புதன், 17 ஏப்ரல், 2013

இசையமைப்பாளர் இராமமூர்த்தி மறைவு

டி.கே.இராமமூர்த்தி மறைவுக்கு முதல்வர் இரங்கல்

பழம்பெரும் திரை இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர்களில் ஒருவருமான டி.கே. ராமமூர்த்தி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து சொல்லொணாத் துயரமும், மிகுந்த மன வருத்தமும் அடைந்தேன்.
மிகச் சிறந்த வயலின் கலைஞரான ராமமூர்த்தி, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள மொழிப் படங்களில் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து முடிசூடா மன்னனாக விளங்கியவர். தனியாகவும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.  அவ்வாறு அவர் தனியாக இசையமைத்த “நான்” திரைப்படத்தில் வரும் “அம்மனோ சாமியோ” என்ற பாடல் மிகவும் பிரபலமாகி மக்களின் வரவேற்பை பெற்றது.  அதில் நான் நடித்ததை வாழ்நாளில் மறக்க முடியாது.
இவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் பசுமையாக நிலைத்து நிற்கின்றன. எம்.ஜி.ஆர். நடித்த “பணம் படைத்தவன்” திரைப்படத்தில் “கண்போன போக்கிலே கால் போகலாமா” என்ற பாடலில் வரும் வயலின் இசைக்குச் சொந்தக்காரர் டி.கே. ராமமூர்த்தி.  “புதிய பறவை” படத்தில் இவரது பங்களிப்பில் உருவான “எங்கே நிம்மதி” என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.  தமிழ் திரைப்பட இசையில் இவர் ஆற்றிய பணி மகத்தானது.
டி.கே.ராமமூர்த்தியின் மறைவு தமிழ்த் திரைப்படத் துறையினருக்கும், இசைத் துறையினருக்கும் மட்டுமல்லாமல் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
- என்று கூறியுள்ளார்.


டி.கே. இராமமூர்த்தி மரணம்: கருணாநிதி இரங்கல்
 
டி.கே.ராமமூர்த்தி மரணம்: கருணாநிதி இரங்கல்
சென்னை, ஏப். 17-

இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

மெல்லிசை மன்னர்கள், இரட்டையர்கள் என்று தமிழ்த் திரைப்பட உலகில் நீண்ட பல ஆண்டுக்காலமாக முத்திரை பதித்தவர்களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி மறைந்து விட்ட செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

60 ஆண்டுக் கால நட்பு எனக்கும் அவருக்கும் உண்டு. ‘மறக்க முடியுமா’ திரைப்படத்திற்கு நான் எழுதிய ‘காகித ஓடம்’ என்று தொடங்கும் பாடலுக்கு அவர் இசை அமைத்த நாட்கள் எல்லாம் என் நினைவுக்கு வருகிறது.

திரைப்பட உலகில் பல இரட்டையர்கள் உண்டு. இசையமைப்பாளர்களில் தமிழில் ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாகப் புகழ்க்கொடி நாட்டிய அந்த இரட்டையர்களில் ஒருவர் மறைந்து விட்டது தமிழ்த் திரைப்பட உலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், எம்.எஸ்.விசுவநாதனுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக