புதன், 4 செப்டம்பர், 2013

நவரசம் - நல்ல குறும்படம்


விமர்சனம்

பட ஆய்வு

நல்ல குறும்படம் என்பது திருக்குறள் மாதிரி இருக்க வேண்டும். அளவில் சிறியதாக இருக்கும் அதே நேரம் அமைப்பில் முழுமைத் தன்மையோடு இருக்க வேண்டும்.அப்படி ஒரு சிறந்த குறும்படத்தை அண்மையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜி ஸ்டுடியோஸ் சி.ஆர்.வெங்கடேஷ் தயாரிக்க ரங்கா யாளி, தீரஜ் வைத்தி என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் உருவான பதினெட்டு நிமிடங்களே ஓடுகிற நவரசம் என்ற குறும்படம்தான் அது.ஒரு பேருந்தில் கும்பலில் ஏறும் ஒரு இளம்பெண் (ஓகேவா வினோதினி?) காசை பாஸ் பண்ணி டிக்கெட் எடுக்கக் கோருகிறாள். பலர் கை மாறி ஒரு விழியிழந்த இளம்பெண்ணின் கைக்கு போகும் அந்த காசு டிக்கெட்டாக மாறி வருகையில், கண்டக்டர் ஒரு ரூபாய் குறைவாகக் கொடுத்திருப்பதை தடவிப் பார்த்தே கண்டு பிடித்து வாங்கித் தருகிறாள் அந்த விழியிழந்த பெண்.
இது காசு கொடுத்த பெண்ணின் கவனத்தைக் கவர்கிறது. அடுத்து கொஞ்ச நேரம், கும்பலான பேருந்தில் மூன்று சீட்களை ஆக்கிரமித்துத் தூங்கும் ஒருவன், தூங்கி விழுந்து விழுந்து அடுத்தவரின் தோள்பட்டையை வீங்க செய்யும் இன்னொருவன்… இது போன்ற நிகழ்வுகள் வசனம் இன்றி கேமரா மொழியில் காட்டப்படுகின்றன. ஒரு நிலையில் விழி இழந்த பெண்ணிடம் ஒரு நாகரீகமற்ற மனிதன் , பாலியல் திருட்டு செய்ய முயல, டிக்கெட் வாங்க சொன்ன, பெண் அவனை கண்டிக்கிறாள். தவிர விழி இழந்த பெண்ணின் கையாலும் அவனுக்கு அறை வாங்கித் தருகிறாள். பஸ்ஸில் இருந்து விழி இழந்த பெண்ணோடு இறங்கி, அவளை அவளது வயதான வறிய தாத்தாவிடம் சேர்த்து விட்டுப் போகிறாள். அடுத்து மருத்துவமனை காட்டப்பட, அங்கே ஒரு இளம் பெண்ணுக்கு குணப்படுத்த முடியாத நோய் இருப்பதும், அவள் மரணம் உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பதும் உணர்த்தப்படுகிறது. பேருந்தில் டிக்கெட் வாங்க சொன்ன பெண், அங்கே வர, அப்போதுதான் அவள் அங்கே பணிபுரியும் செவிலி என்பதும் அவள் பெயர் சாந்தி என்பதும் டாக்டர் பேசுவதை அவள் கேட்டுக் கொண்டே செல்கிறாள் என்பதும் விளங்க வைக்கப்படுகிறது.
சாந்தி ஒரு அறைக்குள் நுழைய, அங்கே மரண மாளிகையின் நுழைவாயிலில் இருக்கும் அந்த இளம்பெண் காட்டப்படுகிறாள். அந்த பெண்ணுக்கான செவிலியர் சேவையை சாந்தி பல நாட்களாக செய்து வருவது உரையாடல் மூலம் தெரிகிறது. அந்தப் பெண் புகைப்படக்கலை மீது ஆர்வம் கொண்டவள். அவள் எடுத்த புகைப்படங்களின் ஆல்பத்தை அவள் சாந்தியிடம் காட்ட, ஒவ்வொரு புகைப்படத்தோடும் ஓர் அழகிய குறிப்பும் எழுதப் பட்டு இருக்கிறது. ‘இந்த ஆல்பத்தின் முடிவு முழுமையானதாக இருக்க வேண்டும் என்பது போன்ற ஒரு கோரிக்கையை அவள் சாந்தியிடம் வைக்கிறாள். அடுத்த காட்சியில் மருத்துவமனையில் படுத்திருக்கும் பெண்ணின் முன்னால் ஒரு முகக் கண்ணாடி காட்டப்பட, தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து, தன் முகத்தையும் தடவிப் பார்த்து அவள் சிலிர்க்கிறாள். ஓ…! இவள் யார் தெரியுமா? பேருந்தில் நாம் பார்த்த விழியிழந்த பெண்! “நீ ரொம்ப அழகுன்னு நான் அப்பவே சொல்லல?” என்று குழந்தை போல அவளது தாத்தா குதூகலிக்க, இவள் வெட்கமாய் குறுகுறுக்க, சாந்தியின் முகத்தில் கலவையான உணர்வுக் குமிழிகள்.
பார்வை பெற்ற பெண்ணிடம் அந்த ஆல்பமும் ஒரு கேமராவும் கொடுக்கப்பட, அங்கே அந்த மருத்துவமனையில் ஒரு தேவதை நிசப்தமாய் உறங்குவது போல, முகத்தில் ஒரு திருப்திப் புனகையுடன், நோயுற்ற அந்தப் பெண் மரணத்தில் நிறைந்திருக்க, மரணித்த இந்தப் பெண்ணின் கண்தான் அவளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இனி அவள் வாழ்க்கை ஒளிபெறும். நிறைவடையாது இருந்த அந்த புகைப்பட ஆல்பமும் தொடர்ந்து கவிதைப் பூர்வமான புகைப்படங்களை தொடர்ந்து பெறும் என்பதை கேமரா மொழியில் சொல்லி… படத்தை முடிக்கிறார்கள்.ஆர்.கே. பிரதாப்பின் ஒளிப்பதிவு, கவிஞர் பிறைசூடனின் மகனான தயானந்தின் இசை இவற்றின் உதவியோடு ஒரு அற்புதமான குறும்படத்தைக் கொடுத்துள்ளார்கள் ரங்கா யாளி, தீரஜ் வைத்தி என்ற இந்த இளம் இரட்டை இயக்குனர்கள்.
பதினெட்டு நிமிடத்தில் ஒரு முழுமையான நல்ல திரைப்படம் பார்த்த நிறைவு. சாந்தியாக நடித்து இருக்கும் எங்கேயும் எப்போதும் வினோதினி மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். முன்பே யமுனா படத்துக்கான நமது விமர்சனத்தில் மகுடம் சூடும் கலைஞராக பாராட்டப்பட்டவர்தான் இவர். இவர் மட்டுமில்லை மற்ற நடிகைகளின் நடிப்பும் மிக அருமை. ஆல்பத்தில் ஒவ்வொரு புகைப்படத்தின் பக்கத்திலும் இருக்கும் வாசகங்கள், பார்ப்பவர்களால் படிக்க முடியாத அவசரத்தில் புரட்டப்படுவதை தவிர்த்து, கொஞ்சம் பொறுமையாகக் காட்டி இருந்தால் அந்த வாசகங்கள் கூட, உணர்வுக்கு கனம் சேர்த்திருக்கும். இன்னொன்று…பெண்ணுக்கு கண் வந்த இடத்தில் விநோதினியின் சீருடையில் பொறிக்கப்பட்டு இருக்கும் சாந்தி என்ற பெயர் தகட்டை அணுக்கமாகக் காட்டி டைரக்டோரியல் டச் கொடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.
ஏன் ரங்கா தீரஜ்… இதை நோயுற்ற பெண் மரணத்தில் நிறைந்திருக்கும் இடத்தில் காட்டி இருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்காது?எனினும் என்ன.. அளவில் சிறிய ஒரு படத்துக்குள் ஒண்மான் சுவைகளும் இருக்கும்படியாக காட்சிகள் வைத்து, அதற்கு நவரசம் என்றும் பெயர் வைத்து, சிறப்பாக படைக்கப்பட்டிருக்கும் விதத்தில், ஓங்கி உயர்ந்ததொரு குறும்படமாகிறது இந்தப் படம். படத்தின் அறிமுக விழாவில் ஒய் நாட் புரடக்ஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் சஷிகாந்த், லிப்ரா புரடக்ஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் இவர்களுடன் நிஷாந்தி அண்ணாதுரை உள்ளிட்ட பல, குறும்பட தயாரிப்பாளர்களும் வந்து கலந்து கொண்டு பாராட்டியது அற்புதமான விஷயம். “மறைந்து கிடக்கும் பலரின் திறமைகளை வெளிக் கொணரவே இதை எடுத்தேன். தொடர்ந்து இது போல எடுப்பேன்” என்று கூறும் ஜி ஸ்டுடியோஸ் சி.ஆர். வெங்கடேஷ், விரைவில் வெள்ளித் திரையிலும் கால் பதித்து வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்.

1 கருத்து:

  1. இந்த படம் ஒரு நல்லா கருத்தை உள்ளடக்கி உள்ளது....இப்படத்தைப்பார்க்க என்ன செய்யவேண்டும் ...எந்த வலையில் இது சிக்கும்..... நன்றி... ரமணி , ramanis49@gmail.com

    பதிலளிநீக்கு