ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

கருணாநிதி தமிழகத்துக்கு வஞ்சகம் இழைத்துவிட்டார் : செயலலிதா

கருணாநிதி தமிழகத்துக்கு வஞ்சகம் இழைத்துவிட்டார் : செயலலிதா

தமிழகத்திற்கு நிதிச் சுமையை தரக் கூடிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க. மக்களவை உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து, திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்துக்கு  துரோகம் இழைத்து விட்டார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னலத்திற்காக, “காவிரி நதிநீர்ப் பங்கீடு”, “கச்சத்தீவு தாரைவார்ப்பு”, “இலங்கைத் தமிழர் பிரச்சனை”, “சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு” என பல்வேறு பிரச்சனைகளில் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்த தி.மு.க. தலைவர். கருணாநிதி, தமிழக மக்களின் எதிர்ப்பையும் தாண்டி, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கக் கூடிய, தமிழகத்திற்கு நிதிச் சுமையை தரக் கூடிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க. மக்களவை உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து துரோகம் இழைத்துள்ளதைப் பார்க்கும் போது, “எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?” என்ற பழமொழியைத் தான் நினைக்கத் தோன்றுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை அறிமுகப்படுத்தி, மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு முன்னர், இதனால் தமிழகத்திற்கு ஏற்படக் கூடிய பாதகங்களை சுட்டிக் காட்டி, இந்த மசோதாவை தி.மு.க. ஆதரிக்குமா அல்லது எதிர்க்குமா என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தேன்.
அதற்கு “தற்போதுள்ள மசோதா, பல்வேறு கட்சியினரும் எடுத்துத் தெரிவித்துள்ள, முக்கியமான திருத்தங்களைத் தாங்கி வெளிவருமானால் அப்போது அதனை தி.மு.க. ஆதரிக்கும்! திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல், இதே நிலையில் தான் கொண்டு வருவோம் என்று மத்திய அரசு உறுதியாகத் தெரிவித்தால் அப்போது அந்த மசோதாவினை தி.மு.க. எதிர்க்கும்” என்று பதில் அளித்து இருந்தார் கருணாநிதி.
25.8.2013 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், “என்னுடைய தொடர் வலியுறுத்தலுக்குப் பின், மாநிலங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவு குறைக்கப்பட மாட்டாது என்ற திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.  அதே சமயத்தில், ஆண்டு ஒன்றுக்கு 21.88 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதத்தில் வழங்க வகை செய்துள்ள மத்திய அரசு, மீதமுள்ள 
 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசிக்கான விலையை குறிப்பிடவில்லை’’ எனச் சுட்டிக் காட்டியதோடு, இந்த 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்படுவதே நியாயம்; இருப்பினும் குறைந்தபட்சம் வறுமைக் கோட்டிற்கு மேல் என வழங்கப்பட்டு வரும் அரிசியின் விலையான கிலோ ஒன்றுக்கு   8 ரூபாய் 30 காசு என்ற வீதத்திலாவது இந்த 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தேன்.  இதைத் தவிர, இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து நான் பாரதப் பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அந்த அறிக்கையில் எடுத்துக் கூறி, ``தமிழக மக்களுக்கு எதிராக அமைந்துள்ள இந்த மசோதாவை கருணாநிதி ஆதரித்தால் அது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம்’’ என்றும் எடுத்துச் சொல்லியிருந்தேன்.
இதன் தொடர்ச்சியாக, 26.8.2013 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசே 14.90 லட்சம் டன் அரிசிக்கு விலை நிர்ணயம் செய்வது என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக் கொள்ளாது’’ என்றும், ``அந்த அரிசியும் கிலோ ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 8.30 ரூபாய் விலையிலேயே தொடர்ந்து வழங்கப்படும் என்பதை மத்திய அரசு தெளிவாக்க வேண்டும்’’ என்றும், ``தி.மு.க. சார்பில் கடந்த 21.8.2013 அன்றே நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் அவர்களிடம் கடிதம் மூலமாக உறுதியான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 
தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் 26.8.2013 அன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்ட திருத்தம் மசோதா நிறைவேறும் தருணத்தில் கொண்டுவரப்படும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் அறிவித்தும், கடைசி வரை இதற்கான திருத்தம் கொண்டு வரப்படவில்லை. மேலும், மற்ற திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், இந்த மசோதாவினை எதிர்த்து அதிமுக வாக்களித்தது. ஆனால், தமிழகத்திற்கு எதிரான இந்த மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து தமிழகத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கருணாநிதி இழைத்திருக்கிறார்.
நான் ஏற்கெனவே பல முறை தெரிவித்துள்ளபடி, மாநிலங்களுக்குச் சட்டப்படி கொடுக்கப்பட வேண்டிய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கவில்லையெனில் அதற்குரிய ரொக்கப் பணம் வழங்கப்படும் எனவும், ஆனால் உணவு தானியங்கள் வழங்க வேண்டிய பொறுப்பு மாநில அரசைச் சாரும் எனவும் சட்டப் பிரிவு 23-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, இந்த மசோதாவுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை-1 இல் அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், குறைந்தபட்ச ஆதார விலைக்கு மிகாமல் அரிசியின் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும், “உணவுக் கூப்பன்கள்” வழங்குவது, “பண மாற்றம் செய்வது” ஆகியவற்றை மத்திய அரசு மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமலேயே நடைமுறைப்படுத்தவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், இந்த தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவின் 37-வது பிரிவில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே தன்னிச்சையாக மாநிலங்களுக்கு அளிக்கப்படும் அரிசியின் அளவையும், விலையையும் மாற்றுவதற்குரிய அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிக்க இந்தச் சட்ட முன்வடிவில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட தமிழகத்திற்கு எதிரான மசோதாவை ஆதரித்துவிட்டு, “ஏழைகளுக்கான உணவு மசோதா தி.மு.க. ஆதரவுடன் நிறைவேறியது!” என்று தன் முதுகை தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி. 
இந்த மசோதாவை ஆதரித்ததோடு நின்று விடாமல், தமிழகத்திற்கு எதிரான இந்த மசோதாவை ஆதரித்ததை மறைக்கும் வகையில், காங்கிரஸ் கட்சித் தலைவரை ‘மணிமேகலை’ என்று வருணித்து இருக்கிறார் கருணாநிதி. இதன் மூலம், இந்த மசோதா உணவுப் பாதுகாப்பை அளிக்கும் என்ற பொய்மை தோற்றத்தை ஏற்படுத்த முனைந்துள்ளார் கருணாநிதி.
 இலங்கைத் தமிழர் பிரச்சனை, பொருளாதாரக் கொள்கை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, கச்சத் தீவு பிரச்சனை, காவிரிப் பிரச்சனை, முல்லைப்பெரியாறு பிரச்சனை என அனைத்திலும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே செயல்படும் மத்திய காங்கிரஸ் கட்சிக்கு வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
சொல்வா ரடீ! கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி!’’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன. 
தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை தி.மு.க. ஆதரித்துள்ளதன் மூலம் இரட்டை வேடம் போடுவதில் கருணாநிதி தெளிவாக இருப்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. கருணாநிதியின் இரட்டை வேடத்திற்கு, தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள்(10)

200% உண்மை. இது என்ன இப்போ நேத்தா நடக்குது .. முள்ளிவாய்க்கால் ல தொடங்கி மகள் மாநிலங்கள் அவையில் இடம் பெரும் வரையில் ஏற்கனவே தொடங்குனதுதானே
திரு மு. கருணாநிதியின் இதுபோன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்பொழுது மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வந்த ஆதரவு வாபஸ் இயற்க்கையானாதாக இல்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. மேலும், முதலில் அளித்துவந்தது நிபந்தயுடன் ஆதரவு தற்போது அளித்து வருவது நிபந்தனையற்ற ஆதரவு என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டுக் களவாணிகள் என்ற எண்ணம் தமிழக மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் என்று தமிழக மக்கள் நினைக்க மாட்டார்களா?
லூப் லைன்லே தலை வச்சிப் படுத்து "கல்லக்குடி கொண்டான்" அப்பிடின்னு பட்டம் வாங்குனாரு. இப்போ அந்த அம்மாவுக்கு "மணிமேகலை" அப்பிடின்னு பெயரைக் கொடுத்து தன குடும்பத்தை இன்னும் நல்ல வச்சிகிட்டாரு. இதுக்கு பேரு துரோகமா?
இந்த உணவு பாதுகாப்பு சட்டமே ஏற்கெனவே உள்ள பொது விநியோக முறைக்கு முற்று புள்ளி வைக்க ஐ எம் எப் ,அமேரிக்கா தரும் அழுத்தம் காரணமாக கொண்டுவரப்பட்ட சட்டம் தான்.இந்தியாவில் எல்லோரும் எல்லாவற்றிற்கும் அன்னியரை எதிர்நோக்க வைக்கும் அடிமை சாசனத்தின் முதல் அத்தியாயம் இந்த மசோதா.இதை வாய் கிழிய வழி மொழிந்த நவீன ஆபுத்திரனுக்கும்,நவீன காய சண்டிகை(மணிமேகலை அல்ல)க்கும் மக்கள் 2014 இல் தக்க பாடம் புகட்டுவார்கள்..
இந்தப் பல்லவியை இனி எத்தனை நாட்கள்தான் பாடிக் கொண்டிருப்பது? கச்சத் தீவை கலைஞர் தாரைவார்த்தது உண்மையென்றால் தமிழர்கள் இதுநாள்வரை அவரை சும்மா விட்டு வைத்திருக்க மாட்டார்கள்.அன்று, மத்திய அரசுக்கு கடுமையான எதிர்ப்பைக் கொடுக்க தவறிவிட்டார். இதுதான் உண்மை. அன்று இலங்கை தமிழர் படுகொலை செய்யப் பட்ட நிலையில் அவர் மத்திய அரசை விட்டு உடனே வெளியேறி இருந்திருக்கவேண்டும். வெளியேறி இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சியும் இங்கு வெளியேறியிருக்கும். தமிழக ஆட்சியும் கவிழ்ந்திருக்கும். "நாம்" கட்சித் தலைவர் சீமான் சொன்னதுபோல் இலங்கையில் ஒவ்வொருக் கணமும் தமிழர் பிணங்கள் விழுந்துக் கொண்டு இருக்கின்ற நேரத்தில் இங்கு ஆட்சியையும் ஒருக் கேடா என்று வேதனைபட்டதும் நியாயம்தான். ஆனால், ஈழ மக்களைக் காப்பாற்ற, அன்று வலுவான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, திமுக விற்கு ஆதரவு நல்கியிருக்கலாம்.செய்யவில்லையே உச்சநீதி மன்றத்தில் கச்சத் தீவைப் பற்றி மத்திய அரசு சொன்னது தமிழர்களுக்கே ஒரு பெரும் அதிர்ச்சிதானே!தீவு இலங்கைக் கடலோரப் பகுதிக்குள் வருகின்றதாம்.தமிழர்களுக்கு அங்கு மீன் பிடிக்கின்ற உரிமையில்லையாம்.இது எப்படியிருக்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக