திங்கள், 24 டிசம்பர், 2012

அமில வீச்சில் முகத்தை இழந்த இளம் பெண்: உரூ.25 லட்சம் பரிசு வென்றார்

அமில வீச்சில் முகத்தை இழந்த இளம் பெண்: உரூ.25 லட்சம் பரிசு வென்றார்

புதுடில்லி :காதலிக்க மறுத்ததால், மூன்று இளைஞர்களால், "ஆசிட்' வீச்சுக்கு இலக்காகி, முகத்தை பறிகொடுத்த, சோனாலி முகர்ஜி என்ற இளம் பெண், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் பங்கேற்று, 25 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.

தலைநகர் டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட கொடூரம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இது போன்றதொரு, கொடுமையான செயலுக்கு ஆளாக்கப்பட்டவர், சோனாலி முகர்ஜி."ஆசிட்' வீச்சுக்கு ஆளான அவருக்கு முகமே கிடையாது; கருகிய சதை துணுக்குகள் தான் முகத்தில் ஆங்காங்கே உள்ளது. அழகிய முகத்தை இழந்த அந்த பெண், தன் முகத்தையே வெளியே காட்டுவது கிடையாது. ஆனால், அவரை அந்த கொடுமைக்கு ஆளாக்கிய, மூன்று நபர்கள், வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இப்போது இருக்கும் அளவுக்கு, "மீடியா' தாக்கம் இல்லை என்றாலும், அப்போதும் பரபரப்பாக இந்த செய்தி பேசப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின், தன்பாத் நகர கல்லூரி ஒன்றில் படித்து வந்தார், சோனாலி முகர்ஜி. கல்லூரிக்கு செல்லும் வழியில், மூன்று இளைஞர்கள், அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்தனர். வலுக்கட்டாயமாக, காதலிக்க வற்புறுத்தி வந்தனர்; அதை அந்த பெண் மறுத்து வந்தார்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த அந்த கயவர்கள், கனரக இரும்பு பொருட்களில், துரு அகற்ற பயன்படுத்தப்படும், பயங்கரமான, "ஆசிட்'டை, அந்தப் பெண்ணின் முகத்தில் வீசி விட்டு ஓடினர்.இதில், முகம் பூராவும் வெந்து, இரு கண்களும் குருடாகி, ஒரு காது முற்றிலும் கேட்காத நிலையை அடைந்த சோனாலி, அதற்கு பிறகு வெளியே வருவதே இல்லை.

கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள், ஒன்றிரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு பிறகு, வெளியே வந்து விட்டனர். ஆனால், அந்தப் பெண் வீட்டிலேயே முடங்கி விட்டாள். எனினும், தன்னம்பிக்கையை கைவிடாமல், "டிவி'யில், நடிகர், அமிதாப் பச்சன் நடத்தும், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், சமீபத்தில் பங்கேற்றார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து, 25 லட்சம் ரூபாயை வென்றுள்ளார்.

""இந்த பணத்தைக் கொண்டு, என் முகத்தில் உரிந்து வரும் பிளாஸ்டிக் இழைகளை சரி செய்ய முடியும்; சில நாட்களுக்கு நிம்மதியாக சாப்பிட முடியும். எனினும், முகம் இனி கிடைக்கப் போவதில்லை. அதற்காக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், வாழ்க்கை என்னாவது என்ற எண்ணத்தில், போட்டியில் பங்கேற்றேன். என் முகத்தை, "டிவி'யில் காட்டினர். அதுவே, அந்த கயவர்களுக்கு உண்மையான தண்டனையாக இருக்கும்,'' என, சோனாலி கூறினார்.நிகழ்ச்சியின் போது, சோனாலியை, நடிகர் அமிதாப் பச்சன், "வீரமான பொண்ணு' என, பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக