வியாழன், 20 ஜூன், 2013

உலக ஏதிலியர் நாள்

சொந்த நாட்டின் அகதிகள் : -இன்று உலக அகதிகள் தினம்

உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பு போன்றவற்றால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள், அகதிகளாக உருவெடுக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டு, அச்சுறுத்தலில் வாழ்ந்துவரும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 20ம் தேதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக:


2011ம் ஆண்டு கணக்கின் படி, உலகளவில் 1 கோடியே 52 லட்சம் பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என, யூ.என்.எச்.ஆர்.சி., ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டவர்கள் பலர். இவ்வாறு அகதிகளாக உள்ளவர்களுக்கு, அந்தந்த நாடுகள் சிறப்பு திட்டங்கள் மூலம், மறுவாழ்வு அளிக்க வேண்டும். அகதிகள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என யூ.என்.எச்.ஆர்.சி., வலியுறுத்துகிறது.

முகவரி தொலைத்த முகங்கள் :


பிறந்து வளர்ந்த தேசத்தை விட்டு, பஞ்சத்தில் அடிபட்டு, தஞ்சம் அடைய இடம் தேடி, அகதிகள் என்ற முத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அவலம். முகாம்களில், முகம் தெரியாமல், முகவரி தொலைத்து ஏங்கி தவிக்கும் உள்ளங்கள். வேற்று நாட்டவர்கள் என்ற கட்டுப்பாட்டில், திறந்த வெளியில் கைதிகளாக சிறைப்படுத்தப்படும் கொடுமை. துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்ததால் நிம்மதி இழந்த இவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் அல்ல; நலம் நாடி வந்தவர்கள். வன்முறையால் விரட்டப்பட்டவர்கள். போரில் உயிர் பிழைத்து, சொந்த நாட்டில் இருண்ட வாழ்க்கை வாழ்ந்து, அகதியாய் வந்த நாட்டிலும் உரிமைகள் இல்லை. என்றாவது ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையில் இவர்களது வாழ்க்கை, காலத்தின் போக்கில் கரைந்து கொண்டிருக்கிறது...

ஒர் அகதியின் உரிமைக் குரல்...:


நான் 17 வயதில், இலங்கையில் இருந்து அகதியாக நாடு விட்டு நாடு வந்தேன். அன்று முதல், இன்று 40 வயது வரை, மனிதர்களோடு மனிதர்களாக இல்லாமல் ஆதரவின்றி தனித்து, அகதிகளாக தான் நிற்கிறோம். "அகதி' என்று எங்களை யாரும் மதிப்பதில்லை. அரசு ரேஷன் கார்டுகள் கொடுத்துள்ளது. இருந்தும் எங்கள் பெயரில் சொந்தமாக வாகனங்கள்,சொத்துக்கள் வாங்கவும், வங்கி கணக்கு தொடங்கவும், ஆதாரத்திற்காக இந்த ரேஷன் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. முகாம்களை விட்டு வெளியே, வேலைக்கு செல்லவும் அனுமதியில்லை. பிள்ளைகள் படித்தாலும் அரசு வேலையும் இல்லை. அரசு வழங்கும் உதவி தொகையை மட்டுமே வைத்து, தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. ஓட்டுரிமை இல்லை. எனவே குடியுரிமை வழங்கி, இந் நாட்டவர்களாக ஏற்றுக் கொள்ள, எங்களுக்காக யாரும் உரிமைக்குரல் எழுப்புவது இல்லை. நாங்கள் வசிக்கும் இந்த நாடு நிரந்தரமல்ல; அகதிகள் என்ற வார்த்தை மட்டுமே நிரந்தரமாக இருக்கிறது. இந்நாட்டு குடிமக்கள் போல நாங்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். இல்லையேல், எங்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். இப்படி உணர்ச்சி போராட்டத்தில், காலம் காலமாக, அடிப்படை உரிமைகளுக்காக, இவர்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் "அகத்தீ' யை அணைப்பது யாரோ...? இன்று(ஜூன்20) உலக அகதிகள் தினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக