திங்கள், 26 ஆகஸ்ட், 2013

அ.) கே.எம். பணிக்கரால் பறிபோன தமிழ் நிலம் ஆ.) மொழிபெயர் அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி

 

கருத்துகள்(1)

பணிக்கர் மற்றும் அன்றைய கொச்சி-திருவிதாங்கூர் முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை ஆடிய ஆட்டத்தால், பாலைக்காடு, இடுக்கி, நெய்யாற்றின்கரை, சபரிமலைப்பகுதிகளை மட்டுமன்று, மலபார் முதல் மங்களூர் வரை, நிறைய நிலப்பரப்புக்களைத் தமிழர் இழந்ததை நினைவுபடுத்திய ஆசிரியருக்கு நன்றிகள் கோடி!
பதிவுசெய்தவர்  08/25/2013 19:47

 

இந்த வார க் கலாஇரசிகன்

சேக்கிழார் அடிப்பொடிக்கும், தினமணிக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. "தினமணி'யைப் போலவே அகவை 80 இல் இந்த ஆண்டு அடியெடுத்து வைப்பவர். வழக்குரைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய டி.என்.ஆரைத் தமிழ் தனதாக்கிக் கொண்டது. எஸ்.வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் வரிசையில் தமிழால் கவரப்பட்டுக் கருப்புக் கோட்டை உதறியவர்களில் இவரும் ஒருவர்.
மகாகவி பாரதி "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்பார். ஆனால், இன்றைய தேவை தமிழிலுள்ள நல்லறிஞர் சாத்திரங்களைப் பிறமொழிகளில் பெயர்த்தல்தான் என்பது எனது கருத்து. என்னால் நினைக்கத்தான் முடிகிறது. டி.என்.ஆர். நிகழ்த்திக்காட்டிக் கொண்டிருக்கிறார்.
தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், பெரியபுராணம் என்பதுடன் நின்றுவிடாமல், பாரதியாரின் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கும் பெருமை சேக்கிழார் அடிப்பொடியைச் சாரும். தருமபுரம் ஆதீனத்தால் "சைவ சித்தாந்த கலாநிதி' பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட டி.என்.ஆருக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கி மரியாதை செலுத்தியதென்னவோ தமிழகமல்ல; யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்.
சமீபத்தில் இவர் வெளிக்கொணர்ந்திருக்கும் மொழிபெயர்ப்பு திருஞானசம்பந்தரின் முதலாம் திருமுறை. ஏனையோரைப் போல, வார்த்தைக்கு வார்த்தை போட்டு மொழிபெயர்க்கும் பாணியைக் கடைப்பிடிக்காமல், கவிதையின் உட்பொருளை உள்வாங்கிக்கொண்டு, மூலத்தின் எழுத்தையும், கருத்தையும் வெளிப்படுத்தும் மொழிபெயர்ப்பு சேக்கிழார் அடிப்பொடியினுடையது.
""இந்திய மொழிகளை, குறிப்பாக தமிழ்மொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கும்போது நமது மொழிபெயர்ப்பாளர்கள் மேலைநாட்டு மொழிபெயர்ப்பாளர்கள் கையாளும் உத்தியை கையாளக்கூடாது. மேலைநாட்டு மொழிபெயர்ப்புகள் கிரீக், லத்தீன் போன்ற மொழிகளை மொழிபெயர்ப்பதை அடிப்படையாகக் கொண்டவை. அந்த மொழிகளைப் போலவே பழைமையான மொழி நமது தமிழ். தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது எப்படி என்பதற்கு சரியான வழிகாட்டுபவர்கள் இல்லை. முடிந்தவரை நான் மூலத்தை எழுதிய புலவரின் பார்வையில்தான் எனது மொழிபெயர்ப்புகளை எழுதுகிறேன்'' என்கிறார் டி.என்.ஆர்.
பாரதியைக் கரைத்துக் குடித்திருக்கும் டி.என்.ஆரிடம் பேசும்போதுதான் தெரிகிறது, பாரதியை முழுமையாகப் புரிந்து கொண்டவர்கள் இல்லை என்பது. பாரதியை நாம் பார்க்கும் பார்வையே முழுமையானதல்ல, தவறானது என்பது டி.என்.ஆரின் கருத்து.
என்னிடம், யாருக்காவது வாழ்நாள் சாதனையாளர் விருது பரிந்துரைக்கக் கேட்டால், நான் தயங்காமல் சொல்லும் பெயர் "சேக்கிழார் அடிப்பொடி' டி.என்.ராமச்சந்திரன் என்பதாகத்தான் இருக்கும்.
புத்தகக் குவியலுக்குள் அமர்ந்து படிப்பதும், எழுதுவதுமாகக் கழிக்கும் டி.என்.ஆரின் சிறப்பு -
சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாமல், தமிழை உலகறியச் செய்து கொண்டிருப்பது. தமிழாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கே.எம். பணிக்கரால் பறிபோன தமிழ் நிலம்
 

இராசசுதானிலுள்ள பிகானிர் சமசுதானத்தின் திவானாக இருந்த "சர்தார்' கே.எம்.பணிக்கர், சுதந்திர இந்தியாவில் சீனாவின் இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டார். பல நாடுகளில் தூதுவராக அவர் இருந்தாலும்கூட, "சர்தார்' கே.எம்.பணிக்கர் என்கிற பெயர், அவர் மாநில சீரமைப்புக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டபோதுதான் பரவலாகப் பிரபலமானது.
ஜஸ்டிஸ் மகன் பசல் அலி, பண்டித எச்.என். குன்ஸ்ரூ ஆகியோருடன் மாநில சீரமைப்புக் குழுவின் மூன்றாவது உறுப்பினராக இருந்த கே.எம். பணிக்கர், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய பங்களிப்பு நல்கியவர். ஒரு வகையில் பார்த்தால் தமிழகத்தை வஞ்சித்தவர் என்று அவரை விமர்சிக்கலாம் என்றாலும், மாநிலங்களை மொழிவாரியாகப் பிரித்து அமைத்த பெரும்பணியில் அவரது பங்களிப்பை மறுக்க முடியாது.
சமீபத்தில் தெலுங்கானா பிரச்னை பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தபோது, சர்தார் கே.எம்.பணிக்கரின் சுயசரிதையில், ஆந்திர மாநிலம் உருவானதைப் பற்றி அவர் எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது. கே.எம்.பணிக்கரின் சுயசரிதை "என் வாழ்க்கை' என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு, அதை வாங்கிவரச் செய்தேன்.
சிலருடைய வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். மிகப்பெரிய சாதனைகள் தத்தம் பணியில் செய்திருப்பார்கள். ஆனால், சுயசரிதை என்று வரும்போது அது அடுத்தவர்களைக் கவரும்படியாகவோ, பயன்படும் விதத்திலோ, சிந்தனையைத் தூண்டும் விதத்திலோ இல்லாமல் இருக்கும். தனிப்பட்ட முறையில் பெரிய பொறுப்புகளை வகித்து சாதனைகள் நிகழ்த்தியவர் சர்தார் பணிக்கர். ஆனால், அவரது சுயசரிதை மேலே குறிப்பிட்டதைப் போல சுவாரஸ்யமானது என்று கூறிவிட முடியாது.
ஆனால், அடிமை இந்தியா சுதந்திர இந்தியாவாக மாறிய காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், சந்தித்த சவால்களையும் தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார் சர்தார் பணிக்கர். குறிப்பாக, மாநில சீரமைப்புக் குழுவின் பணிகள் பற்றியவை, ஆவணங்கள். அதேபோல, முகலாய சரித்திரம் பற்றியும், சமஸ்தானங்கள் பற்றியும் பணிக்கர் தெரிவித்திருக்கும் கருத்துகள் இந்திய சரித்திரத்தில் அக்கறை உள்ளவர்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக