பெண்களுக்குத் தற்காப்பு ப் பயிற்சி தேவை!
பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதால், பெண்கள் தங்களை க் காப்பாற்றி கொள்வதற்காகக் கட்டாயம் தற்காப்பு உத்திகளை க் கற்க வேண்டும் எனக் கூறும் சிரீராம்: நான், சென்னையில் உள்ள, "கிராவ் மகா' அமைப்பு மூலம், பெண்களுக்கான தற்காப்பு உத்திகளை கற்று தரும் பயிற்சியாளர். "இந்த நிமிடத்தின் பாலியல் வன்முறை' என, தொலைக்காட்சி சேனல்களில் தனி பகுதி ஆரம்பித்து, செய்திகளை ஒளிபரப்பும் அளவிற்கு, பெண்களுக்கு எதிரான அவலங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், பெண்கள் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக, முன்னெச்சரிக்கையுடன் சில பாதுகாப்பு மற்றும் நூதன தற்காப்பு உத்திகளை கற்பது அவசியம்.
பெண்கள், பாலியல் வன்முறையில் சிக்கும் போது, முதலில் தங்களை காப்பாற்றி கொள்ள சத்தமாக கூச்சல் போடுங்கள். உங்களை தாக்க வருபவர் பலசாலியாக இருந்தாலும், கண், மூக்கு மற்றும் அந்தரங்க பகுதிகளை தாக்கினால், உடனே அவர்கள் நிலை குலைவர். கடிப்பது, கீறுவது என, எளிய செயல்களை செய்து தப்பிக்கலாம். எந்த சூழ்நிலையிலும், எதிராளியிடம் உங்கள் பயத்தை வெளிப்படுத்தக் கூடாது. தப்பித்து ஓடும் போது, மற்றவர் உங்களை தொடர்ந்து பின்தொடரா வண்ணம், முழு திறனுடன் ஓடுங்கள். முக்கியமாக, கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு சென்றுவிட்டால், கயவர்களிடமிருந்து எளிதில் தப்பிக்கலாம். குறைந்தபட்சம், மண், மிளகாய் தூள் போன்றவற்றை, எதிரியின் மீது தூவி, தப்பிக்கும் தைரியம் கட்டாயம் இருக்க வேண்டும். குற்றவாளிகள் கொடூரமான தோற்றத்துடன் தான் இருப்பர் என, நினைக்காதீர்.
அப்பிராணியாக இருப்பவன் கூட பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடலாம். வீட்டில் தனியாக வாழும் பெண்கள், "இன்ட்ரடியூசர் அலாரம்' வைத்திருப்பது நல்லது.
பொது இடங்களில், தொடர்ந்து தொல்லை தருபவர்களை, காவல் துறையின் மகளிர் உதவி தொலைபேசி எண், 1091ல் புகார் செய்யலாம். சாலையில், மொபைலில் பேசுவதோ அல்லது பாட்டு கேட்டப்படி செல்லும் போதோ, எச்சரிக்கையோடு, அக்கம் பக்கம் கவனித்தப்படி செல்லுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக