செவ்வாய், 25 டிசம்பர், 2012

நிலை உயரும்போது பணிந்து நடக்க வேண்டும்: அறவாணன்

மனிதர்கள் நிலை உயரும்போது பணிந்து நடக்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் அறவாணன் பேச்சு

குறிச்சி: " வாழ்வின் நிலை உயரும்போது, மற்றவர்களிடம் பணிந்து நடக்க வேண்டும்,'' என, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் அறவாணன் பேசினார். கோவை, ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலையில், "ஆர்' அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகத்தின், எட்டாவது பன்னாட்டு கருத்தரங்கு, நேற்று முன்தினம் துவங்கியது. "உலகத் தர ஆராய்ச்சியை நோக்கி' எனும் தலைப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் அறவாணன் பேசியதாவது: சர்வதேச அளவில், ஒரு ஆண்டில், ஒருவர், 2,000 பக்கங்களை படிக்கிறார், நம் நாட்டில், 30 பக்கங்களை மட்டுமே படிக்கும் பழக்கம் உள்ளது. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, நம் மாநிலத்தில், வாசிப்போரின் எண்ணிக்கை மிக, மிக குறைவாக உள்ளது. கேரள மாநிலம், படித்தவர்களின் எண்ணிக்கையை அதிகளவு கொண்டுள்ளது. அங்கு சுகாதாரத்திலும் முதலிடத்தில் உள்ளனர். கொசுத் தொல்லை, பிரசவத்தின் போது பெண்கள் இறப்பது போன்றவையும் அங்கு குறைவு. இதற்கு முக்கிய காரணம், படிப்பறிவே. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் நிலை உயரும்போது, மற்றவர்களிடம் பணிந்து நடக்க வேண்டும். சர்வதேச அளவில், சிறந்த நூறு பேர் பட்டியலை, மைக்கேல் ஆர்ட் என்பவர் வெளியிட்டபோது, நம் தேசத்தின், தந்தை மகாத்மா காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "ஒருவரது கருத்துகளை பின்பற்றுவோர், அதனால் சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்பு, எத்தனை பேர் அவரது கருத்தை மேற்கோள் காட்டுகின்றனர் உள்ளிட்டவைகளை கருத்தில்கொண்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், காந்தியின் அகிம்சை கொள்கையை, அவரது நாட்டினரே பின்பற்றவில்லை. அதனால் தான் அவர் பெயர் இடம் பெறவில்லை' என, பதிலளித்தார்.
அதுபோல நாம், நல்ல கருத்துகளை பின்பற்றாமல் விட்டு விடுகிறோம். சமூகத்தில் பெண்களை முன்னிலைப்படுத்த வேண்டும். நம் நாட்டில், வலது கை பழக்கம் காணப்படுவதற்கு, பெண்களே முக்கிய காரணம். எவ்வாறு எனில், குழந்தை பிறந்தவுடன், தன் பணிகளை, வலது கையால் தான் பெண்கள் மேற்கொள்வர். அதற்கேற்ப, குழந்தையை, தன் இடது புறத்தில், இதயத்தின் அருகே தூக்கி வைத்துக் கொள்வர். குழந்தைக்கு, வெதுவெதுப்பான வெப்பமும் கிடைக்கும். இத்தகையை சூழலே பிற்காலத்தில், வலது கை பழக்கத்தை ஏற்படுத்துகிறது. வர்ணாஸ்ரம தர்மத்தின்படி, க்ஷத்ரியர்களுக்கு போர் புரியவும்; சூத்திரர்களுக்கு விவசாயமும்; பிராமணர்களுக்கு வேதங்கள் முழங்கவும், பணிகள் ஒதுக்கப்பட்டன. இதனால் நமக்கு, கல்வி என்பது, இல்லாத ஒன்றாகி விட்டது. அக்காலத்தில், கோட்டைகள் கட்டியதை விட, கோவில்கள் அதிகளவு கட்டப்பட்டன. 1567ம் ஆண்டு, தூத்துக்குடியில், புன்னைகோவில் எனும் இடத்தில், ஹென்ரிக் என்ற பாதிரியாரால், முதன் முதலில் பள்ளிக்கூடம் துவக்கப்பட்டது. அதுவரை, பள்ளிகளே கிடையாது. பண்டைய காலத்தில், ராணுவ பயிற்சி கட்டாயமாக இருந்தது. தற்போது, அம்முறை கிடையாது. ஆனால், மற்ற நாடுகளில், நடைமுறையில் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஜப்பானுக்கு அடுத்து, சிங்கப்பூர், வளர்ந்த நாடாக உள்ளது. நம் ஆராய்ச்சிகள், மேம்பாட்டுக்கு துணையாக இருக்குமாறு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, முன்னாள் துணைவேந்தர் அறவாணன் பேசினார்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக