புதன், 17 ஏப்ரல், 2013

முள் இல்லா மூங்கில்!
முள் இல்லா மூங்கில்!

வழுவழுப்பான, முற்கள் இல்லாத மூங்கிலைக் கண்டுபிடித்த விவசாய விஞ்ஞானி, பாரதி: நான், ஓசூரைச் சேர்ந்தவன். 15 ஆண்டுகளுக்கு முன், குரோமோர் பயோடெக் எனும் திசுவளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி, கரும்பு, வாழை, சவுக்கு, பூச்செடிகள் போன்றவற்றில், நல்ல மகசூல் தரும் புது ரகங்களை கண்டுபிடித்து, விவசாயிகளுக்கு கொடுத்து வந்தேன். இதுவரை, 60 வகையான புதுரக நாற்றுகளை, திசு வளர்ப்பு முறையில் உருவாக்கியுள்ளேன்.தொடர்ந்து, 10 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, முள் இல்லாத பீமா என்ற, புதுரக மூங்கிலை கண்டுபிடித்தேன். இது, வீடுகள் கட்டவும், பர்னிச்சர்கள் செய்யவும், ஊதுபத்திக் குச்சிகள் தயாரிக்கவும், இதில் உள்ள பஞ்சு மூலம் ஆடை நெய்யவும் பயன்படுவதால், இதற்கான சந்தை வாய்ப்புகள் அதிகம்.இவ்வகை மூங்கில், ஒரு ஏக்கருக்கு, 40 முதல், 50 டன் வரை விளைச்சல் தருவதோடு, முள் இல்லாமல், வழுவழுப்பாக இருக்கும். மற்ற ரகங்கள் ஏக்கருக்கு, 200 கன்றுகளை மட்டுமே நட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே வெட்டி விற்க முடியும். ஆனால், பீமாவில் ஏக்கருக்கு, 1,000 கன்றுகள் வரை நட்டு, இரண்டு ஆண்டுகளிலேயே மூங்கிலை வெட்டி, லாபத்தை ஈட்டலாம்.கிருஷ்ணகிரி விவசாயிகள் மூலம், 500 ஏக்கரில் மூங்கில் தோட்டம் அமைத்து மின்சாரம் தயாரிக்க, தமிழக தோட்டக்கலைத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. 1 கிலோ மூங்கிலில் இருந்து, 1 யூனிட் மின்சாரம் கிடைக்கும். வெட்ட வெட்ட வளர்ந்தபடி இருப்பதால், ஒரு முறை நட்டு வைத்தாலே போதும், 150 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து பலன் தருவதால், ஒவ் வொரு ஆண்டும், 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.இயற்கை சீற்றத்தால் வாழை மற்றும் தென்னை மரங்களைப் போல், பீமா ரக மூங்கில்கள் பாதிப்படைவதில்லை. சாதாரண மூங்கிலில் பூ வந்து விட்டால், அந்த மரம் செத்துவிடும். ஆனால், பீமாவில் பூ வந்தும், அழியாமல் இருக்கும். முள்ளில்லா மூங்கில் கன்றுகளை, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக