திங்கள், 17 ஜூன், 2013

கோடியிலும் கிடைக்காத மன நிறைவு

கோடியிலும் கிடைக்காத மன நிறைவு
மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரங்களில் சுற்றி திரிபவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும், வெங்கடேசு: நான், சென்னை திரு வான்மியூரைச் சேர்ந்தவன். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கி றேன். கூரியர் டெலிவரி, மருத்துவமனையில் வார்டு பாய், கம்பி கட்டுவது என, நான் பார்க்காத வேலையே இல்லை. இருந்தாலும், கிடைக்கிற ஓய்வு நேரங்களில், நூலகத்திற்கு செல்லும் பழக்கம் இருந்தது. புத்தர், நபிகள் நாயகம், வள்ளலார் போன்றோரின், புத்தகங்களை படித்த போது, அன்பு ஒன்றை மட்டுமே அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இக்கருத்துக்கள், என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்தன. 1995ல், திருவான்மியூர் பகுதியில், அரை நிர்வாணமாக, ஒரு வட மாநில பெண் சுற்றி திரிந்தார். மற்றவர்கள் வேடிக்கை பார்க்க, நான் முன்வந்து அவரை காப்பகத்தில் சேர்த்து வீடு திரும்பிய போது, எனக்கு ஏற்பட்ட மனதிருப்தி, கோடி ரூபாய் கிடைத்தாலும் வராது. அடுத்த உயிர்கள் மீது அன்பு செலுத்திய போது, உருவான அற்புதமான அனுபவத்தை அன்று தான், உணர்ந்தேன். இந்த அனுபவத்திற்கு பின், குழந்தைகள், பெண்கள், முதியோர் என, சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த, 1,000த்திற்கும் மேற்பட்டவர்களை, அரசு மற்றும் தனியார் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்த மொழியிலேயே பக்குவமாக பேசி, குளிப்பாட்டி, தலை முடியை வாரிவிட்டு, ஆடைகளை அணிவித்து, சாப்பிட வைத்த பின்னரே அங்கு சேர்ப்பேன். சேர்த்த பின்னும், அவர்கள் எப்படி இருக்கின்றனர் என, தொடர்ந்து பார்த்து வருகிறேன். மற்றவர்களுடன் இணைந்து, ஒரு தொண்டு நிறுவனமாகவோ, தனியார் அமைப்பாகவோ இல்லாமல், தனியொரு மனிதனாகவே கடந்த, 18 ஆண்டுகளாக, இச்சேவையை செய்து வருகிறேன். இச்சேவையை செய்யும் போது, ஒரு சில நேரங்களில், வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆகும்; இருந்தாலும், என் மனைவி சலித்துக் கொள்ளாமல், என்னை ஊக்கப்படுத்துவாள்.
தொடர்புக்கு: 93801 85561

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக