பிருந்தாவன விதவைகள்
பிருந்தாவனம் என்ற உடனே கோபிகா ஸ்திரீகளுடன் கண்ணன்
புரிந்த லீலைகள், கண்ணை நிறைக்கும் பசுக் கூட்டங்கள், பாலும் வெண்ணையும்
வீடுகளெங்கும் நிறைந்து கிடக்கும் வளமை, தோட்டம், துறவு, பூக்கள் என்று
பச்சை பசேல் காட்சிகள் நம் மனக்கண் முன் நடமாடும். மதுராவின் இன்றைய
பிருந்தாவன விதவைகள் வாழ்க்கையே இதற்கு ஓர் உதாரணம்.
உடன் கட்டை ஏறுதல், அடுப்பூதவே வைத்து அடிமைப்படுத்துதல், சொத்துரிமை
மறுப்பு, வரதட்சணைக் கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இப்போது
குறைந்துள்ளது போலத் தோன்றினாலும், ஆங்காங்கே நடக்கிற கொடுமைகள் உண்மையின்
வேறொரு கோணத்தைக் காட்டுகின்றன.
சுமார் இருநூறு வருடங்களுக்கும் மேலாக மத்திய பிரதேசம் மதுராவில் உள்ள
பிருந்தாவனத்தில் விதவைப் பெண்கள், குறிப்பாக வயதானவர்கள், அனாதைகளாக
சுற்றுப்புற ஊர்களிலிருந்து விடப்படுகின்றனர். இதில் பெரும்பாலான
விதவைகள்மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், ஒடிசா இந்த மாநிலங்களைச்
சேர்ந்தவர்கள்.எழுதப் படிக்கத் தெரியாத அப்பாவிகள். பகலில் அவர்கள்,
அவர்களுக்கு உணவிடும் ஆஷ்ரமம் சென்று கீர்த்தனைகள் பாட வேண்டும். ஒரு பஜன்
கூட்டம் நான்கு மணி நேரம் நடக்கும். அது மாதிரி மூன்று வேளையும் பாட
வேண்டும். சில ரூபாய்கள் பணமும் ஒருவேளை சப்பாத்தியும் கிடைக்கும். அதுவும்
இரவில் அங்கே தங்க அனுமதியில்லை. இரவில் ஆண்கள் பஜனை நடக்கும் என்பதால்
இவர்கள் வெளியேறிவிட வேண்டும். இது போதாது என்பதால் இந்த விதவைகளில் பலர்
பிச்சை எடுத்துப் பிழைக்கிறார்கள். இரவில் ஏதோ ஒரு கழிவறை, தண்ணீர் வசதி
சரியாக இல்லாத அறைகள் என்னும் பெயரில் உள்ள பொந்துகளில் கூட்டம் கூட்டமாகத்
தங்கி,பூச்சிகள், கிருமிகள், கொசுக்களிடையே உறங்குகிறார்கள்.
பெரும்பாலானவர்களுக்கு சரும வியாதி போன்ற பல தொத்து வியாதிகளும்
பரவியுள்ளது.
டாக்டர் மோகினி கிரி (மறைந்த ஜனாதிபதி வி வி கிரியின் புதல்வி) 40
வருடங்களாக இப்பிரச்னை தொடர்பாக தம்மால் முடிந்ததைச் செய்வதாக
பேசப்படுகிறது. 16,000அநாதை விதவைகள் இருக்கும் பிருந்தாவனத்தில் இவருடைய
"மா தாம்'
200 விதவைகளைத் தத்து எடுத்து பராமரித்து வருகிறது. பெண்கள் நல தேசியக்
கமிஷன் தலைவியாக இவர் இருந்தும் நிலைமையில் பெரிய மாற்றம் இல்லை என்பது
கண்கூடு. பிருந்தாவன் விதவைகள் பற்றிச் சில அறிக்கைகள் இது வெளியிட்டது.
தேசிய சட்ட ஆலோசனைகள் அத்தாரிட்டி இன்னும் கொஞ்சம் ஆழமாக இப்பிரச்னையை
அணுகியது. அது வெளியிட்ட ஒரு செய்தி தான் உச்சநீதிமன்றத்தை ஒரு உலுக்கு
உலுக்கியிருக்கிறது.
அதாவது வயதான விதவைகள் பிருந்தாவனத்தில் இறந்த பிறகு அவர்கள் உடலைத்
தகனம் செய்ய வசதி இல்லை என்ற காரணம் சொல்லி அவர்கள் உடலைத் துண்டு துண்டாக
வெட்டி கோணிப்பையில் திணித்து வெளியே எரிந்து விடுகிறார்கள் என்ற சட்ட
ஆலோசனை அதாரிட்டிச் செய்தி தான் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குப் போனது.
உ.பி. மாநில அதிகாரம் மற்றும் மதுரா நகர் நிர்வாகத்தை இதற்குப் பதில்
சொல்லும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு அவர்கள் மெத்தனத்தைச் சாடியிருக்கிறது.
உடனடியாக வாரா வாரம் அவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு
செய்யுமாறும் அவர்களின் இறுதிக் காரியங்கள் கண்ணியமாக நடத்தப் பட
வேண்டுமென்றும் அவர்களுக்கு நல்ல உணவு, இருப்பிடம், சுத்தமான கழிவறை போன்ற
வசதிகள் செய்து தரப்பட வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறது. உச்ச நீதி
மன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழு இவர்களின்
பரிதாபமான நிலையை நேரில் ஆய்வு செய்து பல்வேறு உண்மைகளைச்
சொல்லியுள்ளது.எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது மாதிரி இந்த அபலைகளுக்கு
கொடுக்கப்படுகிற கொஞ்ச நஞ்ச உதவிகளும் பல இடை ஆசாமிகளாலும் அரசு, அரசு
சாரா அமைப்புகளாலும் பறிக்கப்படுகின்றன. ஒரே பெண்ணை மூன்று நான்கு
விடுதிகளில் காட்டி உதவிப்பணத்தைக் கபளீகரம் செய்யவே பலரும்
துடிக்கிறார்கள் என்பது போன்ற வருத்தம் தரும் செய்திகள் அடங்கியது
இவ்வறிக்கை.
ஆனால் ஆங்காங்கே உண்மையாகத் தொண்டு செய்யும் அமைப்புகளும் இருக்கத்தான்
செய்கின்றன. அவை உடனடியாக நிவாரணப் பணிகளில் குதித்துள்ளன. ஐநஓஇஞச
எனப்படும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் ஏற்கனவே சில வருடங்களாக
அங்கே சேவை செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் சுகாதாரமான கழிவறை
இயக்கம் நடத்தும் சுலப் இன்டர்நேஷனல் அவசர மருத்துவத்திற்கு 5 ஆம்புலன்ஸ்
வண்டிகளை வழங்கியுள்ளது. மருத்துவ உதவி, தொலைக் காட்சிப் பெட்டி,
மருந்துகளைப் பாதுகாக்க குளிர் சாதனப் பெட்டி போன்றவையும்
வழங்கப்பட்டுள்ளன. மாநில அரசு ஏற்று நடத்தும் 5 அநாதை விடுதிகளில்
தங்கியிருக்கும் விதவைகள் ஒவ்வொருவருக்கும் சுலப் இயக்கம் மாதம் 1000ரூபாய்
அளிக்கிறார்கள். இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்யவும் ஏற்பாடு
செய்கிறார்கள்.ஆரோக்கியமாகவும் ஆர்வமாகவும் இருக்கிற விதவைகளுக்குச் சிறு
தொழில்களிலும் பயிற்சி கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். ஏற்கெனவே எல்லா ஆக்க
பூர்வமான வேலைகளும் செய்யப்படுவதைக் கண்காணிக்க ஒரு குழுமம்
ஏற்படுத்தப்படவேண்டும் என்று உத்தரவாகியிருக்கிறது. நாங்களே பல சேவைகளையும்
செய்கிறோம் என்றாலும் மத்திய, மாநில அரசு உதவியையும் கோரியிருக்கிறோம்
என்கிறார் சுலப் அமைப்பின் தலைவர் டாக்டர் பாதக்.ஏழு வருடங்களுக்கு முன்பு
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளால் தொடங்கப்பட்ட "மைத்ரி' என்கிற அரசு சாரா
அமைப்பு முதலில் ராணுவத்தினருக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும்
உயிர்க்கொல்லி நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு கொடுத்து வந்தது. ஐந்து
வருடங்களாக பிருந்தாவன விதவைகள் மறுமலர்ச்சிக்கும் அது பாடுபட்டு வருகிறது.
அவர்களுக்குரிய அரசு உதவித்தொகை அவர்களைச் சேருகிறதா என்று உறுதி
செய்வதுடன் அவர்களுக்குரிய ஏழைகள் ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை
ஆகியவற்றையும் வாங்க உதவுகிறது. பிருந்தாவனத்தில் 150 விதவைகளுக்கென்று ஓர்
ஆஸ்ரமம் கட்டவும் அது முனைந்திருக்கிறது.
உ.பி. அரசும் மதுரா நிர்வாகமும் பாராமுகம் காட்டி வந்த இந்த விஷயம்
பிரபல வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே
கவனத்திற்குப் போயிருக்கிறது. மதுராவிற்கு நேரில் வந்து அவர் பலரிடம்
பேசியும் வீடியோ எடுத்தும் போயிருக்கிறார். அதன் பயனாக ஒரு டிரஸ்ட்டும்
உருவாகி பண உதவி கிட்டியிருக்கிறது. நடிகர் அமீர்கான் தன் தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் இது குறித்து அலசியிருக்கிறார்.
வ்ருந்தாவன விதவைகளைக் கண்டு மனம் கலங்கினேன். அப்போது எழுதிய பதிவின் சுட்டி இது. நேரம் இருக்கும்போது பாருங்க:(
பதிலளிநீக்குhttp://thulasidhalam.blogspot.co.nz/2010/12/blog-post_08.html
நன்றி. அவலத்தை நல்ல வகையில் எடுத்துக் கூறும் நீங்கள் நல்ல தமிழில் எழுதலாமே!
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிடும் வட்டா என்பது கிண்ணத்தை க் குறிக்கும் வட்டை என்னும் சொல்லில் இருந்து வந்தது.