திங்கள், 15 ஏப்ரல், 2013

வெற்றி நடைபோடும் யூலைமாத வட- அமெரிக்க மகாநாடு --- கலாநிதி இராம் சிவலிங்கம்

வெற்றி நடைபோடும் யூலைமாத 
வட- அமெரிக்க மகாநாடு
--- கலாநிதி இராம் சிவலிங்கம்

ஒற்றுமையும் எம்மவர்க்குச் சத்தியசோதனையா? என் எண்ண வேண்டிய வேளையிலே, தமிழருக்கான ஓர் மாநாட்டை வருடா வருடம் யூலை மாதத்தில் அமெரிக்காவின் மூன்று நாள் விடுமுறை நாள்களில் பிரமாண்டமான முறையில்  நடாத்தும் "பெற்னா" எனும் வட அமெரிக்கத் தமிழர் பேரவை,  இவ்வருடம் இந்த மகாநாட்டை யூலை மாதம் 5, 6 ,7 ஆம்  நாள்களில் கனடா நாட்டின் ரொறந்தோ நகரிலே நடாத்த ஏற்பாடுகள் செய்துவரும் வேளை, கரும்புலிகள் நாளான யூலை 5 இல் எந்தவொரு நிகழ்வும் நடைபெறுவது தப்பானது என்ற மக்களவையின தலமையிலான பதினொரு அமைப்புக்களின் நியாயமான எதிர்ப்பு உருவானது.

உலகத் தமிழரைக், குறிப்பாக வட அமெரிக்கத் தமிழரை சென்ற சில நாட்களாக குழப்பத்தில் ஆழ்த்திய இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியாதது  என்றார்கள் சிலர். அமைதிப்பாடு என்ற சொல் எம் அகராதியில் இல்லை என்றார்கள் பிரிவினை வாதிகள்.  இவை எல்லாவற்றையும் தாண்டி ஓர் அமைதிப்பாடு வந்ததென்றால் அது எம் இனத்துக்குக் கிடைத்த வெறியாகவே நாம் கருதவேண்டும். அதைப் பெற்றுத் தந்த பெருமை எல்லாம் மக்களவை அணியினரையும், பெற்னாவையுமே சாரும்.

மகாநாட்டின் முதல் நாளான  யூலை 5 ஆம்  நாளைக் கரும்புலிகள் நாளாக, பெற்னாவால் ஒழுங்கு செய்யப்பட்ட அதே மண்டபத்தில்,  நடத்துவதாகவும், அதனை மக்களவை அணியினர் நடாத்துவார்கள் எனவும், யூலை 6, 7 ஆம் நாள்களில் நடைபெறும் மகாநாட்டை பெற்னா  நடாத்தும் எனவும், இந்த் மகாநாட்டிற்கு மக்களவை அணியினர் தமது ஒத்துழைப்பையும்,  ஆதரவையும், நல்குவார்கள் எனவும் எடுத்த முடிவே  இந்த அமைதிப்பாட்டின் சாராம்சமாகும். 

ஒருவர் தோற்றால்தான் மற்றவருக்கு வெற்றியென எண்ணும் காலத்தில், இருதரப்பினருக்கும் வெற்றியைத் தரும் விதத்தில் இந்த முடிவு அமைந்தது கண்டு இருசாராரையும் மெச்சுகிறேன்,  பாராட்டுகிறேன்.  பரந்த மனமும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், அதிலும் மேலாகத், தமிழர் எவருமே தோற்கக்க்கூடாது என்ற பாசம் மிக்க உறவுமே இந்த இருசாராரின் வெற்றிக்கான காரணங்களாகும்.

இந்த வெற்றி நிறைந்த அமைதிப்பாடு, உலகெலாம் வாழும் எம் உறவுகளுக்கு ஓர் புத்துணர்வையும், புதிய தெம்பையும் தரவேண்டும்.  பன்னாட்டு அளவில்  எம் இனத்தின் தேவைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல முயலும், ஆனால் இயலாமையால் தடுமாறி செயல் இழ்ந்து நிற்கும்,, புலம்பெயர் தலமைகளுக்கு இந்த வெற்றி  ஒரு தேர்வில்லாப் பாடமாக அமைய வேண்டும்.

கலாநிதி இராம் சிவலிங்கம்
sivalingham@synpatico.ca

1 கருத்து:

  1. மிக்க நன்றி அய்யா. ஒற்றுமையாக உழைத்து நாம் முன்னேறுவோம். இழந்தவைகளை மீட்டெடுப்போம்.

    பதிலளிநீக்கு