புதன், 19 ஜூன், 2013

மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்தும் ஏமாற்றம்

மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்தும் ஏமாற்றமடைந்த திருத்தங்கல் மாணவி
சிவகாசி: விளையாட்டுப்பிரிவின் கீழ், மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்தும், கடைசி நேரத்தில் சேரமுடியாமல், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் மாணவி ஏமாற்றம் அடைந்துள்ளார்
திருத்தங்கல் மாணவி நித்ய லட்சுமி, பிளஸ் 2 தேர்வில் 810 மார்க் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர், பாட்னா, ஒடிசாவில் நடந்த தேசிய "டென்னிகாய்ட்' போட்டியில், 2 தங்கப்பதக்கமும், கேரளாவில் நடந்த போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றவர். விளையாட்டுப் பிரிவின் கீழ், மருத்துவ படிப்பில் சேர, 3 இடங்களை அண்ணா பல்கலை ஒதுக்கியுள்ளது. நித்ய லட்சுமி, விளையாட்டு பிரிவிற்கான மதிப்பீட்டில் 590 மார்க் பெற்று, 2 வது இடம் பெற்றார். இவருக்கு மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க வரும்படி, எஸ்.எம்.எஸ்., மூலம் அழைப்பு வந்தது. கடந்த 17ம்தேதி சென்னையில் நடந்த கலந்தாய்வில், பங்கேற்ற நித்யலட்சுமிக்கு, திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 12 ஆயிரத்து 290 ரூபாய் மற்றும் 500 ரூபாய்க்கு, இரு வங்கி டி.டி., செலுத்தும்படி, அதிகாரிகள் கூறினர். இதற்கான ஆணையை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது. விளையாட்டு பிரிவில் ஒதுக்கீடு பெற்ற மாணவி நித்யலட்சுமி குறித்த செய்தி, நாளிதழில்களில் வெளியானது. இதனிடையே, மாணவி நித்யலட்சுமியை சந்தித்த, அண்ணா பல்கலை அதிகாரி ஒருவர்,""மருத்துவ படிப்பில் சேர, வேதியியல் பாடத்தில், 60 சதவீத மார்க் இருக்க வேண்டும். ஒரு சதவீத மார்க் குறைவாக இருப்பதால், மருத்துவ படிப்பில் சேர முடியாது,'' என, கடைசி நேரத்தில் தெரிவித்துள்ளார். இத் தகவலை கேட்ட மாணவி நிலைகுலைந்தார். 

மாணவியின் தந்தை மோகன் கூறுகையில், "" என் மகளுக்கு திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்து, பணம் செலுத்தும்படி கூறினர். கடைசியில், ஒருசதவீத மார்க் குறைவு என, அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், மகளின் எதிர்காலம் பாதிக்கிறது. ஏழை குடும்பத்தை சேர்ந்த என்னால், பல லட்சம் செலவு செய்து, தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க வைக்க இயலாது.
பொறியியல் படிப்பில் 15வது இடத்தில் இருந்தார். பொறியியல் படிக்க, நல்ல கல்லூரியை தேர்வு செய்யும் வாய்ப்பையும் இழந்து விட்டோம். இனி,யாரை சந்தித்து முறையிடுவது என தெரியவில்லை,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக