சிங்கள இறையாண்மையைக் காப்பதுதான் எங்கள் வேலையே தவிர, இந்திய இறையாண்மை குறித்தோ மனித நேயம் குறித்தோ எங்களுக்குக் கவலை இல்லை. இப்படிக்கு இந்திய அரசு. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
தமிழக மீனவர்கள் கைது- இந்திய இறையாண்மை மீதான தாக்குதல்: இராமதாசு
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, இந்திய இறையாண்மை மீதான தாக்குதல் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
இராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற
மீனவர்கள் 35 பேரை சிங்களக் கடற்படையினர் நேற்று கைது செய்து சிறையில்
அடைத்துள்ளனர். இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்
தக்கது.
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைப் படையின் இந்த நடவடிக்கை
திட்டமிட்டு மேற்கொள்ளப் படும் ஒன்றாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் இராஜபக்சே, தமிழக மீனவர்களை கைது
செய்தால் குறைந்தது மூன்று மாதமாவது சிறையில் அடைத்த பிறகு தான் விடுதலை
செய்வோம் என்று எச்சரித்திருந்தார். அதன்பிறகு தான் தமிழக மீனவர்கள் அதிக
அளவில் கைது செய்யப்படுவதும், மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்படுவதும்
வழக்கமாகி விட்டது.
தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக்
கொண்டிருந்தாலும் கூட அவர்களை சிங்களப்படையினர் அத்துமீறி நுழைந்து கைது
செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நேற்று கூட இராமேஸ்வரம் மீனவர்கள்
தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட இந்திய கடல் எல்லைக்குள் மீன்
பிடித்துக் கொண்டிருந்த போது தான் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே
தமிழகத்தைச் சேர்ந்த 106 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் மீதான வழக்கு
விசாரணை முடிவடைந்து எப்போது விடுதலை ஆவார்கள் என்பதை யூகிக்கக் கூட
முடியவில்லை. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது ஒரு புறமிருக்க நேற்று
அதிகாலை கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம்
பகுதி மீனவர்களை இலங்கைப் படையினர் கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.
கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும்படி
அழைப்பதற்காக அண்மையில் தில்லி வந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்
ஜி.எல். பெரிசிடம், இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள்
அனைவரையும் விடுதலை செய்யும்படி பிரதமர் வலியுறுத்தினார். அதற்கு முன்பு
இதே கோரிக்கை இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்திடம்
வலியுறுத்தப்பட்டது. ஆனால், பிரதமரின் கோரிக்கை மீது இலங்கை இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மேலும் 35 மீனவர்கள் கைது
செய்யப்பட்டிருப்பது இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
உலகின் வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து வருவதாக கூறப்படும்
நிலையில், இந்தியாவுக்கு சவால் விடுக்கும் வகையில் இலங்கை நடந்து
கொள்வதும், அதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் உலக அரங்கில்
இந்தியாவுக்கு உள்ள மதிப்பை குலைத்து விடும். இந்தியாவை இலங்கை சற்றும்
மதிக்காத நிலையில், அந்த நாடு நடத்தும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில்
பிரதமர் கலந்து கொண்டால் அவமானப்படுத்தப்பட்ட விருந்தாளியாகத்தான்
கருதப்படுவார்.
எனவே, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய இறையாண்மைக்கு
விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு, கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும்
24 மணி நேரத்திற்குள் விடுதலை செய்யும்படி இலங்கை அரசை பிரதமர் எச்சரிக்க
வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை அரசின் இனப்படுகொலைகளையும்,
போர்க்குற்றங்களையும் கண்டிக்கும் வகையில் வரும் நவம்பர் மாதம் இலங்கையில்
நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்துவாடும் அவர்களின்
குடும்பங்களுக்கு தமிழக அரசி நிதிஉதவி அளிக்க வேண்டும் என்று
வலியுறுத்துகிறேன்.
- என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக