திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மொழி ஆய்வுக்குப் பன்மொழி அறிவு:பாப்பையா

மொழி ஆய்வுக்குப் பன்மொழி அறிவு கட்டாயத்தேவ‌ை: சாலமன் பாப்பையா









மொழி ஆய்வுக்கு பன்மொழி அறிவு மிகவும் அவசியம் என்றும் அப்போதுதான் நம் மொழி பற்றி தெளிவைப் பெற முடியும் என்றும், பேராசிரியர் சாலமன் பாப்பையா கேட்டுக் கொண்டார்.
தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில், திருக்குறள் ஆராய்ச்சி மையத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திருக்குறள் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கிவைத்து சாலமன்
பாப்பையா ஆற்றிய உரை:
தில்லிவாழ் மக்கள் திருக்குறள் பற்றி அறிந்து கொள்ளும் புதிய வேள்வியாக தில்லி தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடங்கிவைப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
திருக்குறளில் ஆராய்ச்சி என வரும் போது, மிக நுணுக்கமாக ஆய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணி. அக்காலத்தில் திருக்குறளை வீதியோர சாதாரண மனிதருக்கும் கிடைக்கச் செய்ய மு. வரதராசனார் போன்றோர் முயற்சிகள் மேற்கொண்டனர். அவருக்கு முன்பாக வீரமாமுனிவர் 250 குறள்களுக்கு உரை எழுதி, படிப்பறிவற்ற மக்களும் படித்துப் பயன்பெற வழிகண்டார்.
திருக்குறள் போன்ற இலக்கிய நூல்களை அனைவரும் பயன்பெறும் வகையில் பதிப்பித்து வெளியிடுவதில் திருப்பனந்தாள் திருமடம் போன்ற அமைப்புகளின் பணி போற்றத்தக்கது.
மொழி ஆய்வுக்கு பன்மொழி அறிவு மிகவும் அவசியமாகிறது. அப்போதுதான் நம் மொழி பற்றி தெளிவைப் பெற முடியும். ஆய்வையும் தெளிவாகச் செய்யும் முடியும் என்றார் சாலமன் பாப்பையா.
தில்லி தமிழ்ச் சங்கத் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி ஆற்றிய தலைமையுரை: தில்லி தமிழ்ச் சங்கத்தைப் பொருத்தமட்டில், எனக்கு 6 கனவுகள் இருந்தன. அதில் நான்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. திருக்குறள் ஆராய்ச்சி மையம் அமைப்பது குறித்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
மேலும், சங்கத்தில் இசை, நாட்டியக் கல்லூரி அமைக்கும் கனவு நிறைவேற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, தில்லிவாழ் தமிழர்களும் தங்களுக்குள்ள கருத்து வேறுபாடு, மனமாச்சரியங்களை மறந்து தில்லி தமிழ்ச் சங்கப் பணிக்கான வளர்ச்சியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அக்கனவும் நிறைவேறும். இதற்கான முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும்.
ஏழாவது கனவாக தற்போது எனக்கு ஒன்று ஏற்பட்டுள்ளது. அது திருவள்ளுவர் போன்று கம்பனுக்கும் விழா எடுப்பதாகும். ஒவ்வொரு ஆண்டும் தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் கம்பன் விழா எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னதாக, தில்லி தமிழ்ச் சங்கச் செயற்குழு உறுப்பினர் எம். ஆறுமுகம் தொடக்கவுரையாற்றினார். அவர் பேசுகையில், "புதிய கருத்துகளை உள்ளடக்கி, எழுதப்பட்ட திருக்குறள் சிந்தனைப் பெட்டமாகத் திகழ்கிறது. இந்த ஆராய்ச்சி மையத்தைத் தொடர்ந்து, விரைவில் இசைக் கல்லூரியும் தொடங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
தில்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் மாரியப்பன், தில்லி தமிழ்ச் சங்க முன்னாள் துணைத் தலைவர் புலவர் ரா. விஸ்வநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
சங்கச் செயற்குழு உறுப்பினர் பி. சங்கர் நன்றி கூறினார். விழாவில் சாலமன் பாப்பையாவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திருக்குறள் செம்மல் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகளும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
"திருக்குறளை குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும்'
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காசிமடம், இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் வாழ்த்திப் பேசியது:
எந்த ஓர் இனம் சிந்தனை உடையதாக இருக்கிறதோ, அந்த இனத்தின் மொழி வளமுடையதாகிறது. அந்த மொழி வளம்பெறும் போது சிந்தனையும் மேலும் வளம்பெறும்.
1,000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களின் சிந்தனை பெற்றவர்களாக விளங்கினர். அதனால், தமிழும் வளமுடையதாக விளங்குகிறது. திருக்குறளில் இல்லாத கருத்துகளே இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு திருக்குறள் படிக்க ஆர்வம் பெறச் செய்ய வேண்டும். தாங்களே திருக்குறளை ஆர்வமுடன் படிப்பதுடன், குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும். திருமடத்தின் திருக்குறள் அறக்கட்டளை மூலமும், திருமடத்தின் மூலமும் திருக்குறளை அடக்க விலைக்கே பதிப்பித்து வழங்கி வருகிறோம் என்றார் தம்பிரான் சுவாமிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக