இந்திய அரசின் அகங்காரமான திமிர்: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலட்சக்கணக்ககான ஈழத் தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள
இராணுவத்தினருக்கு மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே, அதிலும்
தமிழ்நாட்டிலேயே பயிற்சி கொடுத்த இந்திய அரசு, கடந்த மே 27 ஆம் தேதி முதல்
குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை
இராணுவத்தின் விங் கமாண்டர் தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிச்சந்திராவுக்கும்
பயிற்சி கொடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் நாங்கள் பயிற்சி கொடுப்பதில்லை என்று தஞ்சையில் இந்திய
இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அறிவித்தது, தமிழக மக்களை எப்படி
வேண்டுமானாலும் வஞ்சிக்கலாம், ஏமாற்றலாம் என்ற ஆணவத்தின் பிரதிபலிப்பாகும்.
தமிழக முதலமைச்சர் அவர்கள், சிங்கள இராணுவத்தினரை உடனே வெளியேற்ற வேண்டும்
என்று இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். குன்னூர் வெலிங்டன்
பயிற்சிக் கல்லூரியை அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும்
முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின. ஆனாலும் மத்திய அரசு, சிங்கள
இராணுவத்தினரை வெளியேற்றவில்லை.
மத்திய அரசின் இந்த மமதைப் போக்கு தமிழக மக்களின் மான உணர்ச்சிக்கும்,
சுயமரியாதைக்கும் விடப்பட்டுள்ள சவால் ஆகும்.இந்த மண்ணில் தான்
மொழிப்போரில் இந்திய இராணுவத்தினரின் துப்பாக்கிகளையே தமிழ் இளைஞர்கள்
எதிர்கொண்டனர் என்பதும், ஈழத் தமிழர்களைக் காக்க முத்துக்குமார் உள்ளிட்ட19
வீரத் தமிழ் இளைஞர்கள் மரணத் தீயை அணைத்துக் கொண்டனர் என்பதும்
தமிழகத்தின் வீர வரலாறு ஆகும். ஆனாலும் இதனை எல்லாம் துச்சமாகக் கருதி
தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக துரோகம் இழைத்து வினை விதைத்து வரும்
மத்திய காங்கிரஸ் அரசு, அதற்குரிய வினையை அறுவடை செய்யும் காலம் வந்தே
தீரும்.
சிங்கள இராணுவத்தினரை வெளியேற்ற 18 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணி
அளவில் முற்றுகையிட குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியை
முற்றுகையிட பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வு அமைப்புகளும் முடிவு
செய்து அறிவித்துள்ளன.இந்த அறப்போரில் நீலகிரி, கோவை மாநகர், கோவை புறநகர்
மாவட்டங்களைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச்
செயலாளர்களும், கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும், ஈழத் தமிழர் உரிமை
காக்கும் உணர்வாளர்களும், வணிகப் பெருமக்களும், மாணவர்களும் பெருமளவில்
பங்கேற்க வேண்டுமென கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக