக் கல்வி முறையும் அட்டவணை வாழ்க்கையும் தொலைநதால்தான் நல வாழ்க்கையைக் காண இயலும். அதற்கேற்ற கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதுடன் பெற்றோர்கள் குழந்தைகளைக் குழந்தைகளாக எண்ணி வளர்க்க வேண்டும். -- இலக்குவனார் திருவள்ளுவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக