வெள்ளி, 21 ஜூன், 2013

பெண்களும் வணிகம் புரியலாம்!

பெண்களும் வணிகம் புரியலாம்!

சிறுவயதிலேயே பிசினஸ் மீதான ஆர்வத்தால், தென்னை நார் ஏற்றுமதி தொழிலில் வெற்றி பெற்ற, நேருமதி: நான், பட்டுக்கோட்டையை சேர்ந்தவள். பிளஸ் 2 வரை மட்டுமே படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே ஒரு, "பிசினஸ் பெண்மணி'யாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வம் திருமணம் முடிந்த பின்னும் குறையவில்லை. ஒரு முறை பேருந்தில் சென்ற போது, வழியில், தேங் காய் நார் உதிர்க்கப்பட்ட தூளை, காயவைத்து கொண்டிருந்தனர். இதில், என்ன தொழில் செய்வர் என்ற ஆர்வத்தால், மறுநாள் அதே இடத்திற்கு சென்றேன். அத்தூளை செங்கல் வடிவத்திற்கு மாற்றி வெளி நாடுகளுக்கு, "எக்ஸ்போர்ட்' செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற தகவல் கிடைத்தது. உடனே, அந்த முதலாளி வீட்டிற்கு சென்று, அத்தொழில் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டேன். கணவர் உதவியுடன், நார் துண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கினேன். தேங்காய் மட்டையை உடைத்து, கயிறு திரிப்பதற்கான நாரை எடுத்த பிறகு கிடைக்கும் தூளை, இயந்திரத்தில் கொட்டி நன்கு, "பிரஷர்' கொடுத்து அழுத்தினால், செங்கல் துண்டுகள் போன்ற வடிவத்தில் கிடைக்கும். ஒவ்வொரு துண்டும், 5 கிலோ எடை இருக்கும். விவசாய நிலத்தில், இந்த துண்டுகளை உதிர்த்து போட்டு தண்ணீர் பாய்ச்சினால், ஒரு துண்டு, 80 முதல், 90 லிட்டர் நீரை உறிஞ்சி, தன்னுள் வைத்துக் கொள்ளும். இதனால் செடிகளுக்கு, ஆறு மாதத்திற்கு தண்ணீரே தேவைப்படாது. இத்துண்டுகளை, வெளிநாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்கிறோம். மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடை காலத்தில், மாதத்திற்கு, ஒரு லட்சம் வரை சம்பாதிக்க முடியும். மழை காலங்களில், சிறு தொய்வு இருக்கும். நார் தயாரிப்பிற்கான அனைத்து வேலைகளையும், பெண்களே செய்கிறோம்; கடந்த, 10 ஆண்டுகளாக இத்தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக