ஞாயிறு, 23 டிசம்பர், 2012

பாரதி, இராமானுசத்தை மாணவர்கள் நேசிக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை

பாரதி, இராமானுசத்தை மாணவர்கள் நேசிக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை பேச்சு




பாரதியார், கணித மேதை ராமானுஜம் ஆகியோரை மாணவ, மாணவிகள் நேசிக்க வேண்டும் என்று இஸ்ரோ நிறுவனத்தின் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற ராமானுஜனின் 125-வது பிறந்த தின விழாவில் அவர் பேசியது:
பாரதியை விட பாரதி பற்றிய பாடல்களையும், காந்தியை விட காந்தியத்தையும், ராமானுஜத்தைவிட அவரது கணிதத்தையும், பெரியாரைவிட பகுத்தறிவையும் படிக்க வேண்டும். வரலாறு என்பது படிப்பதற்காக மட்டும் அல்ல. அதை படிப்பவர்கள் தங்களது வாழ்விலும் வரலாறு படைக்க வேண்டும். 
கணிதம் என்பது கசப்பானது அல்ல. வார்த்தைகளை கவிதைகளாக்குவது போல எண்களை கவிதைகளாக மாற்றத் தெரிந்தால் கணித மேதை ஆகலாம். எண்களின் கவிஞராக இருந்தவர் ராமானுஜம். 
கணிதத்தின் காதலன் ராமானுஜம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது காதல் வரும். ராமானுஜத்துக்கு கணிதம் மீது காதல் வந்தது. ஒன்றின் மதிப்புக்கு பின்பு பூஜ்ஜியத்தை போட்டால் ஒன்றின் மதிப்பு அதிகமாகும்.
எண்ணும், எழுத்தும் நன்கு தெரிந்தால்தான் கல்வியில் முன்னேற முடியும். எண்ணுக்கு ராமானுஜரும், எழுத்துக்கு பாரதியும் தலைவராக இருந்து வருகின்றனர். எனவே, ராமானுஜத்தையும், பாரதியையும் மாணவ, மாணவிகள் நேசிக்க வேண்டும். எண்ணும், எழுத்தும் உள்ளவரை ராமானுஜமும், பாரதியும் வாழ்வார்கள்.
குறைந்த ஆண்டுகளே வாழ்ந்த இருவரது தனிப்பட்ட வாழ்வில் பல சோதனைகள் இருந்தன. ஆனால், அதையெல்லாம் மீறி இருவரும் சாதனை படைத்தனர். எனவே இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும் என்றார்.
விழாவையொட்டி ஈரோட்டின் கணித முன்னோடிகளான ஏ.பி.நாடார், யு.எஸ்.லட்சுமி நாராயணன், கே.வி.சுப்பிரமணியன் ஆகியோரின் திருவுருவப்படங்களை திருவுருவப்படங்களை மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் திறந்துவைத்தார். ராமானுஜம் கைப்பட எழுதி அச்சிடப்பட்ட அரிய கணித நூல்கள், அறிவியல் நூல்கள் அடங்கிய சிறப்பு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இங்கு வைக்கப்பட்டிருந்த ராமானுஜனின் சிலையை  மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டன். விழாவில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், செயலர் க.நா.பாலன், செயற்குழு உறுப்பின் டி.ராஜன உள்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக