செருமனியில் தமிழ்ச் சுவடி!
செருமனியில், தமிழ் ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து பாதுகாத்து வரும், பேராசிரியர் உல்ரீகே நிகோலஸ்: நான், ஜெர்மனியின், கொலோன் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறேன். ஆரம்பத்தில், தமிழர்களின் பூர்வீக அறிவும், தொல்காப்பியம் போன்ற சங்ககால இலக்கிய, இலக்கணங்களும், வாய்மொழியாகத் தான், பரம்பரை பரம்பரையாக பகிரப் பட்டன.
பிற்காலத்தில் தான், பண்டைய தமிழர்களின் பூர்வீக அறிவு, ஓலைச் சுவடிகளில் பதியப்பட்டது. எழுதுவதற்கான ஓலைச் சுவடிகளை தயாரிப்பது, மிகக் கடினமாக இருந்ததால், ஓலைச் சுவடிகளில் வார்த்தைகள், வரிகள், வாக்கியங்கள், பத்திகள் என, எங்கும், கொஞ்சம் கூட, இடம் விடாமல் எழுதினர்.
உலகின் பல்வேறு முக்கிய நூலகங்களில் இருக்கும் தமிழ் ஓலைச் சுவடிகள், எந்தெந்த நூலகங்களில் உள்ளன என்ற அட்டவணையை, எங்கள் பல்கலைக் கழகம் தயாரித்துள்ளது. அது போல், ஜெர்மனியில் உள்ள, ஆசிய ஓலைச் சுவடிகளின் அட்டவணையை தயாரிக்கும் திட்டத்தின் கீழ், எல்லா தமிழ் ஓலைச் சுவடிகளின் அட்டவணையையும், எங்கள் பல்கலைக் கழகம் தயாரிக்கிறது.இவற்றில், பெரும்பாலும் இலக்கிய நூல்களே உள்ளன. அறிவியல் சம்பந்தப்பட்ட சுவடிகள், வான சாஸ்திரம், காமசாஸ்திரம், மருத்துவம், தத்துவம் முதலிய சுவடிகளும் கிடைத்துள்ளன. மருத்துவத்தில், பெரும்பாலும் சித்த மருத்துவ சுவடிகளும், சில நாட்டு வைத்திய சுவடிகளும், தத்துவத்தில் தமிழ் சைவ சித்தாந்தம் பற்றியும் கிடைத்துள்ளன.
கணக்கு வகை ஓலைச் சுவடிகளும் கிடைத்துள்ளன. அதிகபட்சமாக, தமிழகத்தின் செட்டிநாட்டு பகுதியில் எழுதப்பட்ட, வியாபாரக் கணக்குகளும், வீட்டுக் கணக்குகளும், தனிச் சிறப்புடைய கோவில் கணக்குகளும், காது குத்து, கல்யாணம் போன்ற, வீட்டுச் சடங்குகளுக்கான கணக்குகள் கூட, ஓலைச் சுவடிகளாக உள்ளன.தென்னிந்திய தட்ப வெப்ப நிலை காரண மாக, 300 ஆண்டுகளுக்கு மேல், சுவடிகள் நீடிக்காது என்ற காரணத்தால் தான், உ.வே சாமிநாதய்யர், ஓலைச் சுவடிகளை தேடிச் சேகரித்து, பிரதி எடுத்து பாதுகாத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக