மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய்!
வெற்றிலைச் சாகுபடியில்,
மாதந்தோறும் ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும், இசக்கிராஜ்:
நான், திருநெல்வேலி, ஆய்க்குடி கிராமத்தைச் சேர்ந்தவன். தமிழர்களின்
வாழ்வில் பின்னிப் பிணைந்து, சுப காரியங்களுக்குப் பயன்படும் வெற்றிலை, ஒரு
பணப்பயிராகும். இதிலுள்ள, "சவிக்கால்' எனும், நோய் எதிர்ப்புத் திறன்
கொண்ட வேதிப் பொருள், மருத்துவத்திற்குப் பயன்படுகிறது.
இலைக்காகப்
பயிரிடப்படும் இது, கொடியாக வளரும் தன்மை கொண்டது. இதில் சிறு பூக்களும்,
ஒரே ஒரு விதையுடைய சிறு பழமும் இருக்கும். கரும்பச்சை நிறத்தில் இருப்பதை,
ஆண் வெற்றிலை எனவும், இளம் பச்சை நிறத்தில் இருப்பதை, பெண் வெற்றிலை எனவும்
அழைப்பர். 30 மாத பயிரான வெற்றிலைக்கு, விதை எதுவும் தேவையில்லை. ஓராண்டு
வயதுடைய கொடியில்இருந்து காம்புகளை வெட்டி, பதியன் போட்டே பயிர் செய்யலாம்.
ஒரு கொடிக்கு, மூன்று கணுக்கள் உள்ள காம்பு தேவைப்படும். ஏக்கருக்கு, 120
கொடிகள் வரை நடலாம். ஈரப்பாங் கான மண்ணும், மிதமான தட்பவெப்பமும் உள்ள
இடத்திலேயே, நன்கு வளரும். நேரடியான வெளிச்சத்தை, வெற்றிலை தாங்காது
என்பதால், நடவு செய்வதற்கு ஒரு மாதம் முன்பே, பாத்திகள் மற்றும்
வாய்க்கால்கள் அமைத்து, ஒரு பாத்தியில், 2 வரிசைகளாக அகத்திக் கீரையை
வளர்த்து, நிழலான சூழ்நிலை தரலாம். அடுத்தடுத்த பாத்தியில் உள்ள அகத்திக்
கீரை செடிகளை கோர்த்துக் கட்டி, மேலே சவுக்கு அல்லது அகத்தி கம்பு மூலம்,
முட்டுக் கொடுத்து, வெற்றிலை கொடி அதன் மேல் படர, அவ்வப்போது, கோரை கட்ட
வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை, தண்ணீர் பாய்ச்சினால் போதும். நடவு
செய்த, ஆறாம் மாதத்தில் இருந்து, மாதம் ஒரு முறை, அறுவடை செய்யலாம். நூறு
வெற்றிலைகள், ஒரு கவுளியாகவும், 104 கவுளி, ஒரு சுமையாகவும்
கணக்கிடப்படும். ஏலம் மற்றும் எடை மூலம், சந்தைப்படுத்தப்படும் வெற்றிலை,
ஒரு கவுளி, 40 ரூபாய் வரையிலும், ஒரு சுமை, 2,000 ரூபாய் வரையிலும்
விற்கலாம். ஏக்கருக்கு குறைந்தது, ஐந்து சுமை மகசூல் பெற்றால் கூட,
எப்படியும் மாதத்திற்கு, 10 ஆயிரம் வருமானம் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக