புதன், 26 டிசம்பர், 2012

3 அ.கோ.(கி.மீ.) தொலைவிலேயே தொலைந்த சுற்றுச்சூழல்

மூன்று கி.மீ., தூரத்திற்குள் தொலைந்த சுற்றுச்சூழல் : மதுரை மாணவர்கள் ஆய்வு

மதுரை: "மூன்று கி.மீ., தூரத்திற்குள் தொலைந்த சுற்றுச்சூழல், விவசாயம்'குறித்து, மதுரைக் கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வு சர்வதேச அளவில் சிறந்தவற்றுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

விப்ரோ நிறுவனம் நடத்திய "எர்த் என் 2012' சர்வதேசப் போட்டிக்கு, பள்ளி, கல்லூரிகளில் இருந்து 1200 ஆய்வுகள் அனுப்பப்பட்டன. சிறந்த 40 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இத்திட்டத்தை தயாரித்த உதவிப்பேராசிரியர் பாலகிருஷ்ணன், மாணவர்கள் ஆறுமுகதாஸ், ஆனந்தசீனிவாசன், நாகராமிகா, அனுஸ்ரீ கூறியதாவது: சிறப்பு படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறியியல் மாணவர்கள். நகரமயமாதலில் ஏற்படும் விளைவுகள், தண்ணீர் பற்றாக்குறை, தட்ப வெப்பநிலை மாற்றம், பல்லுயிர் பரவல் தலைப்புகளில் ஒன்றைப் பற்றி திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். ஆனால், நான்கு தலைப்புகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி, அறிக்கை தயாரித்தோம். இதற்காக மதுரை நாகமலை-துவரிமான் மூன்று கி.மீ., நெடுஞ்சாலையை ஆய்வு செய்தோம். 200 மீட்டர் அகலம், மூன்று கி.மீ., தூரத்திற்கு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன. ஆண்டுக்கு 3200 நெல்மூடைகளை இழந்துள்ளோம். அங்கிருந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான ஏழு கிணறுகளை மூடியதால், 65 ஏக்கரில் விவசாயம் நின்றது. விளைநிலங்கள் மனைகளாக மாறின. 20 ஆண்டுகளாக இருந்த 15 மரங்கள் வெட்டப்பட்டன. இதன் மூலம் பசுமையின் பரப்பும், ஆக்ஸிஜன் அளவும் குறைந்தது. நிறைய இடங்களில் நெடுஞ்சாலையுடன் கிராமத்து குறுக்குத் தெருக்கள் இணைகின்றன. சாதாரண ரோடுகளைப் போல, கிராமத்தினர், கால்நடைகள் கடப்பதால், உயிரிழப்பு ஏற்படுகிறது. மூன்று கி.மீ.,தூரத்திற்குள், சுற்றுச்சூழலில் இவ்வளவு பிரச்னைகளை தெரிய முடிந்தது. காஷ்மீர்-கன்னியாகுமரி வரை, எத்தனை ஆயிரம் கி.மீட்டரில் விளைநிலங்கள், மரங்கள் அழிந்திருக்கும். இதை விளக்குவதே நோக்கம். ஆய்வு செய்த தூரத்திற்கு, மரக்கன்றுகள் வழங்கினால், நடத் தயாராக இருக்கிறோம். மீண்டும் பசுமையை ஏற்படுத்த வேண்டும். விளைநிலங்களை மனைநிலங்களாக மாற்றக்கூடாதென, துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம், என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக