ஞாயிறு, 23 டிசம்பர், 2012

கடவுளாகவே கண்ணுக்குத் தெரிபவர்கள்!

கடவுளாகவே கண்ணுக்குத் தெரிபவர்கள்!













இவர்கள் படிக்க உதவுபவர் கார்த்திகா இராசுகுமார்.அவரின் இயற்பெயர் எல்.எச்.ராஜ்குமார். அவர் ஊட்டியின் ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே கார்த்திகா ராஜ்குமார் என்கிற பெயரில் கதைகள், குறு நாவல்களை சாவி,குங்குமம் போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தவர், இவரின் "அவன் அவர்கள் அது' நாவல் மிகவும் பிரபலம். அவரிடம் பேசினோம்:
""எல்லாரும் எல்லாம் செய்கிறார்கள் நாம் எதாவது வித்தியாசமாய் நாலு பேருக்கு உதவுகிற மாதிரி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். திருமணம் முடிந்து ஒரு பையன், ஒரு பெண் என்று அழகிய குடும்பம். ஆனாலும் என் மனதில் என்னவோ உறுத்திக் கொண்டே இருந்தது. காரணம் ஊட்டியின் இறக்கங்களிலும் ஏற்றங்களிலும் இருக்கும் ஆடாசோலை, காந்தல், பாலாடை போன்ற கிராமங்கள். ஊட்டி டவுனில் இருந்தது அந்த காப்பகம். ஒரு வயதான அம்மையார், முதியவர்களையும், காமுகர்களால் சீரழிக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையினைத் தொலைத்தவர்கள், படிக்க வசதியற்ற சிறுவர்களையும் தன் சொந்த பணத்தில் சிறு அறக் கட்டளை வைத்து பாதுகாத்து வந்தார். ஒரு முறை சர்ச்சில் அவரைப் பார்த்தேன். அவரது பெயர் மார்க்கித் செல்வராசா எனவும் அவர் இலங்கையின் ஊட்டி என அழைக்கப்படும் நுவரேலியாவைச் சேர்ந்தவர் என்றும் தன் சொத்துகளை பெரும் பகுதியை விற்று விட்டு சேவை மனப்பான்மையுடன் ஊட்டிக்கே வந்து விட்டதையும் அறிந்தேன். அவர் கணவருடன் அவரை சந்தித்த போது :  ""அம்மா எனக்கும் ஏதேனும் நல்லதை செய்ய வேண்டும் போல உள்ளது. என்னால் ஆன உடல் உழைப்பைத் தருகிறேன்'' என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே, வரச் சொன்னார். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் இல்லம் இருந்த இடத்திற்குப் போனேன். ஊட்டியில் புகழ்ப் பெற்ற "ஹாண்டட் ஹவுஸ்' எனப் படும் பங்களா ஒன்று ரேஸ்கோர்ஸ் தாண்டி மேட்டுப் பகுதியில் இருந்தது. அந்த பங்களாவையும் அதைச் சுற்றியிருந்த இடத்தையும் வாங்கி அங்குதான் ஆதரவற்ற அனாதைகளுக்கு புகலிடம் கொடுத்திருந்தார். வாரா வாரம் அங்கு சென்ற
நான் சுத்தம் செய்வது, அலுவலக வேலைகளில் அவருக்கு உதவுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தேன்.
எனது பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்ற நிலையில் அந்த அம்மையார் முழு நேரம் பணிபுரிய என்னை அழைத்தார். நான் அவரிடமும் அவரது கணவரிடமும், ""நான் ரொம்பவும் சென்ஸிட்டிவானவன்,யார் தவறு செய்தாலும் எனக்குப் பிடிக்காது. மனதில் பட்டதை சரி தவறு என்று சொல்லி விடுவேன், நீங்களே தவறு செய்தாலும் சொல்லிவிடுவேன்'' என்றேன். ""அதனால் தான் உன்னை கூப்பிடுகிறோம்'' என்றார்கள்.
அவர்கள் அழைப்பின் பேரில் அந்த சிமர்னா ட்ரஸ்டில் நிர்வாகியாக இணந்தேன். இப்பொழுது அந்த அம்மையார் என்னிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஸ்விட்சர்லாந்துக்கு போய் விட்டார். மேனேஜிங் ட்ரஸ்டியாக எனது பள்ளி ஆசிரியரின் மகன் இருக்கிறார். அவர் ( சாம்வேல் பிரபாகர்) ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.
ஊட்டி என்றால் கோடை வாசஸ்தலம் என்பதுதான் எல்லோருக்கும் தெரியும் இங்கும் ஒரு வேலை கஞ்சிக்கு கஷ்டப்படும் குடும்பங்கள் குடிசைப் பகுதிகள் உண்டு. அப்பா இல்லாதவர்கள்,அங்கஹீனம் ஆகி எந்த பணியும் தொடர இயலாதவர், சிங்கிள் பேரண்ட் இவர்களின் குழந்தைகள் எல்லாருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளோம். குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளும் நல்ல கொடையாளர்கள் உள்ளனர். எல்.கே.ஜியில் ஆரம்பித்து கல்லூரிப் படிப்பு வரை உதவுகிறோம். மாதம்  அறுநூற்று ஐம்பது ரூபாய் செலுத்தினால் போதும்.
மூளை வளர்ச்சி குறைவான குழந்தைகள், மற்றும் ஸ்பெஷல் கிட்ஸ் அனைவருக்கும் பள்ளியும் உடற்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது,பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட முதிய வயது பெண்கள். அனாதையாக விடப்பட்ட பெண்கள் இவர்களுக்கு அடைக்கலம் தந்துள்ளோம். உள்ளே பேக்கரி உள்ளது, சமுதாயத்தினால் சீரழிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இல்லம் தரப்படுகிறது.
எங்களது சிமர்னாவில் கணக்குகளை திறந்தப் புத்தகமாகவே வைத்துள்ளோம். யார் வேண்டுமானாலும் வந்து எங்களின் கணக்குகளைப் பார்க்கலாம். மேலும் எங்கள் பகுதியில் வாழும் மக்களே குழந்தைகளை தத்து எடுத்துள்ளார்கள். ஓர் அறக் கட்டளை சரியாக இயங்கவில்லை என்றால் சொந்த பகுதி மக்கள் பார்வையில் இருந்து தப்ப முடியாது.  எங்களின் சிறப்பான சேவையைப் பார்த்து மக்கள் ஆர்வமுடன் உதவுகிறார்கள்.
ஒரு முறை ஒரு முதியவர் சுற்றிப் பார்க்க வந்தார். சாதாரண உடையில் இருந்தார் அவர். எல்லாவற்றையும் பார்த்த அவர், ""நான் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். சிறு தொகை கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?''  என்று தயங்கி தயங்கி கேட்டார். ""பணம் எவ்வளவு கொடுக்கிறீர்கள்? என்பது முக்கியம் இல்லை. உங்களின் மனம்தான் முக்கியம்'' என்று சொன்னேன். அவர் தான் வைத்திருந்த பழைய துணிப் பையில் இருந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்து, ""நன்கொடையா வச்சுக்கங்க'' என்றார். ""நான் என்னால் முடிந்த போதெல்லாம் உதவுகிறேன்'' என்று ரசீது வாங்கிப் போனார்.
சேவை மனப்பான்மை குறைந்து வரும் இந்நாளில் இவரைப் போன்றவர்கள் கடவுளாகவே என் கண்களுக்குத் தெரிகிறார்கள்'' என்கிறார் கார்த்திகா ராஜ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக