ஞாயிறு, 16 ஜூன், 2013

மன்னர் திருமலை நாயக்கர் கொடுத்த செப்புப் பட்டயம்

திருமலை நாயக்கர் கொடுத்த செப்புப் பட்டயம்!






மதுரையைத் தலைநகராகக் கொண்டு திருமலைநாயக்கர் ஆட்சி செய்யத் தொடங்கிய பின்பு, மதுரைக் கோயில் நிர்வாகங்களைச் சீர்திருத்தி, எஞ்சியிருந்த அம்மன் கோயில் திருப்பணிகளை நிறைவு செய்தார். விசுவநாத நாயக்கர் காலத்தில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் அமைச்சராகக் கோயில் பணிகளைச் சீர்திருத்தியபோது, வெகு காலமாக திருமுறைப்பணி நின்றுபோயிருந்ததைப் புதுப்பிக்க எண்ணி, திருவாரூர் கமலை ஞானப்பிரகாசருக்கு ஓலை அனுப்பினார்.
கமலை ஞானப்பிரகாசர் தன் தங்கை சிவகாமி அம்மாள் மகன், அலங்கார ஓதுவாரை, அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்கி, மதுரைக் கோயில் பணிக்கு அனுப்பி வைத்தார். அலங்கார ஓதுவார், மகன் ஆனந்த ஓதுவார், கனகசபாபதி ஓதுவார், வீதிவிடங்க ஓதுவார் குமாரன் தாண்டவமூர்த்தி ஓதுவார் ஆகியோர் காலத்தில், அவ்வப்போது ஊதியமாக அரச பண்டாரத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வந்தது. திருமலை நாயக்கர் காலத்தில் வாழ்ந்த தாண்டவமூர்த்தி ஓதுவார் விண்ணப்பித்துக் கொண்டபடி, தனியாக ஒரு கிராமத்தையே ஓதுவார் பணிக்கு, செப்புப் பட்டயம் மூலமாக "தான சாசனம்' செய்து ஊதியம் பெறவைத்தார். அக்கிராமம் இன்றும் திருப்பூவணத்துக்குப் பக்கத்தில் "ஓதுவார் செங்குளம்' என்ற பெயரில் வழங்கி வருகிறது.
செப்புப்பட்டயச் செய்தி:
இச்செப்புப் பட்டயம், திருமலை நாயக்க மன்னரால் வழங்கப்பட்டது. தற்சமயம் ஓதுவார் மற்றும் ஆஸ்தானப் புலவராக என் தலைமுறையில் இருந்து வரும், என்னிடம் இச்செப்புப் பட்டயம் உள்ளது. இச்செப்புப் பட்டயத்தின் பிரதியை 1963-ஆம் ஆண்டு குடமுழக்கு மலரில் வெளியிட்டுள்ளேன். இச் செப்புப்பட்டயத்தின் தொடக்கத்தில் திரிசூலம் காணப்படுகிறது. அவ்வாறு சூலக்குறி இருந்தால், அது சிவாலயத்துக்கு விடப்பட்டுள்ளதைக் குறிக்கும். முன் பகுதியில் விஜயநகர வேந்தரின் பாரம்பரியம் சொல்லப்படுகிறது. அதன் பின்பு அவ்வேந்தரின் பிரதிநிதியாக மதுரையை ஆண்ட நாயக்க மன்னரின் பாரம்பரிய வரிசை பேசப்படுகிறது.
பட்டய விளக்கம்:
இப்பட்டயம் கூறுகின்ற செய்தியில் கூறப்படுகின்ற ஓதுவார் செங்குளம், என் தந்தைமாற் (தாண்டவமூர்த்தி ஓதுவார்) காலம் வரை அனுபவத்தில் இருந்து தற்சமயம் 1950-ஆம் ஆண்டு அரசு கொண்டு வந்த ஜமீன் இனாம் ஒழிப்பில், அக்கிராமம் எங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டது. அதற்குரிய நஷ்ட ஈட்டுத் தொகை தேவஸ்தானம் கையில் வரப்பெற்று அத்தொகையின் வட்டி மட்டும் பெற்று இன்றும் தொடர்ந்து திருமுறைப்பணி செய்யப்பட்டு வருகிறது.
இராஜராஜன் காலத்தில் திருமுறை ஓதுவார்க்கு மானியம் தந்து ஆதரித்தைக் கல்வெட்டு கூறுவதற்கு முன்பே, பல்லவரும் பாண்டியரும் திருமுறை ஓதுவார்களை ஆதரித்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆனால், பட்டயம் எதுவும் கிட்டவில்லை. திருமலைநாயக்கர் கொடுத்த செப்புப் பட்டயம் ஒன்றுதான் இன்று வரலாற்றுத் துறைக்குப் பயன்படுவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக