வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

காந்தியடிகள் நற்பணிக் கழகம்!

காந்தியடிகள் நற்பணிக் கழகம்!

கும்பகோணத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்காக, இலவச கல்விச் சேவையில் ஈடுபடும், பாலசுப்ரமணியன்
: நான், வறுமை காரணமாக, 8ம் வகுப்பு மட்டுமே படித்து, மளிகை கடை நடத்தி வந்தேன். பின், கல்வி மீதான ஆர்வத்தால், எம்.ஏ., வரை படித்தேன். வறுமை என்ற ஒரே காரணத்திற்காக, ஒருவரின் படிப்பு பாதியிலேயே தடைப்பட்டு விட கூடாது என்பதால், நண்பர்கள் உதவியுடன், 1975ல், காந்தியடிகள் நற்பணி கழகத்தை ஆரம்பித்தேன். இங்கு, 10ம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு, இலவசமாக பாடம் எடுக்க ஆரம்பித்தோம். எங்களின் முறையான பயிற்சியின் மூலம், தேர்வில் பங்கேற்ற, 50 மாணவர்களும் வென்று, முதலாம் ஆண்டிலேயே, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல், பாதியிலேயே விட்டு விடுவதை அறிந்தேன். அம்மாணவர்களை தேடி பிடித்து, காலை, மாலை நேரங்களில், அவர்களுக்கு பாடம் நடத்தி, மேலும் அதிகம் படிக்க ஊக்கமூட்டினேன். கொத்தனார், பெயின்டர் என, பலவித வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கும், கல்வி கற்பித் தேன். தாராசுரம் பொன்னியம்மன் கோவில் தெருவை சுற்றி, சாராயம் காய்ச்சுபவர்களும், குடிகாரர்களும் நிறைந்திருந்தனர். அப்போது, அங்கு உள்ள இளைஞர்கள் உதவியுடன், காந்தியடிகள் சிலை வைத்தேன். பின், படிப்படியாக, அங்குள்ளோருக்கு நீதி போதனை வகுப்புகளும், கல்வியின் முக்கியத்துவத்தையும் விளக்கினேன். இன்று, அந்த கிராமமே மதுப் பழக்கமற்ற பகுதியாக மாறியது மட்டுமின்றி, பல இளைஞர்களும் நன்கு படித்து, உயர்ந்த நிலையில் உள்ளனர். பத்தாம் வகுப்பில் தோற்றவர்களுக்காக ஆரம்பிக்கப்ட்ட இக்கல்வி சேவை, தற்போது, பிளஸ் 2 மற்றும், தமிழக அரசின் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும், இலவசமாக பயிற்சியளிக்கும் வகையில், முன்னேறியுள்ளது. இங்கு இலவசமாக பயிற்சி பெற்று, தேர்வில் வென்றவர்களே பயிற்சியளிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக