திரைப்பட இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் (59) சென்னையில் சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட மணிவண்ணன், சில ஆண்டுகளுக்கு
முன் முதுகு தண்டுவடப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒரு வார காலமாக வெளியில் எங்கும்
செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மதியம்
ராமாவரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்தபோது, 12 மணிக்கு அவருக்கு
திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு
முன்பாகவே அவர் உயிர் பிரிந்தது.
கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த மணிவண்ணன் இயக்குநர் பாரதிராஜாவின்
உதவியாளராக திரையுலகில் நுழைந்தார். "கல்லுக்குள் ஈரம்', "காதல் ஓவியம்',
"அலைகள் ஓய்வதில்லை', "நிழல்கள்' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியதுடன்,
பாரதிராஜாவின் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
1982-ஆம் ஆண்டு வெளிவந்த "கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தின் மூலம்
இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து "24 மணி நேரம்', "நூறாவது நாள்',
"முதல் வசந்தம்', "பாலைவன ரோஜாக்கள்', "ஜல்லிக்கட்டு', "சின்னத்தம்பி
பெரியதம்பி', "அமைதிப்படை' உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் திரையுலகில்
முத்திரைப் பதித்தார். கடந்த மாதம் அவர் இயக்கத்தில் 50-ஆவது படமாக "நாகராஜ
சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' வெளியானது.
ரஜினிகாந்த் நடித்து 1988-ஆம் ஆண்டு வெளிவந்த "கொடி பறக்குது' படத்தின்
மூலம் மணிவண்ணனை வில்லனாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாரதிராஜா. அதைத்
தொடர்ந்து வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர பாத்திரங்களில் தன் நடிப்பை
வெளிப்படுத்தினார். "உள்ளத்தை அள்ளித்தா', "அமைதிப்படை', "முகவரி',
"காதலுக்கு மரியாதை', "சங்கமம்', "பொற்காலம்' உள்ளிட்ட 450-க்கும் அதிகமான
படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக் கொண்டு வந்தார். இறுதியாக "நான்
ராஜாவாகப் போகிறேன்' படத்தில் நடித்திருந்தார்.
வலது கால் பகுதியில் சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பின்
பெரிதும் உடல் நலிவுற்றார். தமிழ் ஈழ ஆதரவு கொள்கைகளில் தொடர்ந்து
செயல்பட்டு வந்தார்.
திரையுலகினர் அஞ்சலி: மணிவண்ணன் உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ்,
ஷக்தி, சிவகார்த்திகேயன், செந்தில், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ்,
விவேக், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் ஆர்.சி.சக்தி, அமீர், கஸ்தூரிராஜா,
பார்த்திபன், புகழேந்தி தங்கராஜ், பாக்யராஜ், இயக்குநர் சங்கத் தலைவர்
விக்ரமன், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகைகள் சரண்யா, வடிவுக்கரசி, அனுராதா,
கவிஞர்கள் அறிவுமதி, சினேகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி
செலுத்தினர். ஏராளமான பொது மக்களும் மணிவண்ணனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி
செலுத்தினர்.
இறுதிச் சடங்கு: மணிவண்ணனுக்கு செங்கமலம் என்கிற மனைவி, மகள் ஜோதி, மகன்
ரகுவண்ணன் ஆகியோர் உள்ளனர். மகள் ஜோதிக்கு திருமணம் முடிந்துவிட்டது.
"மாறன்', "நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' ஆகிய படங்களில் நடித்துள்ள
ரகுவண்ணனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. மணிவண்ணனின் உடல் ராமாவரம்
ஜெய்பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டுள்ளது. அவரது வேண்டுகோளின்படி மணிவண்ணனின் உடல் மீது புலி
உருவம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கொடி போர்த்தப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை மாலை போரூர் மின் மயானத்தில் நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக