புதன், 4 செப்டம்பர், 2013

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாளே, ஆசிரியர் நாள்!


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj84HBdmMbq1SV6b5pBKQT2ntpMODLnF8YqB7L0WKCkjHI8nY8uvb5JNVcSdYiSII9x6gd4AojFniTxjzCB2FwiCImwqN9_KMjDt0rfHmGbKh5oky1KaJCqqcC8VF8LXs11jz6ffeTHDec/s640/40-NinaivuNaal.png


பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாளே
 ஆசிரியர் நாள்!
செயலர் கெ.பக்தவத்சலம் அறிவிப்பு
நேற்று (செப்.3.2013) சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவரங்கமும் செந்தமிழ்ச்செம்மல் சி.இலக்குவனார் நூலின் அறிமுகமும் நடைபெற்றது.
வரவேற்புரையில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், பேராசிரியரின் தமிழ்நலப்பணிகளை நினைவுகூர்ந்து எழுச்சியுரை ஆற்றினார்.
முனைவர் ப.இரா.அரங்கசாமி, 'மொழிப்போர் தந்தை' என்ற முறையிலான பேராசிரியர் செயல்பாடு குறித்து வீர உரை  ஆற்றினார்.
கண்ணியம் குலோத்துங்கன் அவர்கள் நலக்குறைவால் வர இயலவில்லை.
புலவர் உதயை  மு.வீரையன் நினைவுரையும் நூல் அறிமுக உரையும் ஆற்றினார்.
இறுதியில் நன்றியுரை ஆற்றிய  ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலர் பொறி.கெ.பக்தவத்சலம், கடந்த 30 ஆண்டுகளாகப்  பேராசிரியரின் நினைவு நாளைக் கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர், “செப்டம்பர் 5 என்பதை ஆசிரியர் நாளாகக்  கொண்டாடி வருகின்றனர். ஆனால், கல்லூரிகளில் மட்டும் இல்லாமல் களத்திலும் பேராசிரியராகச் செயல்பட்ட தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவுநாளே எங்களுக்கு ஆசிரியர் நாள். எனவேதான், தொடர்ந்து அவர் நினைவுநாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடி வருகிறோம். தமிழ் மக்களும் பேராசிரியர் நினைவுநாளான செப். 3 ஆம் நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியருடன் தொடர்புடையதாக ஆசிரியர் நாள் அமைய வேண்டும். அந்த வகையில் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவுநாளான செப்.3 ஆம் நாள் ஆசிரியர் நாள் என்பதற்கு வந்திருந்தோரும் வரவேற்பு தெரிவித்தனர்.
நாமும் நடைமுறைப்படுத்தலாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக