திங்கள், 17 ஜூன், 2013

சத்தியமங்கலம் வனப்பகுதியில் அரிய வகைக் கழுகுகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் அரிய வகை க் கழுகுகள்
ஈரோடு:அழிவுப்பட்டியலில் உள்ள, மூன்று வகை க் கழுகுகள், சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ளது தெரியவந்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையில், 1. 41 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், சத்தியமங்கலம் வனப்பகுதி உள்ளது. இங்கு, 1,250க்கும் மேற்பட்ட யானைகள், 28க்கும் மேற்பட்ட புலிகள், மான்கள், கரடிகள், சிறுத்தைகள் என பல விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், சருகு மான், புள்ளி மான், சாம்பார் மான், குரைக்கும் மான், எலி மான், கட மான் ஆகிய இனங்கள் இங்குதான் வசிக்கின்றன. இங்குள்ள, ஈரோடு மண்டல வனப்பகுதியில், அரிய வகை கழுகுகள் உள்ளதாக, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இருந்தன. தற்போது, 328 இனங்களே உள்ளன. பிணங்களை தின்று, சுகாதார துப்புரவாளர்களாக விளங்கிய பல பறவைகள், இன்று அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

இந்தியாவில், ஒன்பது வகை கழுகு இனங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும், நான்கு வகைகள் இருந்தன. தமிழகத்தில் விற்பனையாகி வந்த, கால்நடை வலி நிவாரணியான, டைக்ளோபீனாக் என்ற மருந்து, கழுகுகளுக்கு எமனாக வந்தது.எனவே, டைக்ளோபீனாக் மருந்துக்கு, தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மாயாறு, மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகளில், எகிப்தியன் கழுகுகள், வெண்தலை கழுகுகள், செந்தலை கழுகுகள் ஆகியவை உள்ளதாக, பறவையியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.சத்தி வனப்பகுதியிலும், எகிப்தியன் கழுகுகள், வெண்தலை கழுகுகள், செந்தலை கழுகுகள் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. கழுகுகளின் நடமாட்டத்தை, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக