ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

இணைய மாநாடு குறித்து இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி - இணையத் தமிழ் மன்றம் வேண்டும் : ஆராஇணைய மாநாடு குறித்து இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி

இணையத் தமிழ் மன்றம் வேண்டும் -
முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்

- ஆரா

தமிழக அரசியல்
நாள் 04.09.2013 வியாழன்
பக்.22-23

  உலக மொழிகளில் இன்னும் இளமையாய் இருக்கும் தமிழுக்குப் புதிய மகுடம் சூட்டும் வகையில்,  மலேசியா தலைநகர்  கோலாலம்பூரில் அண்மையில் 12ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும்(உத்தமம்)  மலாயா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டில்  தமிழ்நாட்டில் இருந்து  கட்டுரையாளராகப் பங்கேற்ற  தமிழ் அறிஞரான,   இலக்குவனார் திருவள்ளுவனிடம் பேசினோம்.
இந்த இணை யத் தமிழ் மாநாடு எதற்காக?
  'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' எனும் மையப் பொருளை அடிப்படையாகக்கொண்டு இணைய மாநாடு நடந்தது. இத்தலைப்பு குறித்த முதன்மைப் பொழிவுரையைத் திரு முத்து நெடுமாறன் சிறப்பாக வழங்கினார். கணிணி மொழியியல், இயற்கை மொழி ஆய்வு, மொழிக்கருவிகள், இணையமும் கணியமும், கைப்பேசிகளும் கைக்கருவிகளும், கல்வி ஆகிய வகைப்பாட்டில் கட்டுரைகள் அளிக்கப்பெற்றன. 101 கட்டுரைகள் இடம் பெற்றன. சில கட்டுரைகளை ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து அளித்திருந்தனர்.
மலேசிய மக்களிடம் தமிழ் ஆர்வம் எப்படி?
  பொதுவாகத் தமிழ் மாநாடு என்றால் மூத்தோர் அவை போன்று இருக்கும். இளந்தலைமுறையினரைப் பார்ப்பது அரிதாக இருக்கும். ஆனால், உத்தமம் அமைப்பினரும் மலேசிய மாநாட்டுக் குழுவினரும் இளைஞர்களிடையே முன்கூட்டியே விழிப்புணர்வை ஏற்படுத்திப் பெருமளவிலான இளைஞர்களைப் பங்கேற்கச் செய்தனர். இவ்வாறுபங்கு கொண்ட 680 இளைஞர்களில் பெரும்பாலோர் பயிற்சி ஆசிரியைகள். எனவே, அவர்கள் மூலம் வளரும் தலைமுறையினரான மாணாக்கர்களுக்கும் இணையத் தமிழ்பரவும் வாய்ப்பை இம்மாநாடு ஏற்படுத்தித் தந்துள்ளது.
  மலேசியாவில் இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் பலர்  ஆர்வமுடன் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டை முன்னிட்டுத் தமிழ்க்கணிணி  தொடர்பான விற்பனைக் கண்காட்சியும் சிறப்பாக  நடைபெற்றது. 10,000 பேர் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர் என்னும் பொழுது மலேசிய மக்களின் ஆர்வத்தைப் புரிந்து கொள்ளலாம். பொதுவாகத் தமிழ்நாட்டில்தான், அரசே உலகத்தமிழ்மாநாட்டை நடத்தும் பொழுது, மக்களிடையே ஆர்வம் பொங்கி எழுவதைப் பார்கக் இயலும். அந்த நிலை மலேசியாவில் இருந்தது. தமிழ் வளர்ச்சி மீதான ஆர்வத்தையும் தமிழை இணையம் மூலம் பரப்ப வேண்டும் என்ற உணர்வையும் அனைவரிடமும் பார்க்க முடிந்தது.
நீங்கள்  என்ன தலைப்பில் கட்டுரை அளித்தீர்கள்?
   நெட்வொர்க்குஎன்பது தொடர்பாக வலைமச் சொற்கள்என்னும் தலைப்பில் கட்டுரை அளித்தேன். அறிவியல் துறைகள் வளரக் கலைச்சொற்கள் பெருகவும் வேண்டும். ஆனால், என்னைத் தவிர,  கலைச்சொற்கள் தொடர்பில் முனைவர் சானகிராமன் கைப்பேசியில் தமிழ்க்கலைச்சொல்லாக்கம் தரப்படுத்தல் குறித்துப் பேசினார். தங்கராசா தவரூபன், ‘தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ் - ஒரு பார்வைஎன்னும் தலைப்பில் கலைச்சொல் தேவை குறித்து வலியுறுத்தினார். எனி்னும் கலைச் சொல்லாக்கங்களுக்கு மேலும் முதன்மை அளித்துக் கட்டுரைகள் பெருக வேண்டும். அப்பொழுதுதான் இணையத்திலும்  பிற அறிவியல் துறைகளிலும் தமிழ் சிறப்பான வளர்ச்சியைப் பெறும்.
மாநாடு  பற்றிய உங்கள் விமரிசனம் என்ன?
  முனைவர் பட்ட ஆய்வாளரிடம் அணில்,  ஆடு. இலை  எனக் கற்பிப்பதுபோல், சில கட்டுரைகள் மிகவும் தொடக்கநிலையில் பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்குரிய சிறப்பு இன்றி இருந்தன. சில கட்டுரைகள் 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை எதிரொலிப்பதாக அமைந்தன. இன்றைய நிலைக்கேற்ப அமையவில்லை. இத்தகைய கட்டுரைகளைத் தவிர்த்திருக்கவேண்டும். அல்லது கட்டுரையாளர்களை ஊக்கப்படுத்துவதாக எண்ணினால், அவர்களிடமே உண்மை நிலையைத் தெரிவித்து இன்னும் ஆழமாகச் சிந்தித்து எழுதித்தரச் சொல்லி இருக்க வேண்டும்.
  60% கட்டுரைகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. இவர்களில் பலர் ஆங்கிலக் கட்டுரையை அளித்துவிட்டுத் தமிழில் உரையாற்றினர். இனிமேல் தமிழ்மாநாடு எனில் கட்டுரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.  விரும்புவோர் ஆங்கிலத்திலும் அதன் மொழி பெயர்ப்பை அளிக்கச் செய்யலாம்.
தமிழ்நாட்டில் இதுபோல மாநாடு நடக்க வாய்ப்புள்ளதா?
  மலேசியாவில் நடந்த இம்மாநாட்டுக்கு அந்நாட்டு அரசு  50,000 வெள்ளி நன்கொடை தந்து உதவியது. அதனால், தமிழ் மக்களிடையே சிறப்பான எழுச்சியை  ஏற்படுத்தித் திரளான பங்கேற்பிற்கு வழி வகுத்தது. அதுபோல் தமிழக அரசும் மீண்டும் இங்கே நடத்தலாம்.
  அதற்குமுன், தமிழ்நாடு அரசே இணையத் தமிழ் வளர்ச்சிக்கெனத்தமிழக இணையத் தமிழ் மன்றம் அல்லது தமிழகக் கணித்தமிழ் மன்றம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்க வேண்டும். கணிப் பயன்பாடு அறிந்த தமிழ்ப் புலமையுடையவர்களையே தலைமைப் பொறுப்பிலும் பிற முதன்மைப் பொறுப்பிலும் அமர்த்த வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரைத் தலைமை நெறியாளரகாவும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சரையும்  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரையும் நெறியாளர்களாகவும் கொண்டு செயல்பட வேண்டும். இதன் பொறுப்புக்குழுக்களில் உத்தமம் சார்பாகவும் கணித்தமிழ்ச்சங்கம் சார்பாகவும் உறுப்பினர்களை அமர்த்த வேண்டும். தொடக்கப் பள்ளி மாணாக்கர்களுக்கு இணையம் வழியாகத் தமிழ்கற்பிக்கும் சிங்கப்பூர் கல்விமுறையைத் தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம்.
+++000+++


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக