வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இந்து என்றால் திருடன்: கருணாநிதி விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவு

ஒரு சொல் காலமாற்றத்தில் மேம்பட்ட பொருளையோ கீழான பொருளையோ அடைவதே  உலக மொழிகளின் இயற்கை. தாசி என்றால் தொண்டு புரியும் பெண்ணைக்குறித்து, அடுத்துப் பணிமகளைக் குறித்தது. இன்று விலை மகளைக் குறிக்கிறது. இன்று, பழம் பொருள் அடிப்படையில் ஒருவர், தன் வீட்டுப்  பணிப்பெண்ணைத் தாசி என்று கூறிவிட முடியாது. இந்து என்பதற்குக் கரி, கரடி, சந்திரன் ; கருப்பூரமரம் ; மிருகசீரிடம் ; இந்துப்பு ; சிந்துநதி ; இந்து மதத்தான், கௌரி பாடாணம் ; எட்டி  எனப் பல பொருள்கள் இன்றும் உள்ளன. ஆனால், இந்து என்ற பெயர்க்காரணம் திருடன் என்ற பொருளில் வந்ததாகவே பழம் நூல்கள் கூறுகின்றன. கழக வெளியீட்டின் வினா-விடை நூல் ஒன்றிலும் அவ்வாறுதான் குறிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று உண்மையைக் கலைஞர் சொல்லியிருந்தால் தப்பில்லை. ஆனால், இதன் அடிப்படையில் இந்துக்கள் அனைவரும் திருடர்கள் என்று சொல்லியிருந்தால் குற்றம்தான். இந்துக்களிடையே வாழ்ந்து கொண்டு அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார் என எண்ணுகிறேன்..

இந்து என்றால் திருடன் என்று இழிவாகப் பேசிய கருணாநிதி 4 நாட்களுக்குள் விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவு

இந்து என்றால் திருடன் என்று இந்துக்களை இழிவாகப் பேசிய திமுக தலைவர் இன்னும் 4 நாட்களுக்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு தனிப்பட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் வேத அறிவியல் மையத்தின் சார்பில் பி.ஆர்.கௌதமன் ஒரு மனுவை தாக்கல் செய்தார். கடந்த 24.10.2002 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்து என்றால் திருடன் என்று கருணாநிதி பேசியிருந்தார். இது இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் படி இருக்கிறது என்று, இதற்கு தகுந்த நடவடிக்கை கோரி மறுநாள் 25.10.2002 அன்று மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மேலும், இது குறித்து மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, உயர் நீதிமன்ற உத்தரவின் படி 6.1.2006இல் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரின் அடிப்படையில் அவரை அழைத்து விசாரிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ காவல் துறையினர் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
எனவே உயர்நீதிமன்ற உத்தரவின்படி பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரின் படி கருணாநிதியிடம் விளக்கம் கேட்கவும், அவர் மீதான விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தனது மறு மனுவில் கௌதமன் கூறியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது இன்று காவல் துறைக்கு (காவல்துறை ஆணையர், மாம்பலம் காவல் துறை ஆய்வாளர் ஆகியோருக்கும்)நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கருணாநிதிக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கலாம் என்றும் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான அடுத்த விசாரணையை வரும் செவ்வாய்க் கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால், வரும் 4 நாட்களுக்குள் கருணாநிதி உரிய விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக