ஞாயிறு, 23 டிசம்பர், 2012

உருவப்படக்கலையின் தந்தை




ஒரு புகைப்படக்கலைஞரை பெருமைப்படுத்துவதற்காக கனடா நாடு அவரது நூற்றாண்டின் போது சிறப்பு தபால் தலை வெளியிட்டு கவுரவித்தது.யார் அந்த புகைப்படக்கலைஞர்.
உலகின் தலை சிறந்த நூறு மனிதர்களைப் பற்றி தொகுத்து அவர்களைப் பற்றிய புத்தகம் ஒன்று வெளியானது, அந்த நூறு பேரில் 51 பேரின் புகைப்படங்களை எடுத்தவர் ஒரே ஓரு புகைப்படக் கலைஞர்தான்.

யார் அந்த புகைப்படக்கலைஞர்.
நீங்கள் என்னை புகைப்படம் எடுக்க வந்தது எனது அதிர்ஷ்டமே, புகைப்பட பதிவு முடிந்த பிறகு என்னுடைய விருந்தினராக இருந்து என்னுடன் கட்டாயம் உணவருந்தவேண்டும் என்று பிடரல் காஸ்ட்ரோ ஒரு புகைப்படக்கலைஞரை பாராட்டி சிறப்பு செய்தார்.

யார் அந்த புகைப்படக்கலைஞர்.
கோபக்காரரான வின்ஸ்டர் சர்ச்சிலின் உண்மையான முகத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, அவர் புகைத்துக் கொண்டிருந்த சுருட்டை பிடுங்கும் அளவு தைரியமாக செயல்பட்ட புகைப்படக்கலைஞர் ஒருவர் உண்டு

யார் அந்த புகைப்படக்கலைஞர்
தனது வாழ்நாளில் 15 ஆயிரத்து 312 புகழ்பெற்ற நபர்களை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நெகடிவ்களில் பதிவு செய்த, யூசுப் ஹர்ஷ் என்பவர்தான் மேலே சொன்ன அத்தனை பெருமைக்கும் உரிய மாபெரும் போர்ட்ரெய்ட் புகைப்படக்கலைஞர்.

ஒவ்வொரு மனித முகத்தின் பின்னாலும் அளவிடமுடியாத ஆர்வமும், சக்தியும் கொட்டிக் கிடக்கிறது, அந்த உண்மையான தன்மையை, முகத்தை கொண்டுவருவதுதான் எனது வேலை என்பார் இவர்.
இன்றைய துருக்கியான அன்றைய ஒட்டோமனில் 1908 ம் ஆண்டு பிறந்த யூசுப்ஹர்ஷ் பசி, பட்டினியோடுதான் வளர்ந்தார். பஞ்சம் பிழைக்க கனடாவிற்கு பதிமூன்று வயதில் குடும்பத்தாருடன் இடம் பெயர்ந்தார், தன்னுடைய மாமாவின் போட்டோ ஸ்டூடியோவில் வேலை பார்த்துக்கொண்டே படித்தார். மருத்துவம் படிக்க விரும்பினார், ஆனால் பொருளாதார சூழ்நிலை அதற்கு தடைவிதிக்கவே முழு நேர புகைப்படக்கலைஞரானார்.

1931ல் சொந்தமாக ஸ்டூடியோ துவங்கி அதில் எடுத்த படங்களைக் கொண்டு ஒரு கண்காட்சி நடத்தினார். நல்ல வரவேற்பு கிடைத்தது. கனடாவின் பிரதமரை படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமருக்கு அந்த படம் பிடித்துப் போகவே, பிரதமர் அலுவலக போட்டோகிராபராகவும் இருந்து அங்கு வந்த பல்வேறு நாட்டு தலைவர்களை படம் பிடித்தார். இவரது படங்களில் படமாக்கப்படுபவரின் கண்கள், புருவம், கை போன்றவை தனித்தன்மையுடன் காணப்படும். இவரது கேமிராவில் படம் பிடிக்கப்பட்டோர் பட்டியலில் ஓவிய மேதை பிகாசோ, மதர் தெரசா, நேரு, இந்திராகாந்தி, ஐன்ஸ்டீன் ஆகியோரும் உண்டு.
1941ல் இவர் எடுத்த வின்ஸ்டன் சர்ச்சிலின் புகைப்படத்தால் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. ஒரு காலகட்டத்தில் இவரது கேமிரா முன் உட்கார்ந்து படம் எடுத்துக் கொள்ள அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பெரும் அரசியல்வாதிகள், நடிகர்கள், செல்வந்தர்கள் ஆசைப்பட்டார்கள், அதற்காக தேதி கேட்டு காத்துக்கிடந்தார்கள்.

உலகில் உள்ள அதிக பிரபலங்களை படம் எடுத்த ஒரே புகைப்படக்கலைஞர் என்ற புகழுடன் திகழ்ந்தவர், 1990ம் ஆண்டு தனது 93வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இறப்பதற்கு முன் தான் எடுத்த மூன்றரை லட்சம் நெகடிவ்களையும் கனடாவின் தேசிய ஆவண காப்பகத்திற்கு வழங்கினார். இன்றும் அங்கு அவை பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
யூசுப் புகைப்படம் தொடர்பாக இதுவரை 15 புத்தகங்கள் எழுதியுள்ளார், இவரைப் பற்றி 11 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. இவரது புகைப்படக்கலையை பலர் இன்றும் ஆய்வு செய்து வருகின்றனர், நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் இவரது வரலாறைச் சுமந்தபடி வலம் வருகின்றது. பூத உடம்பு மறைந்திருக்கலாம், ஆனால் இன்றும் மங்காத, மறையாத புகழுடன் போர்ட்ரெய்ட் புகைப்படக்கலையின் தந்தையாக உலா வருகிறார் யூசுப் ஹர்ஷ்.

குறிப்பு: யூசுப் ஹர்ஷ் எடுத்த சில முக்கிய போர்ட்ரெய்ட் படங்களை பார்க்க போட்டோ கேலரியை கிளிக் செய்யவும்.
- எல்.முருகராசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக