புதன், 28 ஆகஸ்ட், 2013

திருமணப் போர்வையில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி!



இக்கொடுமை புதிய நிகழ்வுமல்ல; என்றோ நடக்கும் அரிதான நிகழ்வும் அல்ல! தொண்டு நிறுவனங்களின் விளம்பரப்படுத்தப்படும்  ஒரு முகம் அருள்முகமாகும்; மறைக்கப்படும் மறு முகம் கொடூரமானதாகும். ஆதரவற்ற குழந்தைகள் இருப்பின், அழகான குழந்தைகளே தத்து எடுக்கப்படும் எனப் பாகுபாடுகாட்டி வளர்த்தல்; தத்து என்ற பெயரில் அழகான குழந்தைகளை விற்றல்  சிறுவர் சிறுமியரின் முகம் காணாமல் அயலகத்தில் உள்ள தத்துப் பெற்றோரர்களிடம் குழந்தைகளுக்கான அன்பளிப்பு என்ற பெயரில் பொருள்களைப் பறித்தல் என மறுமுகம் வெறுக்கத்தக்கதாகும். தொண்டு நிறுவனங்களின் கைகளுக்கும் கால்களுக்கும் பூட்டுகள்போட்டால்தான் இவை நிற்கும்.  இந்த  நேர்வில் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அனைவருக்கும் தண்டனை தருவதுடன் அரபியருக்கும் கடுந்தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் திருமணப் போர்வையில் பரத்தையராகத் திரிவோர் தங்களை மாற்றிக் கொள்வர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

சிறுமிக்கு நிகழ்ந்த அநீதி: கேரளா முழுவதும் அதிர்ச்சி


திருவனந்தபுரம்:கேரளாவைச் சேர்ந்த, 17 வயது முஸ்லிம் சிறுமியை, அரபு ஷேக் ஒருவன் மணந்து, 17 நாட்களில் புறக்கணித்த விவகாரம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் இதுபோன்ற திருமணங்கள் நடக்காமல் தடுக்க, தகுந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என, சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
17 நாள் குடித்தனம்:

கோழிக்கோடு பகுதியில் செயல்படும், முசுலிம் அனாதை இல்லத்தில், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட சிறுமி, 4 வயது முதல் தங்கியிருந்தார். தற்போது, 17 வயதாகும் அந்தச் சிறுமியை, கடந்த ஜூன் மாதம், 13ம் தேதி, அரபு ஷேக் ஒருவர், முஸ்லிம் முறைப்படி மணந்து, சவுதி அரேபியா அழைத்துச் சென்று, 17 நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு, கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டார்.மாநில குழந்தைகள் கமிஷனை நேற்று முன்தினம் அணுகிய அந்தச் சிறுமி, தன்னை வலுக்கட்டாயமாக, ஷேக்குடன் திருமணம் செய்து வைத்த, அனாதை இல்ல நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போலீசில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.நீண்டகாலமாகவே இத்தகைய கொடுமையான சம்பவங்கள், அந்தப் பகுதியில் நடைபெற்று வருவது, இந்தச் சம்பவம் வெளியானதை அடுத்து பலருக்கும் தெரிய வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் இது போன்றதொரு சம்பவம், பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. படித்தவர்கள் நிறைந்த கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில், குறிப்பாக, மலபார் பகுதியில், இதுபோன்ற கொடுமைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு, அம்மாநில சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
படித்தவர் நிறைந்த மாநிலம் :

மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.கே.ஸ்ரீமதி இது குறித்து கூறுகையில், ""படித்தவர்கள் நிறைந்த கேரளாவில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை, ஏற்றுக் கொள்ளவே முடியாது. சம்பந்தப்பட்ட அனைவரும், தண்டிக்கப்பட வேண்டும். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல், ஆளும் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

அனைத்திந்திய மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர், பிந்து கிருஷ்ணா கூறும் போது, ""தொண்டு நிறுவனங்களும், அனாதை இல்லங்களும் கருணையோடு நடந்து கொள்ளும் என, பொதுவான கருத்து நிலவும் நேரத்தில், பணத்திற்காக, அப்பாவி சிறுமி, வெளிநாட்டைச் சேர்ந்தவனுக்கு திருமணம் செய்யப்பட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ளதை ஜீரணிக்கவே முடியாது,'' என்றார்.இதுபோல், பல சமூக அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும், கோழிக்கோடு அனாதை இல்ல சிறுமி திருமண விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக