ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_79291520130831225149.jpg

முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே, கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில், கிடைத்த பொருட்களில், சிந்து ச் சமவெளி நாகரிக மக்களின் பெருங்கற்கால குறியீடுகள் உள்ளன. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த, தர்மநல்லூரில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., வரலாற்றுத் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தர்மநல்லூர், இலுப்பை தோப்பில், வீடு கட்ட மண் எடுத்தபோது, 20 அடி ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று இருப்பது தெரிந்தது வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், அங்கு சென்று, 180 செ.மீ., உயரம், 90 செ.மீ., அகலமுள்ள, முதுமக்கள் தாழியை, தோண்டி எடுத்தனர். தாழிக்குள், கருப்பு சிவப்பு நிறத்தில் நான்கு மண் பானைகள், சுடுமண் பொம்மைகள், 15 செ.மீ., இரும்பு வாள், சில்லு கருவிகள், மனிதனின் எலும்புக் கூடு ஆகியவை இருந்தன. அதன் அருகே, 77 செ.மீ., உயரம், 18 செ.மீ., அகலம், 235 செ.மீ., சுற்றளவுடைய சுடு மண் உறை கிணறு ஒன்றும் இருந்தது. பேராசிரியர்கள் சிவராமகிருஷ்ணன், கலைச்செல்வன் கூறியதாவது:விருத்தாசலம் அடுத்த, தர்மநல்லூரில், 2,200 ஆண்டுகளுக்கு முன், ஐந்து ஏக்கர் பரப்பளவில் பெரும் கற்கால பண்பாடு நிலவி இருந்துள்ளது.தற்போது கண்டெடுத்தது, அக்கால மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி. அதிலிருந்து எடுத்த மண் பானைகளில் பெருங்கற்கால குறியீடுகள் உள்ளன. இக்குறியீடுகள் சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் காணப்படுகின்றன. பெருங்கற்கால குறியீட்டுப் பொருட்கள் கண்டெடுப்பது கடலூர் மாவட்டத்தில் இதுவே முதல்முறை.எலும்புக் கூடு, மரபணு சோதனைக்கு அனுப்பப்படும். கண்டெடுத்த சுடு மண் உறை கிணறு, 800 ஆண்டுகளுக்கு முன், 12ம் நூற்றாண்டை சேர்ந்த இடைக்கால மக்கள் பயன்படுத்தியது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக