ஞாயிறு, 16 ஜூன், 2013

மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்




வருத்தமான வரலாற்று ப் பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்

சேலம் மாவட்டம் மேட்டூரில், காவிரி ஆற்றின் மீது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பத்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு கருங்கல்லும், சுண்ணாம்பும், நேர்மையும், உண்மையும் கலந்து 1934ல் கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணையானது, கட்டி முடிக்கப்பட்டபோது ஆசியாவிலேயே உயரமான அணையாகவும், உலகிலேயே பெரியநீர்தேக்கமாகவும் விளங்கியது.


அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் போது 59 மைலுக்கு பரந்து விரிந்து கடல் போல தண்ணீர் காட்சியளிக்கும். நாள்தோறும் மின்சாரம் எடுக்கப்படும். அணையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் இருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோயில், இரட்டை கோபுர தேவாலயம் எல்லாம் தண்ணீரில் முழ்கியிருக்கும். எங்கும் சசந்தோஷம் பொங்கியிருக்கும்.


ஆனால் இப்போது நிலமையே வேறு, கடும் வறட்சி காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கடுமையாக குறைந்து காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் சில நாள் நீடித்தால் சென்னை உள்ளிட்ட 11 மாவட்ட மக்களின் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளது. 16 கண் மதகு அருகே தண்ணீருக்கு பதில் காய்ந்த செடிகளும், கொடிகளும், கற்களும், குப்பைகளும் கிடக்கின்றன. மின்சாரம் எடுப்பதற்காக தண்ணீர் செல்லும் சுரங்கம் வறண்டு காணப்படுகிறது. இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் வற்றிப்போய், வறண்ட வெடிப்புகளுக்கு மத்தியில் நந்தியும், தேவாலயத்தின் இரட்டை கோபுரமும் சோகக்கதை சொல்லியடி வேதனையோடு நிற்கின்றது.


பல லட்சம் ஏக்கர் டெல்டா விவசாயிகள் இந்த அணைநீரை நம்பித்தான் இருக்கிறார்கள், பிழைக்கிறார்கள்.


அணையில் 120 அடி தண்ணீர் தேங்கி நின்றால் 9,347 கோடி கனஅடி தண்ணீர் நமக்கு கிடைக்கும்


மேட்டூர் அணையானது மழை நீரையும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளது. இந்த இரண்டுமே பொய்த்துப்போன நிலையில் தற்போது அணையின் நிலமை கண்ணீரை வரவழைக்கிறது.
விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தி பல நாட்களாகிவிட்டது. அணையின் மீன் வளத்தை பாதுகாக்கவும், 11 மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் அணையில் குறைந்த பட்சம் ஐந்து டிஎம்சி அதாவது 20 அடி தண்ணீரை தேக்கிவைத்திருக்க வேண்டும். ஆனால் குடிநீருக்காக நாள்தோறும் 600 கனஅடி திறந்துவிடப்படுவதால் நீர் மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. கட்டாய இருப்பு தண்ணீரில் இருந்தே கைவைக்கவேண்டிய அபாய நிலை, ஆனால் வேறு வழியும் இல்லை. இந்த நிலையில் இரண்டு நாள் கர்நாடாகவில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் பெருகி வந்தது, ஆஹா! தண்ணீர் வருகிறது என சந்தோஷப்படுவதற்குள் அந்த தண்ணீரும் நின்று நிலமை பழையபடி மோசமாகிவிட்டது.
எத்தனையோ பேரை காப்பாற்ற போகும் இந்த அணை வேண்டும் என்பதற்காக பல கிராமத்தினர் தங்களது வீடுகள், நிலங்களை எல்லாம் விட்டுக்கொடுத்தனர். அணையில் நீர் பெருக, பெருக வீடுகள், நிலங்கள் மட்டுமின்றி பல கோயில்களும் கூட நீரில் முழ்கியது.
அந்த கோயில்களை எல்லாம் இந்த தலைமுறை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை, அவ்வப்போது நந்தி சிலையும், சர்ச்சின் இரட்டை கோபுரத்தையும் மட்டும் எப்போதாவது பார்த்து வருவார்கள்.
இந்த நிலையில் முதல் முறையாக தண்ணீரில் முழ்கியிருக்கும் வீரபத்திரன் கோயில் தற்போது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. மேட்டூரில் இருந்து கொளத்தூர் வரை போய் பின் அங்கிருந்து அணைக்குள் பத்து கிலோமீட்டர் தூரம் ரிஸ்க் எடுத்து பயணம் செய்தால் இந்த கோயிலை இப்போது பார்க்கலாம். எப்போதும் தண்ணீரில் முழ்கியிருக்கும் இந்த கோயிலின் பக்கத்தில் கோடிப்பாடி கிராமம் உள்ளது. ஆனால் இந்த கிராம மக்களே இந்த கோயிலை பார்த்ததாக நினைவில் இல்லை என்கின்றனர், மிகவும் வயதான பெரியவர்கள் மட்டுமே ஆமாம் இது வீரபத்திரன் கோயில், அருமையான பெருமையான கோயிலாகும், இங்கு மண்டபம், கிணறு எல்லாம் இருந்தது என்கின்றனர்.
மேட்டூரைச் சேர்ந்த ஏ.கோபிக்கு அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் போதெல்லாம் மனசும் சந்தோஷத்தில் நிரம்பியிருக்கும், அணை வறண்டுவிட்டால் இவரது மனசும் வறண்டு விடும், ஆனாலும் வறண்ட வரலாறையும் பதிவு செய்யவேண்டும் என்பதற்காக வீரபத்திரன் கோயிலுக்கு சென்று படம் எடுத்து திரும்பியுள்ளார். அவரது படங்கள் முதன் முதலாக நமது பொக்கிஷம் பகுதியில்தான் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோபியுடன் தொடர்பு கொள்ள: 9566997483.
எல்.முருகராசு

Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக