வியாழன், 29 ஆகஸ்ட், 2013

மூளைச்சாவு: விசைத்தறியாளரின் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_791042.jpg

மூளைச்சாவு அடைந்த விசைத்தறியாளரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு க் கிடைத்தது மறுவாழ்வு
அவிநாசி:அவிநாசி அருகே, சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, விசைத்தறி உரிமையாளரின் உடல் உறுப்புகள், தானம் அளிக்கப்பட்டன. அதனால், ஏழு பேர் மறு வாழ்வு பெற்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தண்ணீர்ப்பந்தல் பாளையத்தை சேர்ந்தவர், சிவசாமி, 57; விசைத்தறி உரிமையாளர். தெக்கலூர் விசைத்தறி உரிமையாளர் நலச்சங்க பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். கடந்த, 21ம் தேதி காலை, இருசக்கர வாகனத்தில், அன்னூர் சென்றார்.நாகம்மா புதூர் பிரிவில் சென்றபோது, எதிரே வந்த பைக் மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள், கே.ஜி., மருத்துவமனையில் சேர்த்தனர். 23ம் தேதி, அவரது மூளை செயலிழந்தது. இதுபற்றி, டாக்டர்கள், சிவசாமியின் மனைவி மல்லிகா, மகன் அய்யாசாமி, மகள் செல்வி ஆகியோரிடம் தெரிவித்தனர்.உறுப்பு தானம் பற்றி அறிந்திருந்த, அவரது குடும்பத்தினர், சிவசாமியின் உறுப்புகளை தானம் அளிக்க, சம்மதம் தெரிவித்தனர். கே.ஜி., மருத்துவமனையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மருத்துவமனை தலைவர், பக்தவச்சலம் தலைமையில், மருத்துவ குழுவினர், அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிறுநீரகங்கள், கண்கள், இதய வால்வுகள், கல்லீரல் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டு, ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன.

டாக்டர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ""விபத்தில் மூளைச்சாவு அடைந்த, சிவசாமியின் இரு சிறு நீரகங்களும், இரு கண்களும், கே.ஜி., மருத்துவமனையில் சிகிச்சை பெறும், நான்கு பேருக்கு, தலா ஒன்று வீதமும், இரண்டு இதய வால்வுகள், சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவருக்கு, தலா ஒன்று வீதமும், சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு, கல்லீரலும், வெற்றிகரமாக பொருத்தப்பட்டன,'' என்றார்.

சிவசாமியின் உடல் உறுப்புகளை தானம் பெற்று, ஏழு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதை அறிந்த, உப்பிலிபாளையம் கிராம மக்கள், அவரது குடும்பத்தினரை நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக