மின்வெட்டு: மாணவர் விவரங்களை இணைய வழி பதிவு செய்வது கடினம்
மின்வெட்டு, கம்ப்யூட்டர் வசதிகள் மற்றும் இன்டர்நெட் இணைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்வது கடினம் என்று தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வு மார்ச் முதல் வாரத்திலும், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் கடைசி வாரத்திலும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்வுக்கான பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
பிளஸ் 2 மாணவர்களின் விவரங்கள் சி.டி.க்கள் மூலம் பெறப்பட்டு, இப்போது தவறுகளை சரிசெய்யும் பணிகள் ஆன்-லைன் மூலமாக நடைபெற்று வருகின்றன. வரும் 30-ம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, பத்தாம் வகுப்பு மாணவர்கள் தொடர்பான விவரங்களைப் பள்ளிகளின் மூலம் ஆன்-லைன் வழியாக ஜனவரி 4-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு காரணமாக பெரும்பாலான தலைமையாசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கிராமப்புறங்களில் பகலில் பெரும்பாலான நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்களும், கம்ப்யூட்டர் ஆசிரியர்களும் இல்லை. எனவே, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ள தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது என்று தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 மாணவர்களின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்வதிலும் பிரச்னைகள் உள்ளதாக தெரிவித்தனர். ஆன்-லைனில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றாலும் இரண்டு திருத்தங்களுக்கு மேல் இதில் செய்யமுடியவில்லை. எனவே, சரியான விவரங்களை வழங்குவதில் பிரச்னை உள்ளதாக தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பைப் பொருத்தவரை இந்த ஆண்டு சுமார் 11 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகள் குக்கிராமங்களிலும், தொலைதூரப் பகுதிகளிலும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பகல் நேரங்களில் பெரும்பாலும் மின்சார வசதி கிடையாது. வெளியில் இன்டர்நெட் சென்டர்கள் மூலமாகத்தான் இவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.
கம்ப்யூட்டர் வசதி, இன்டர்நெட் வசதி என அனைத்தும் இருக்கும் பள்ளிகளில் இன்டர்நெட் இணைப்பு சரியாக இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக தேர்வுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, பள்ளிகளில் ஆன்-லைன் வழியே விவரங்களைப் பதிவு செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர்கள் உள்ளதால் இதில் பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆன்-லைன் வழியாக விவரங்களைப் பதிவு செய்வது நல்ல திட்டம்தான். ஆனால், அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திவிட்டு, போதிய கால அவகாசம் அளித்து இதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். தேர்வுத்துறை குறிப்பிட்டுள்ள தேதிக்குள் விவரங்களைப் பதிவேற்றம் செய்யவே இயலாது என்று கிராமப்புறத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஒருவர் கூறினார்.
இந்தப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:
ஆன்-லைன் திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், அதில் விவரங்களை இந்த ஆண்டு பதிவு செய்வதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர்களும், கம்ப்யூட்டர் ஆசிரியர்களும் இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் நிறைய பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதியோ, இன்டர்நெட் வசதியோ கிடையாது. அப்படியே இருந்தாலும் மின்சாரம் கிடையாது.
எனவே, இதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திவிட்டு, அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் ஆன்-லைன் வழியே விவரங்களைப் பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்யலாம்.
பள்ளிகளில் இருந்து வழங்கும் விவரங்களை சி.டி.க்களில் பதிவு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மாற்று ஏற்பாடாக, இந்த மையங்களில் ஆன்-லைன் வழியில் விவரங்களைப் பதிவு செய்யலாம் என்றார் அவர்.
ஒவ்வொரு மாணவருக்கும் விவரங்களைப் பதிவு செய்ய இன்டர்நெட் மையங்கள் ரூ.10 வரை கேட்பதாகவும் கூறப்படுகிறது. சராசரியாக 50 முதல் 300 மாணவர்கள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அனைத்து மாணவர்களின் விவரங்களையும் பதிவு செய்ய ஆயிரக்கணக்கில் செலவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக